என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகம் இந்தாண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
    • முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

    சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

    கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

    இப்படம் ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    சென்னை:

    தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,

    தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கூறியுள்ளார். 



    • ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
    • மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (பிப்ரவரி 12) நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் 'ஒயிட்வாஷ்' செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

    அதே நேரத்தில் வீராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

    • விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • ஆந்திரா, தெலுங்கானாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுபான விலைகள் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார்.

    தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை கணிசமாக குறைத்தார். மேலும் மதுபான விலைகளை குறைக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன் உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில் ஆந்திராவில் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தவிர்த்து மற்ற மதுபானங்கள் விலையை கலால் துறை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகள் மீது 15 சதவீத விலையை உயர்த்தி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதனால் தெலுங்கு மாநிலங்களில் அதிக அளவு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீரின் விலையை மாநில அரசு உயர்த்தி உள்ளது. 

    • நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
    • பட்ஜெட் மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.

    ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும்.

    இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    மேலும் தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசு துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு டெல்லிக்கு அனுப்பப்படும்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும். அப்போது நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

    • தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனையானது

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560

    08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560

    07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    09-02-2025- ஒரு கிராம் ரூ.107

    08-02-2025- ஒரு கிராம் ரூ.107

    07-02-2025- ஒரு கிராம் ரூ.107

    06-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார்.

    பெங்களூருவை அடுத்த இந்திரா நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்குள் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் பெங்களூருவில் சீரியல் கில்லர் வலம் வருவதாக கூறப்பட்டது. கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    துணை காவல் ஆணையர் தேவராஜா கடந்த 8-ம் தேதி நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் கொலை முயற்சி செய்த நபர் மதுபோதையில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இந்த சம்பவத்தை செய்தவர் மீது சிறு சிறு திருட்டு வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். இந்திய சட்டங்கள் சீரியல் கில்லர்களுக்கென எந்த வரையறையும் குறிப்பிடவில்லை. பொதுப்படையில் ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்தால் அவரை சீரியல் கில்லர் என்று குறிப்பிடப்படுகிறது.

    பெங்களூரு கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தனித்துயர்ந்த

    குன்றுகள் தோறும்

    வீற்றிருக்கும்

    தமிழ்நிலக் கடவுள்;

    உலகெங்கும் வாழும்

    தமிழர்களின்

    தனிப்பெரும் கடவுள்

    முருகப் பெருமானைப்

    போற்றுவோம்!

    அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
    • ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    இங்கிலாந்து:

    1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்த நிலையில், குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.

    ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது. 

    • இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார். 



    ×