என் மலர்
உலகம்
- நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது.
- புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
லுசாகா:
தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனிடையே புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
- நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.
- சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.
மாஸ்கோ:
ரஷியாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ கோர்ட்டு அறிவுறுத்தியது.
இதனை நீக்க மறுத்தநிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.
- 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார்.
- எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.
லண்டன்:
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார்.
ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது 'ஹிக்ஸ் போசன்' துகள் என்றும் 'கடவுள் துகள்' என கூறப்பட்டது. இதற்காக பீட்டர் ஹிக்ஸ் 2013-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்த ஆராய்ச்சி பல்வேறு கேள்விகளுக்கான விடை தந்தது. எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் முதுமை காரணமாக பீட்டர் ஹிக்ஸ் எடின்பெர்க்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அவருடைய மறைவுக்கு நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
- 12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.
பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்ந்ததால் அபாத்தின் உடல்நலம் தேறியதாக அந்த நாட்டின் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது கின்னஸ் உலக சாதனையில் அபாத்தின் பெயரை உலகின் வயதான நபராக பதிவு செய்ய உதவியதாக பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.
- விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
- கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
- இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மூன்று மகன்களுடன் மூன்று பேரன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்ததாக இஸ்ரேல் மீது இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாதி முகாமில் இருந்தபோது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தாரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேஸ்புக் குழுவில் பெண்கள் டேட்டிங் செய்யும் போது சந்தித்த அனுபவங்களையும், சில ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளனர்.
- பெண்கள் ஸ்டீவர்டுடன் டேட்டிங் சென்றது பற்றி பகிர்ந்துள்ளனர்.
டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் சர்வ சாதாரணமாக மாறி வருகிறது. டேட்டிங் செய்வதற்கு இணையை தேர்வு செய்ய ஆன்லைனில் ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன.
இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவர்ட் லூகாஸ் முர்ரே என்பவர் தன்னுடன் டேட்டிங் சென்ற பெண்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்ததாக கூறி, தன்னை பற்றி விமர்சனம் செய்ததாக 50 பெண்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
'ஆர் வீ டேட்டிங் தி சேம் கை' என்ற பேஸ்புக் குழுவில் பெண்கள் டேட்டிங் செய்யும் போது சந்தித்த அனுபவங்களையும், சில ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளனர். அதில், பெண்கள் ஸ்டீவர்டுடன் டேட்டிங் சென்றது பற்றி பகிர்ந்துள்ளனர். அதில் அவர்கள் ஸ்டீவர்ட்டை மோசமான இணை என கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் தன்னை பற்றி அவதூறு செய்வதாக கூறி 50 பெண்கள் மீது ஸ்டீவர்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், அந்த பெண்கள் தன்னை பற்றி கூறிய அவதூறுக்கு நஷ்ட ஈடாக 2.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) கேட்டுள்ளார். இதுபற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் அளித்த பதிலில், ஸ்டீவர்ட் சட்ட நடவடிக்கையை பயன்படுத்தி தங்களை மிரட்டுவதாக கூறி உள்ளனர்.
- தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கனடா பிரதமர் ஒரு குழு அமைத்தார்.
- கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரியவந்தது.
டொரன்டோ:
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்தது.
கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) 2021-ம் ஆண்டின் தேர்தலின்போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்துள்ளது. தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதற்கிடையே, தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழுவை அமைத்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது.
மூத்த அதிகாரிகள் குழுவிடம் வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.
- மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
- வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.
இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- குலுக்கலின் போது தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது.
- பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள மேலி லேண்ட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் பவர் பால் குலுக்கலில் பங்கேற்றுள்ளனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான தொடர் வரிசை கொண்ட 2 லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் குலுக்கலின் போது அந்த தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது. முதலில் கணவர், தான் வாங்கிய சீட்டுக்கு தான் பரிசு கிடைத்துள்ளதாக கருதி உள்ளார். ஆனால் அதே எண்ணில் அவரது மனைவியும் லாட்டரி வாங்கி இருந்ததால் அந்த தம்பதிக்கு இரட்டை ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
- மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
- பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டாவா:
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவானாக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மற்றொரு நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரஃபா நகரில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
- ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் இலக்கு நிறைவடையும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.
ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.
இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






