என் மலர்tooltip icon

    உலகம்

    • பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக் கொன்றதாக பத்திரிகை குற்றச்சாட்டு.
    • இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று பரபரப்பு குற்ற்சாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தது.

    "இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம்'' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த செய்திக்கு கடந்த வாரம் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து மீடியா தகவல்களை பார்த்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் தலையிட போவதில்லை. ஆனால், இருதரப்பினரையும் பதற்றத்தை தணிக்கவும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஊக்கப்படுத்துகிறோம்" என்றார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை இந்தியா விரும்புவதில்லை. காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தார், இந்த தங்களுடைய நாட்டின் உள்விவகாரம் என இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தேசியக் கொடி தொடர்பாக முன்னாள் மந்திரி பதிவுசெய்த படம் கண்டனத்திற்கு உள்ளானது.
    • முன்னாள் மந்திரி மரியம் தனது பதிவுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மாலே:

    மாலத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

    அவற்றில் ஒன்றாக, மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பதிவில் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், தனது பதிவுக்கு மரியம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மரியம் ஷியுனா என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார்.
    • அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது.

    பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், பாலின கொள்கை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறுவதாகும்.

    கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட கண்ணியம் தொடர்பான அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்பதை தொடர்ந்து கடுமையாக நிராகரித்து வருகிறது. கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்தவொரு பாலின மாற்ற தலையீடு, விதிப்படி கருத்தரித்த தருணத்திலிருந்து நபர் பெற்ற தனித்துவமான கண்ணியத்தை அச்சுறுத்துகிறது.

    • கடந்த டிசம்பர் மாதம் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • ஹமாஸ் அமைப்பின் ஏராளமான சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்து அழித்தனர்.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் படிப்படியாக தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் எங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது.

    சுமார் நான்குமாதம் கடுமையான வகையில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில், தெருத்தெருவாக சோதனை நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடினர். ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளை தேடிப்பிடித்து அழித்தனர்.

    ஹமாஸ் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாக கான் யூனிஸ் கருதப்பட்டது. இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமாகின.

    தற்போது இஸ்ரேல் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் உதவிப்பொருட்கள் வழங்கிய நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் யூனிஸ் கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டது. இதனால் கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது. கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.

    வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பாலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.

    கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறிய முகமது அப்தெல்-கானி தற்போது கான் யூனிஸ் நகர் திரும்பியுள்ளார். அவர் "பல பகுதிகள் குறிப்பாக நகரின் மையப் பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. என்னுடைய வீடு மற்றும் என்னுடைய வீடு அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமாகியுள்ளன" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    நஜ்வா அயாஷ் என் பெண் "தனனுடைய குடும்பம் வசிக்கும் 3 மாடிக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் படிகள் அனைத்தும் இடிந்துள்ளன" எனத்தெரிவித்துள்ளார்.

    பாசல் அபு சாசர் "அவர்கள் (இஸ்ரேல் ராணுவம்) எதையும விட்டுச் செல்லவில்லை. வாழ்வதற்கான ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.

    அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எதைப்பற்றியும் அதிகமாக சிந்தித்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது. பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எனக்கு என்று தனியாக எந்த சிறப்பு உணவு முறையும் இல்லை. ஆனாலும் சமச்சீர் உணவு, பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு உண்பது போன்றவை நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும் என்றார். மேலும் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்படுகிறது.

    தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்," படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பலியானவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவர். சம்பவ இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக தேடும் பணி கடினமாக உள்ளது.

    காலரா பற்றிய தவறான தகவல் பரவியதை அடுத்து, அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர்" என்றார்.

    படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    • காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (வயது 27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.

    இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். அப்போதுதான் கோல்பிரிங்க்ஸ் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள்.

    அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்து கிடக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள். அதை உண்மையாக்கும் வகையில் எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகனாக மாறிய 99 வயதான இந்தியாவைச் சேர்ந்த தைபாய் உள்ளார்.அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளது.

    • இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இங்கிலாந்து லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன். இவரது மனைவி ஹோலி பிராம்லி (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். அதை சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளார்.

    ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்தனர். அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள், பணியாளர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சீனர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதலில் சீன என்ஜினீயர்கள் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என பஞ்சாப் மாகாண முதல்மந்திரியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மரியம் நவாஸ் கூறுகையில், பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கும்போது அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் எந்த ஒழுக்கத்தின் கீழும் வர விரும்பவில்லை. பயங்கரவாதம் கடினமான போரின் வடிவத்தை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய தளங்களில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கவேண்டும். பயங்கரவாதிகளிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் கிடைத்த அமெரிக்க ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

    ×