என் மலர்
உலகம்
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
- ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தெஹ்ரான்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26-ம் தேதி ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
- துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
- பாகிஸ்தான் அதிபர் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடந்த புதன்கிழமை துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்னும் நான்கு வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.
- உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. அதே போல் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்கள்.
இதற்கிடையே ஈரானும் சமீபத்தில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.
ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இதில் ரேடார் மற்றும் தாமிர் இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேல் மீது ஏவப்படும் ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணித்து நடு வானில் தாக்கி அழிக்கும்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான அயன் பீம்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அயன் பீம், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை ஒளியின் வேகத்தில் ஈடுபட முடியும். உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும். அயன் டோமும் கடினமாக உள்ள இலக்குகளையும் தாக்கும். இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அயன் பீம் சிறிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பெரிய இலக்குகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.
இந்த லேசர் பாதுகாப்பு அமைப்பு நாட்டின் அயர்ன் டோம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை பூர்த்தி செய்யும். இது போரின் புதிய சகாப்தத்தை அறிவிக்கும் என்று தெரிவித்தது.
அயர்ன் டோமை இயக்கும் செலவில் ஒரு பகுதியிலேயே அயன் பீம் அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா அந்நாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது.
- மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் ஆகியவற்றுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் வான் வழித் தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா அந்நாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது. மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தாக்கி அழிக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய கிழக்கு பகுதியில் பாதுப்பை மேலும் பலப்படுத்த கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
அதன்படி பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டு வீச்சு விமானங்கள், போர் படைப்பிரிவுகள், டேங்கர் விமானங்கள் ஆகியவை போர் கப்பலில் அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும் போது, மத்திய கிழக்கில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் படைகளின் பாதுகாப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பில் எங்கள் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், பாதுகாப்பு மந்திரி உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தது.
- இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
- விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்று கொள்ளலாம்.
அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.
இதேபோல் நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?
- நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இந்த சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தபோது உக்ரைன் தப்பிக்காது என்ற கருத்து இருந்தது.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டையில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் வடகொரிய ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதை ஆதாரத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில வடகொரிய துருப்புகளுக்கு எதிராக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் அவசியம் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆதரவு அளித்து வரும் நாடுகளை, "வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?" எனக்குற்றம் சாட்டினார். அத்துடன் அதற்குப் பதிலாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.
மேலும், "ரஷியா அதன் எல்லையில் உள்ள முகாம்கள் அனைத்திலும் வட கொரியா வீரர்களை குவித்து வைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் இருந்தால், நாம் தடுப்பு நடவடிக்கையாக தாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
- ஐபோன் 16 சீரியஸ் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்தது.
- பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது.
ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்ளூரில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உற்பத்தி ஆலை தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்பும் உள்ளூர் பொருளாதாரமும் உயரும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.
அவ்வகையில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழிற்சாலை தொடங்க நெருக்கடி கொடுக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
- இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
- இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அந்த அமைப்பிற்கு ஆதரவாக உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை முன்னெடுக்கிறது இஸ்ரேல்.
இதற்கிடையே சுமார் 1½ லட்சம் கிலோ வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி. கேதரின் கப்பல் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்த ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.
- விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்கிரேட்:
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர்.
அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன.
பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர்ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லொழுக்கத்துறை மந்திரி காலித் ஹனாபி பேசியதாவது:
ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லா ஹு அக்பர் கோஷம் எழுப்ப அனுமதி கிடையாது. இஸ்லாமின் நம்பிக்கை வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை என தெரிவித்தார்.
- பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
- இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணிக்கு பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.
இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.
முதல் கட்ட விசாரணையில், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ரிமோட் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை வாகனம் மற்றும் சில ஆட்டோக்கள் சேதமடைந்தன.
குண்டு வெடிப்புக்கு காரணமானோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் பக்டி பள்ளி மாணவர்கள் மீதான குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியது.
- 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சென்றதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை பெய்தததை தொட்ர்ந்து அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. தெருக்கள் ஆறுகளாக மாறின. ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ க் கடந்துள்ளது. மேலும், பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என அந்நாடு தெரிவித்துள்ளது.






