என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
    • Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இளைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார்.

    அப்போது, லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்," இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...

    ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

    அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

    உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், " முதல்வர் மு.க.ஸ்டாலின்

    அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!" என குறிப்பிட்டிருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
    • ரோகித் 10 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 10 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)

    நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)

    இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 10 (நவம்பர் 2023 - மார்ச் 2025)

    • ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
    • ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த நிதியாண்டில் 11,500 மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது.

    இந்தியாவின் முதல் இ- ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், ரூ.301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.

    கடந்த டிசம்பர் மாதம் திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஏலத் தொகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 14ம் தேதி நிறைவடைகிறது.

    பாங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 நிதியாண்டில் 1,00,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 மின்சார இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆதி நடிப்பில் சப்தம் என்ற திகில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது.
    • சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை.

    மிருகம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல கதாநாயகனாக இருப்பவர் ஆதி. இவரது நடிப்பில் சப்தம் என்ற திகில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை. கதையைதான் பார்ப்பேன். எல்லா கதாநாயகர்களுடனும் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது. எல்லா வில்லனுடம் கதாநாயகனாக நடிக்க ஆசை இருக்கிறது.

    டைரக்ஷன் என்பது அழுத்தமான பணி. நடிகராகவே வண்டியை ஓட்டி விடுவோமே. சப்தம் படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நான், லைலா, அறிவழகன் பேசிக் கொண்டிருந்தபோது கூட லைட் ஆடிக்கொண்டே இருந்தது. இப்படி பல விஷயங்கள் அடிக்கடி நடந்ததால் ஈசியாக நினைக்க தோன்றிவிட்டது.

    கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பும்போது பேய் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது.

    கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு திருமணத்திற்கு முன்பு யாருடைய அனுமதியும் தேவை இல்லை. திருமணத்திற்கு பிறகு அப்படிப்பட்ட காட்சிகளுக்கு பொண்டாட்டியோட அனுமதி தேவை.

    அப்படி அனுமதி வாங்கி கொண்டால் வீட்டில் சண்டை இருக்காது. எல்லா படத்தின் கதை பற்றியும் மனைவியுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வேன். ஆனால் முடிவு நான் எடுப்பதுதான். இந்த வருடம் தமிழ் சினிமாவில் என்னுடைய நடிப்பில் பல படங்கள் வர இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்."

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
    • தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழும் ஆங்கிலமும் பயின்றாலே நமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நானும் அத்தகைய பள்ளியில் தான் படித்தேன். எனது மகளும் தமிழும், ஆங்கிலம் மட்டும் தான் பள்ளியில் படித்தார்.

    மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது மறைமுகமாக இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.

    வடநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைக்கு வரும்போது யாரும் ஆத்திச்சூடியோ, திருக்குறளோ, தமிழ் இலக்கியமோ, இலக்கணமோ படித்துவிட்டு இங்கு வருவதில்லை.

    தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    நாமும் அவர்களுக்கு மொழி தெரியாததால் அவர்களை விரட்டி அடிப்பது கிடையாது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பழகிக்கொள்வார்கள்.

    யாருக்காவது இந்தி பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரியா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இருக்கிறது. அங்கு படித்துக் கொள்ளலாம்.

    ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியை கட்டாயம் ஆக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அவர்கள் இந்தியைதான் திணிக்க முயல்கிறார்கள்.

    இது என்னவாகும் என்றால், எல்லாம் அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழிக்கான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாஜக அரசு பீகார், உபியில் இருந்து ஆசிரியர்களை அனுப்புகிறோம் என்பார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
    • கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சால் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    விராட் கோலியின் 300-வது போட்டியை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.

    இப்போட்டியின் மூலம் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலி இணைகிறார்.

    36 வயதான விராட் கோலி 300 போட்டியில் 288 இன்னிங்சில் 14,096 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 51 சதமும், 73 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் அவர் தனது 51-வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.
    • இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    கச்சத்தீவை தாரை வார்த்து, அப்போதைய ஆட்சியாளர்கள் மீனவர்களுக்கு பெரும் பாவத்தை இழைத்துள்ளனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.

    நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன.

    அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்வீட் ஹார்ட்’.
    • வருகிற மார்ச் 14-ந் தேதி படம் திரைப்படம் வெளியாகிறது

    பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஸ்வீட் ஹார்ட்'. படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.

    வருகிற மார்ச் 14-ந் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், "ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.

    மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் பேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

    மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி.

    ரியோ ராஜ் திறமையானவர். சவுகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் வருகிற 14-ந் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்தீஸ்கரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
    • பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் துணை முதல்வர் கலந்து கொண்டார்

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, 'நாட்டின் இறையான்மையைக் காப்பேன்' என்பதற்குப் பதிலாக 'வகுப்புவாதத்தைக் காப்பேன்' என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.

    பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் அருண் சாவோ, மத்திய அமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பூஜா விதானி மேயர் பதவியேற்பு விழாவில் 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது

    • பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
    • உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச் செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும். வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.

    நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். 



    • சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.
    • வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    * ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக்கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது.

    * அரசே ஒரு மொழியை திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி.

    * சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும்.

    * தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது.

    * தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம்.

    * வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    * அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதா இல்லை.

    * இந்தியை படிக்க வேண்டும் என பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கானது என்றார். 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இப்போட்டியில் விளையாடுகிறார். 

    ×