என் மலர்
உலகம்
- சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின.
- படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டமாஸ்கஸ்:
தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே சாலையில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஹீத்ரூ விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்டன.
- இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹீத்ரு விமான நிலையம்.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த விமான நிலையத்தின் 3-வது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை நேற்று இறக்கிவிட்டது.
அப்போது அதே ரன்வேயில் வந்திறங்கிய மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதி லேசாக உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்தது.
- பாகிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
லாகூர்:
பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.
- மாணவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு. இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர் என்று தன்னை கருதி உள்ளார். மேலும் அங்குள்ள பெண்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கருதி உள்ளார். இந்த விசித்திரமான காதல் நோய் அறிகுறி முற்றி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் அந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.
பின்னர் தான் அவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதை கண்டுபிடித்தனர். அவரது இந்த விசித்திர நோய் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது, பணத்தை வீண் விரையம் செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்து வருவதும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- வீடியோ வைரலாகி 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஜீத்தின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவதற்காகவே வாலிபர்கள் பலரும் சாகசங்கள் செய்வது, பொது இடங்களில் நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மின்சார ஆட்டோவின் கூரையில் நடனம் ஆடிய வாலிபர் ஒருவர் அதில் இருந்து கீழே விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பாபுசிங் என்ற அந்த நபர் ஜீத் என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மின்சார ஆட்டோவின் கூரையில் நின்று நடனம் ஆடும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
ஆனால் ஆட்டோவின் மீது அவர் நடனம் ஆடுவதை பார்க்காமல் டிரைவர் வாகனத்தை இயக்கிய போது, ஜீத் ஆட்டோவில் இருந்து கீழே விழும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஜீத்தின் இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார்.
- இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.
லண்டன்:
இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார். இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக்.
இதுதொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch: UK PM Rishi Sunak Bats Against England Pace Legend James Anderson https://t.co/KqMXvE6aqS
— NDTV (@ndtv) April 6, 2024
?: https://t.co/M9YYBQYG3I pic.twitter.com/iYcLWcoJmz
- வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க்.
- மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார்.
லாட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை வென்ற பெண்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தவறுதலாக பொத்தானை அழுத்தி ரூ.8 கோடி பரிசு வென்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க். இந்த பெண் கடந்த மாதம் 18-ந்தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க பிளாஸ்பெர்க் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு வெர்ஜினியா லாட்டரி வாங்குவதற்காக பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக லாட்டரி வாங்க மிரியம் லாங்க் லாட்டரி விற்பனை எந்திரத்தில் வாங்கும் பணியை தொடங்கினார்.
அவர் மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார். பவர் பால் டிக்கெட் எண் பொருந்தும் சீட்டானது, அதிகபட்ச எண்ணிக்கையுடன் பொருந்துபவர் பரிசை வெல்வார்.
இந்நிலையில் மிரியம் லாங்க், தவறாக பவர் பால் லாட்டரி பொத்தானை அழுத்திய நிலையில், அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மிரியம் லாங்க் கூறுகையில், இந்த லாட்டரியை வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் தவறுதலாக பொத்தானை அழுத்தினேன். பவர் பால் லாட்டரி சீட்டு வந்தது. அதனால் தவிர்க்க முடியாமல் அதை தேர்ந்தெடுத்தேன் என்றார்.
- ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார்.
- தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார். அப்போது போலீசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.
- மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
- எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் பசோசும் உள்ளனர்.
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மார்ச் மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவரது நிகர மதிப்பு $48.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஜுகர்பெர்க்கின் நிகர மதிப்பு $58.9 பில்லியன் அதிகரித்துள்ளது.
ஜுகர்பெர்க் நவம்பர் 2020க்குப் பிறகு முதன்முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
- தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 2 பேரை நீக்கம் செய்து இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேரை கண்டித்துள்ளதாகவும் தெரிவித்தது.
- சிரியாவின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
- இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரித்தது.
டெஹ்ரான்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






