என் மலர்tooltip icon

    உலகம்

    • மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
    • சாமானிய மக்களும் முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. களத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனல்டு டிரம்ப் [78 வயது] போட்டியிடுகின்றனர்.

     

    மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் தபால் வாக்கு, வாக்குப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் மூலம் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

    இந்தியாவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அமெரிக்காவில் சாமானிய மக்களும் முன்கூட்டியே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

    வேலை, உடல்நல பிரச்சினைகள், பயணம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நாளில் வாக்களிப்பதில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் இந்த நடைமுறை பயன்படுத்துகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அதன்படி இதுவரை கிட்டத்தட்ட 7  கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஞ்சியவர்கள் 50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.   இழுபறி ஏற்படாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

     

    தேர்தல் களத்தை பொறுத்தவரை  சமீபத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்க்கு அவருக்கு 47 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
    • ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது.
    • அந்த உணர்வைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

    அப்போது, வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசும் போது, "இந்தியா வளரும். இந்தியா வளர்ந்து வருகிறது, ஆனால் இந்தியா உலகத்துடன் வளர விரும்புகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும் நல்லெண்ணமும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் விருப்பமும் உள்ளதாக நாங்கள் நினைக்கிறோம். இந்தியா வெற்றிபெற உலகம் முழுவதும் ஒரு உணர்வைக் காண்கிறோம், அந்த உணர்வைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்," என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,"வணக்கம் ஆஸ்திரேலியா! இன்றுதான் பிரிஸ்பேன் வந்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவை முன்னெடுத்துச் செல்ல அடுத்த சில நாட்களில் ஆக்கப்பூர்வமான ஈடுபாடுகளை எதிர்நோக்கி இருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தள்ளி வைக்கப்பட்ட 3 ஆம் கட்ட முகாம் நேற்று நடத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதை தடுக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அடிப்படை சுகாதர வசதிகள் மற்றும் உணவு இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தில் உள்ளனர்.

    ஊட்டச்சத்து குறைபாடும் , நோய்த் தொற்று ஏற்படும் அபயமமும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உலக சுகாதர அமைப்பின் முயற்சியின் பேரில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

     

    இதன்படி, காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். இந்நிலையில் , 3-வது கட்ட சொட்டு மருந்து முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த அக்டோபர் 23-ந்தேதி நடக்க இருந்த இந்த முகாம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

     

    இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ், போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.

    • வெள்ளப் பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
    • வெள்ளம் காரணமாக பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

    மாட்ரிட்:

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.

    அங்குள்ள கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள், கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்நிலையில், ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

    மீட்புப் பணிகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல்.
    • பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    நியூ யார்க் அரசு அதிகாரிகள் இணையத்தில் அதிக பிரபலமாக இருந்த அணில்- 'பீனட்'-ஐ கொன்று குவித்ததற்கு முன்னணி பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்தார். பீனட் உயிரிழப்புக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்த பதிவில், "அதிபர் டொனால்டு டிரம்ப் அணில்களை காப்பாற்றுவார். RIP பி'னட்," என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பினட் புகைப்படத்தினை இணைத்துள்ளார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில் பீனட்-ஐ ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரத்தில் உருவாக்கப்பட்ட படத்தை பதிவிட்டு, "நீங்கள் என்னை அடித்தால், நீங்கள் கற்பனை செய்வதை விட நான் அதிக சக்தி வாய்ந்தவனாக மாறுவேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    நியூ யார்க்கை சேர்ந்த மார்க் லாங்கோ பீனட் என்ற அனிலுடன் ஏழு ஆண்டுகளாக வாழந்து வந்தார். அவ்வப்போது பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை மார்க் லாங்கோ வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    • வன்முறை, மிரட்டல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமித்ஷா கூறியதாக கனடா கூறியது.
    • அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு தூதரக உறவுகளும் முறிந்த நிலையில் கனடாவில் வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்தியாவால் தங்களுக்கு சைபர் ஆபத்து உள்ளது என்றும் கனடா தெரிவித்துள்ளது. இவையனைத்தும் இந்தியாவைக் கோபப்படுத்தி உள்ள நிலையில் தற்போது கனடா அதிபர் ட்ரூடோ அந்நாட்டில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த இந்து மதத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த சில மாதங்களில் தான் 3 இந்து கோவில்களுக்கு சென்றதாகவும் அங்கு தனது அதிஷ்டத்துக்காக கையில் அன்புடன் கயிறு கட்டி விடப்பட்டதாகவும் அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்த ஒளி மிகுந்த பண்டிகையில் இருள் அழிய வேண்டும். கனடாவில் வாழும் இந்து மக்கள் சிறத்தவர்கள். நவம்பர் மாதம் இந்து மத காலாச்சார மாதமாக கனடாவில் கொண்டாடப்படுகிறது. கனடா இந்துக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடக்க இருந்த தீபாவளி நிகழ்ச்சிகளை இந்திய வெளியுறவுத்துறை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    • ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டார்
    • பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தியும் ஹமாஸ் அமைப்பை அழிக்க முடியமால் இஸ்ரேல் திணறி வருகிறது.

    இதற்கிடையே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதராவாக செயல்படும் ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் இஸ்ரேல் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. தொடர்ந்து அடுத்த தலைவராக அறியப்பட்ட ஹாசன் ஷபிதைனி கொல்லப்பட்டார்.

    எனவே தற்போது நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் ஈரான் உடனும் வம்பிழுத்து வருகிறது.

    அந்நாட்டின் அணு ஆயுத தளங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார்.

    தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பல தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது.
    • இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குய்லூம் சார்லக்ஸ் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் நீண்ட காலமாக மறைந்து இருந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், "இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது. இந்நகரத்தில் 500 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு பண்டைய மக்கள் நாடோடிகளிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எவ்வாறு மாறியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இது பிராந்தியத்தின் வரலாற்று நிலப்பரப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டுகிறது. அக்கால சமூக மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரேபிய தீபகற்பத்தின் இந்த பகுதியில் நகரமயமாக்கலை நோக்கிய முக்கிய மாற்றத்தை வலியுறுத்துகிறது. குடியிருப்புகள் ஒரு நிலையான திட்டத்தைப் பின்பற்றி கட்டப்பட்டன மற்றும் சிறிய தெருக்களால் இணைக்கப்பட்டன.

    வெண்கல யுகத்தில் வடமேற்கு அரேபியாவில் பெரும்பாலும் ஆயர் நாடோடி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தினர். நீண்ட தூர வர்த்தகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய கோட்டைகளை மையமாகக் கொண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நினைவுச் சின்ன சுவர் அங்கு உள்ளன" என்று தெரிவித்தனர்.

    • ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டனர்
    • தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கை வெளியிடப்பட்டது

    கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.

    மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது. 

    • அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார். 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.
    • மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும்3 ஆண்டுகள் சிறை தண்டனை.

    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியது.

    இதனையடுத்து அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதேசமயம் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.

    அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும்.

    இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. எனவே போக்குவரத்து விதிகளில் அங்கு புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    அதன்படி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும்3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ×