என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
    • ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.

    ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

    மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முராட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.

    இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்" என்றார்.

    • பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்டுள்ளார்.
    • மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர் சுனில் குமார், "பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனக்கு வாட்சப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பினார். பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறிய அவர், தன் மாமியாரைக் கொல்ல 2 மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொன்னாள்.

    உயிர்களை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் கடமை, உயிரை எடுப்பது அல்ல என்று அவளிடம் நான் கூறினேன்.ஆனால் அவளோ, மாத்திரைகளின் பெயர்களை மெசேஜ் அனுப்புமாறு என்னிடம் கெஞ்சினார். நான் அதிர்ச்சியடைந்து அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன். தொடர்ந்து சஹானா தொடர்ந்து பலமுறை மெசேஜ் அனுப்பி வந்தார்.

    பின்னர் சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினாள். ஏன் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கிறாய் என்று நான் கேட்டபோது, அவளுடைய மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், இனிமேலும் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாது என்று கூறினார். ஆகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்" என்று தெரிவித்தார்.

    • வில் யங் 113 பந்தில் 107 ரன்கள் விளாசினார்.
    • டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 104 பந்தில் 118 ரன்கள் குவித்தார்.

    8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து அணி:-

    1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.

    பாகிஸ்தான் அணி:-

    1. ஃபஹர் சமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.

    அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    4-வது விக்கெடடுக்கு வில் யங் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடிக்க வில் யங் சிறப்பான விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார்.

    56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங், 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து 5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    இதனால் நியூசிலாந்து ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டாம் லாதம் 47-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் எடுது்து 95 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடி பிலிப்ஸ் 49-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார்.

    நியூசிலாந்து அணி 45-வது ஓவரில் 16 ரன்களும், 46-வது ஓவரில் 9 ரன்களும், 47-வது ஓவரில் 18 ரன்களும், 48-வது ஓவரில் 11 ரன்களும், 49-வது ஓவரில் 12 ரன்களும் விளாசின. இதனால் 44.5 ஓவரில் 250 ரன்னைக் கடந்த நிலையில் 48.3 ஓவரில் 300 ரன்னைத்தொட்டது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார். அடுத்து பிரேஸ்வெல் களம் இறங்கினார்.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து கடைசி 10 ஓவரில்

    பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் 10 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

    • ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
    • ஏற்கனவே வெளியான சப்தம் படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

    'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    • பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.

    பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.

    கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விளம்பரங்கள் மூலம் ஈட்டிய வருவாய் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்ததாக இத்தாலி வழக்கு.
    • விசாரணையை கைவிட இத்தாலிக்கு பணம் செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.

    கூகுள் உலகளவில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்கி வருகிறது. யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

    கூகுள் மூலம் சேவைகள் வழங்கினாலும் விளம்பரங்கள் மூலமாக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்திற்கு கூகுள் முறையாக வரி கட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தியதுடன் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அந்த வகையில் பிரான்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி வரி ஏய்ப்பு விசாரணையை முடித்துக்கொண்டது.

    பிரான்சை தொடர்ந்து இத்தாலியும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இத்தாலி அரசுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இறுதியாக 2015 முதல் 2019 வரை விளம்பரம் உள்ளிட்டவைகள் மூலம் வருவாய் ஈட்டியதற்கான வரி ஏய்ப்பு விசாரணையை கைவிட கூகுள் நிறுவனம் 340 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2953 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளோம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

    ஆனால் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

    • ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் உரிமம் பெற்றது.

    இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது.

    பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2005 ஆம் ஆண்டில், அரசாங்கம் மீண்டும் திறந்த உரிமக் கொள்கை மூலம் தனியார் நிறுவனங்களைத் தேடியது.

    அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது. ஆனால் இந்த ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது.

    இதற்கிடையில், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) ஜியோமைசூரில் 40% பங்குகளை வாங்கியது. மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி 2021 இல் சோதனைகளைத் தொடங்கியது. மேலும் ஒரு சிறிய செயலாக்க யுனிட்டை நிறுவி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.

     

    இதுகுறித்து பேசிய ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத், இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆந்திர பிரதேச அரசு சுற்றுசூழல் அனுமதியை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்று மாதங்களுக்குள் தங்க உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன்படி இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

    • 59 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 113 பந்தில் சதம் விளாசினார்.
    • 107 ரன்னில் ஆட்டமிழந்தார். யங்- டாம் லாதம் ஜோடி 118 ரன்கள் குவித்தது.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் வில் யங் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கினார். கான்வே (10), கேன் வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (10) சொதப்பினாலும் மறுமுனையில் யங் நம்பிக்கையுடன் விளைாடினார்.

    56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங் 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

    • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் எல்.ஐ.சி.க்கு ரூ.18,385 கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்நிலையில், எல்.ஐ.சி. முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில், ITC மூலம் ரூ.11,863 கோடியும் லார்சன் & டூப்ரோ மூலம் ரூ.6,713 கோடியும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.5,647 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.18,385 கோடியும், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மூலம் ரூ. 8,981 கோடியும், உள்கட்டமைப்பு பங்குகளின் மூலம் ரூ. 8,313 கோடியும், மின் உற்பத்தி பங்குகளின் மூலம்(ரூ. 7,193 கோடியும் மருந்துப் பொருட்கள் பங்குகளின் மூலம் (ரூ. 4,591 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    • முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
    • முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
    • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் நீடா கலந்துகொண்டார்.

    அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டார்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த நீடா அம்பானி, "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதில் அளித்தார்.

     

    இதற்கு முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீடா, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் என முத்தாய்ப்பாகப் பதில் கொடுத்தார். 

    • ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. 

    ×