என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 22-ந்தேதியே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்டமாக பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பலா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவணகெரே, ஷிமோகா, சிக்கோடி ஆகிய 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    • கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது.
    • தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், 20 தொகுதிகளிலும் 169 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    பெரும்பாலான தொகுதிகளில் மும்முனைப்போட்டி நிலவிவரும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களத்தில் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது. அதேபோன்று தற்போதைய தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி கேரளாவில் கால் பதிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் பாரதிய ஜனதா சார்பில் பிரபலங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.

    காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட பல்வேறு கட்சி தலைவர்களும் கேரளாவுக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மீண்டும் கேரளாவுக்கு வருகிறார். வருகிற 15-ந்தேதி அட்டிங்கல், ஆலத்தூர், திருச்சூர் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதே தினத்தில் ராகுல் காந்தியும் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் 15-ந்தேதி மாலை கோழிக்கோட்டில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணியில் பங்கேற்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் கேரளாவில் போட்டி பிரசாரம் செய்கின்றனர். இதனால் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மேலும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வர இருக்கின்றனர். கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் வருகிற 16-ந்தேதி கண்ணூரில் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    பாரதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரமோத் சாவந்த், அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கோழிக்கோட்டிலும், புருஷோத்தம் ரூபாலா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆலப்புழாவிலும், மீனாட்சி லேகி வயநாடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளத்திலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திலும் பிரசாரம் செய்கிறார்கள்.

    மேலும் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய கேரளா வருகிறார்கள்.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். அவர் காசர்கோடு, கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, பாலக்காடு, ஆலத்தூர், சாலக்குடி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் அட்டிங்கல் மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசு கிறார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுபாசினி அலி ஆகியோர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிருந்தா காரத் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் பிரசாரம் செய்கின்றனர். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் கேரளாவில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    • பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    பொள்ளாச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி, காரமடை, கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    அதனை தொடர்ந்து இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

    • தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார்.
    • உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    வேலூர்:

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் மோடியை கோஷம் எழுப்பி உற்சாகமாக பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.

    தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார். தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி.

    பொன்னாடை அணிவித்து பிரதமர் மோடியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கவுரவித்தனர்.

    பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

    * வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி.

    * உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    * இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி.

    * அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார்.
    • சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார்.

    வேலூர்:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று சென்னையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக 7-வது முறையாக தமிழகம் வந்தார்.

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை அஸ்வத்தாமனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் அமைந்துள்ள அம்மா திடலில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.

    பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனம் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பெரிய திருப்பம் ஏற்படும்.

    சென்னையில் பிரதமரின் வாகன பிரசாரத்துக்கான விளம்பர பதாகை அகற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தான் நடக்க வேண்டும். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கின்றனர். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என ரோடு ஷோ நடத்துகிறார்.

    தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். அதனால் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டது போன்றவை தொடர்பாக பிரதமர் பேச மறுக்கிறார். தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் குறித்து மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பேச வேண்டும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. என்ன செய்தது? சி.ஏ.ஏ., என்.சி.ஆர். வேளாண் சட்டம் ஆகிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருந்துள்ளது.

    காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம். சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் காவிரி விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. காவிரியில் அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம்.
    • பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏமப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.

    அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.

    ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் முன்னேற அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவிகுமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினார். அதன் பின்னர் பிரசார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சர் பொன்முடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

    • வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் கபில் குமார் சி.சரட்கர், தேர்தல் பொது பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பொதுபார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் முன்னிலையில் காவல்துறை பணியாளர்களையும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களையும் சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி முதற்கட்டமாக நடைபெற்றது. மேலும், 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு போலீசாா், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ள மையத்திற்கு 2 போலீசார் என மொத்தம் 9 ஆயிரத்து 277 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 97 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. தற்போது, 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போது வரை சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அதில் மிகவும் பதற்றமானவையாக 23 வாக்குச்சாவடிகள் உள்ளது. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுவரையில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 524 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சத்து 8 ஆயிரத்து 277 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 82 பேர் நேற்று முன்தினம் தபால் வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய 239 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வாக்கு எந்திரம் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் தபால் ஓட்டு வாங்கும் பணி தொடங்கிய நிலையில், அதற்காக தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தபால் ஓட்டு சேகரித்து வந்தனர். அதில் நேற்று முன்தினம் 82 பேரும், நேற்று 931 பேரும் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களித்துள்ளனர்.

    • பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
    • பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

    மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை ரிங் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களான சு. வெங்கடேசன் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    * புதிய பிரதமர் தமிழகத்திற்க நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார். இப்போது இருக்கும் பிரதமர் போன்று இருக்கமாட்டார்.

    * பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.

    * எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் ஆளுநர்களால் தொல்லை கொடுப்பார்கள். இதுதான் மோடி இந்தியா.

    * பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

    * ஒருதாய் மக்களாக வாழும் நாட்டில் மதவெறியை விதைத்து மக்களை பிளவுப்படுத்தினார் மோடி.

    * ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் கல்விக்கடன் வழங்கியது. 65 ஆயிரம் கோடி அளவிற்கு சிறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது. டி.ஆர். மத்திய மந்திரியாக இருக்கும்போது சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. நெசவுத் தொழிலில் இருந்து சென்மார்க் வரி நீக்கப்பட்டது. இன்னும் ஏராளமாக உள்ளது. பிரதமர் மோடியால் பட்டியல் போட முடியுமா?.

    * தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வர, தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மீது மட்டும் பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம்தர குடிமக்களா?

    * திராவிட மாடலின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான சாதனைகள் செய்த பெருமிதத்துடன் வாக்குகள் கேட்க நின்றிருக்கிறேன்.

    * உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

    * கல்வியையும் மருத்துவத்தையும் இரு கண்களாக பார்க்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், திராவிடம் மீது பயம் இருப்பவர்கள் மதத்தின் விரோதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களை பிரித்து குளிர் காய நினைக்கும் மதவாத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு அல்ல. நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் அதிகமாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இந்து அறிநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்களில்தான். அன்பிற்கு மட்டுமல்ல. ஆன்மீகத்திற்கும் அடையாம் மதுரைதான்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார்
    • இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார். தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.

    பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளார். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

    பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால்.கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

    ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் 144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

    அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.

    • இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி.
    • இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது- ஜெய்ராம் ரமேஷ்.

    மக்களவை தேர்தலில் 400 தொகுதிகள் இலக்கு என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் குதித்துள்ளது. பா.ஜனதா கட்சி தலைவர்களும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    பா.ஜனதா கூட்டணியாக 400 தொகுதிகளை கைப்பற்றுவோம், தனியாக 370 தொகுதிகளை பிடிப்போம் எனத் தெரிவித்து வரும் நிலையில், 200 தொகுதிகளை தாண்டுவீர்களா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் 400 முழக்கம் எதார்த்தத்தின் நேர் எதிர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்துக்காட்டுடன் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பா.ஜனதா 543 தொகுதிகளில் கூட்டணியாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் ராஜிவ் காந்தி தலைமையில் 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது. 2017 குஜராத் தேர்தலின்போது பா.ஜனதா 150 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 99 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2018-ல் சத்தீஸ்கர் தேர்தலின்போது 50 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 15 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2019 ஜார்கண்ட் தேர்தலின்போது 65 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் 25 இடங்களில்தான் வெற்றி பெற்றது.

    2020 டெல்லி மாநில தேர்தலில் 45 இடங்களை வெல்வோம் என முழக்கப்பட்டது. ஆனால் 8 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2021 தமிழ்நாடு தேர்தலில் 118 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இலக்கு, வெல்வோம் என முழக்கமிடுவது எளிது. ஆனால் எதார்த்தம் நேர் எதிராக உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், தனியாக பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூறி வருகிறது.

    2019 தேர்தலின்பேது 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தது. தற்போது அதை 400 ஆக உயர்த்தியுள்ளது.

    2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, கூட்டணி கட்சிகளுடன் சேர்த்த 353 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×