என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
    • நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு தொற்று நோய் பரவியபடி இருக்கிறது. பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதற்கு சாதகமான பருவம் தொடங்கியிருப்பதாவும், ஆகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    * பறவைகள்-விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    * பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.

    * திறந்த கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட கள் அல்லது அது போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டாம்.

    * கீழே விழுந்த பழங்கள், பாக்கு அல்லது அதுபோன்ற பொருட்களை கையாளும் போது எப்போதும் கையுறைகளை அணியுங்கள்.

    * வவ்வால்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பழங்கள் அல்லது பழங்களின் மேற்பரப்புகளை தொடும்போது கையுறைகளை பயன்படுத்தவும். நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.

    * வவ்வால்களின் வாழ்விடங்களை தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வேண்டாம், ஏனென்றால் இது அவற்றை கிளர்ச்சியடைய செய்து உடல் திரவங்களின் சுரப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
    • கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இன்னும் குளிர்காலம் போல கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    சில இடங்களில் காலை நேரங்களிலும் குளிர்ச்சி யான கால நிலை உள்ளது. அதேநேரம், விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் மாநிலத் தின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோடைகாலம் வரும் போது அதிகப்பட்ச வெப்ப நிலை சீராக உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

    சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் துணை இயக்குனர் ராஜ் கூறுகையில், நகரின் மையப்பகுதிகளில் வடகிழக்கு காற்று கூறுகள் இல்லாதது மற்றும் நகர்ப்புற வெப்பத்தின் தாக்கம் ஆகியவை கடந்த 6 ஆண்டுகளில் இயல்பான அல்லது குறைந்த வெப்பநிலைக்கு பங்களித்த காரணங்களாக உள்ளது என்றார்.

    2011 மற்றும் 2014-க்கு இடையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரவு நேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரவு வெப்பநிலை சாதாரணமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
    • தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

    அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.

    அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.

    4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.

    அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
    • பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.

    உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக்கல்வித்துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



    • ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
    • திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    திருவள்ளூரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. அலுவலகத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் கிராம் ரூ.7,970-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.400-ம் நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கு விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,035-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,280-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.

    கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-02-2025- ஒரு கிராம் ரூ.108

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
    • கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.

    அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தூங்க விடாமல் பயணிகள் தொந்தரவு செய்ததாலும் எரிச்சல் அடைந்து ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    • நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.
    • எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    சமீப காலமாக பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தடுமாறி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாபர் அசாம் கடைசி 21 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் தான் சரியான தேர்வு என அந்த அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது, நாங்கள் ஐசிசி தொடர்களில் ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினோம். ஆனால் தற்போது நாங்கள் அந்த ஒரு சதவீதத்தையும் பூர்த்தி செய்து சாம்பியன் பட்டத்தை அடைய முயற்சிக்கிறோம்.

    சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.

    எங்களிடம் தொடக்க வீரர் இடத்திற்கு நிறைய தேர்வுகள் இருக்கும் நிலையிலும், தற்போது அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் மிகச்சிறந்த தேர்வாக உள்ளார். மேலும் அவரும் அதனை விரும்புகிறார்.

    எங்களுக்கு உண்மையான தொடக்க வீரர்கள் வேண்டும். ஆனால் அணியின் தேவைகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக வலுவான பேட்ஸ்மேன் என்பதால் பாபர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அவர் தான் தற்போது எங்கள் அணியின் தொடக்க வீரர் என்று தெரிவித்துள்ளார். 

    • ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார்.
    • குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்களை நடத்துவார்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்றோடு (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெற்றார். இதையடத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.

    தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று காலை (பிப்ரவரி 19) பதவியேற்று கொண்டார்.

    இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார். இவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    மேலும், 2027-ம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் நடத்துவார். 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.



    • தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
    • அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அழிவின் விளிம்பிலிருந்த ஓலைச்சுவடியிலான தமிழ் இலக்கியங்களை நூல் வடிவத்தில் அச்சிட்டு, தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.

    மூவாயிரத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் மீட்டு, அச்சிட்டு வெளியிட்டவர். அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.

    தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார். 



    • பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஒழுங்காக சேமிக்கப்படாத கடலை மிட்டாய், காலாவதி தேதியை தாண்டிய கடலை மிட்டாய் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தார்வாட் கூடுதல் ஆணையர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்த மற்றொரு கடிதத்தையும் இந்த உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அவர் துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

    இதை பரிசீலித்த கல்வித்துறை துணை ஊட்டச்சத்துக்காக முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்களை வெளியிட துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டது.

    ×