என் மலர்tooltip icon

    உலகம்

    • நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
    • கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.

    அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதில், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. சுவர்கள் மீது மக்கள் நடந்து செல்லும் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது.

    அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியானார்கள். 8 கவுன்டி பகுதிகளை சேர்ந்த 29 பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் புழுதி புயலின்போது, கார் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருவதுடன், கடுமையான புழுதி புயலும் வீசி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. வானிலை பாதிப்புகளால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குளிரான பகுதிகளில் குளிர் காற்றும், வெப்ப பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் ஆபத்தும் காணப்படுகின்றன. மின்னசோட்டா மற்றும் தெற்கு டகோடா பகுதிகளில் அதிக குளிருடன் கூடிய பனி சூறாவளி பாதிப்புக்கான எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. ஓரடி வரையிலான பனிப்படலம் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காட்டுத்தீயால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான நிலம் எரிந்து போயுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ், மிசவுரி மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்கள் அதிக பாதிப்படைந்து உள்ளன. இதேபோன்று, கிழக்கு லூசியானா, மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா, மேற்கு ஜார்ஜியா மற்றும் புளோரிடா பான்ஹேண்டில் உள்ளிட்ட பகுதிகள், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

    • செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
    • அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.

    இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை கண்டித்து அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பேரில் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் வெளியிட்ட தகவல்களில் ஏமனின் தலைநகர் சனாவில் மூன்றுமுறை அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கரும்புகைகள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

    இதேபோல் ஏமனின் வடக்கு பகுதியான சதா பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கமாண்ட் வெளியிட்ட பதிவுகளில், விமானத்தில் வீரர்கள் ஏறுவதும், வான்வெளியில் இருந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுவது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    • கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த மேம்பாலம் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 24 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை

    க்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

    ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.

    • ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த உடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
    • ஆனால், போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் நிறைவு பெறாமல் உள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 25 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அத்துடன் உயிரிழந்த 8 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. இதற்குப் பதிலாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்தது.

    ஏழு வார ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், 2-வது கட்ட ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏழு வாரக்கால போர் நிறுத்தம் இந்த மாதம் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் விடுவிக்கப்படுவார். உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் முதற்கட்ட போர் நிறத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அமல்படுத்தினால் மட்டுமே பணயக் கைதி விடுவிக்கப்படுவார். 4 பணயக் கைதி உடல்கள் ஒப்படைக்கும் என ஹமாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தைகள் விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.

    மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காசா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும். பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்ரேல் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர், இது ஹமாஸின் சூழ்ச்சி மற்றும் உளவியல் போர் என குற்றம் சாட்டியிருந்தார்.

    நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பதற்கான திட்டத்தை முன்வைப்பதாக அமெரிக்கா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முற்றிலும் நடைமுறைக்கு மாறான கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் முன்வைப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

    மூத்த ஹமாஸ் தலைவர் கலில்-அல்-ஹய்யா நேற்று எகிப்து நாட்டிற்கு சென்றார். அதன்பின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றன.

    முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்ததும், இந்த மாதம் தொடக்கத்தில், நாங்கள் அமெரிக்காவின் புதிய திட்டத்தை ஏற்றுள்ளோம். அது ஹமாஸ் தற்போதுள்ள பணயக் கைதிகளில் பாதிபேரை விடுதலை செய்ய வேண்டும். அதற்குப் பின் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உறுதி அளிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.

    ஆனால், கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்குகிறது. போர் நிறுத்தத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறது என ஹமாஸ் குற்றம் சாட்டியது.

    ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலும் ஹமாஸும் பிப்ரவரி தொடக்கத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இருந்தன. இதில் ஹமாஸ் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஈடாக விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இது நடைபெறாமல் உள்ளது.

    • 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
    • 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.

    பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.

    கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.  

     அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.

    இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

    • இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • 7 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ராய்ட்டர்ஸ்கு கிடைத்த வரைவின்படி முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும்.

    இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    டிரம்ப் 2016-20 பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை விட தற்போது விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் பெரிய அளவிலிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும்
    • சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்

     ஹமாஸ் - இஸ்ரேல் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் 56,000 பேர் உயிரிழந்த காசா நகரம் இடிபாடுகளாக காட்சி அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தத்துக்கு பின் தங்கள் இடங்களுக்கு திரும்பியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் 20 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    இடிபாடுகளை அகற்றும் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தற்போதைய தேவை. ஆனால் அவை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காசா மக்களை நிரந்தமராக வெளியேற்றி அங்கு ரிசார்ட் சொகுசு நகரத்தை உருவாக்கும் கனவு திட்டத்தை அறிவித்தார். இதனை இஸ்ரேல் தொலைநோக்கு பார்வை என வர்ணித்தது.

    இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காசா மக்களைக் குடியேற்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளன.

    இதற்காக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.

    காசா மக்களை அண்டை நாடான ஜோர்டான் மற்றும் எகிப்தில் குடியேற்றுவது குறித்துப் டிரம்ப் பேசியிருந்தார். காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும் என்ற அவரது திட்டத்தை அரபு நாடுகளும் பாலஸ்தீனியர்களும் முற்றிலுமாக நிராகரித்தனர். இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களை ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    அசோசியேட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த இராஜதந்திர முயற்சி ரகசியமாக செய்யப்படுகிறது. சோமாலியா மற்றும் சோமாலிலாந்துடனான தொடர்புகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், பேச்சுவார்த்தை எந்த மட்டத்தில் நடந்தது, அதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. தகவல்களின்படி, சூடான் அமெரிக்க முன்மொழிவை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சோமாலியாவும் சோமாலிலாந்தும் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளன. 

    • உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
    • அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.

    அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.

    ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

    இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.

    எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.

    குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    • வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
    • பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது.

    இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.



    • 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

    நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

    சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

     

    மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.

    போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×