என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏ.ஐ. கேமராக்கள்-டிரோன் மூலம் கண்காணிப்பு
    X

    சபரிமலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏ.ஐ. கேமராக்கள்-டிரோன் மூலம் கண்காணிப்பு

    • இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
    • 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (17-ந்தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இந்த பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. 16-ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இனி பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டி பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த நாட்களில் தரிசனம் செய்ய முடியும். சபரிமலைக்கு மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை சிறப்பாக செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் கூறுகையில், நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய 3 முக்கிய மண்டலங்களிலும் 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    கூட்ட நடமாட்டம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து, மொபைல் பிரிவுகள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருட்டுகளை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிறப்பு திருட்டு எதிர்ப்பு படை மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

    Next Story
    ×