என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 6-4 என வென்றார். 2வது செட்டை ஆர்தர் பில்ஸ் 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 7-6 (9-7) வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூரை 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹோல்ஜர் ரூனே, மெத்வதேவைச் சந்திக்கிறார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சீனாவின் குய்ன்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரோ 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மீனவர்கள் கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி வருகிறார்.
    • தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

    மீனவர்கள் கைதாகும் சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தோம்.

    தூதுக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதி அளித்தோம் என பதிவிட்டுள்ளார்.

    • இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 ஆண்டுகளை கடந்துள்ளது.
    • டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.

    இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், அதிபர் புதின்- அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உக்ரைன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷியாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் உடன்பட்டுள்ளார். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24-ம் தேதி நடக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.

    இதற்கிடையே, நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டு தடை விதித்துள்ளது. ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனாலேயே அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-13, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
    • ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    புதுடெல்லி:

    விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.

    மிகப்பெரிய இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

    அதன்பின், பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.

    இதற்கிடையே, விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இப்பணி வரும் 15-ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

    வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.


    • இளையராஜாவின் பாடல்கள் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
    • சமீபத்தில் லண்டனில் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து அவர் சாதனை படைத்தார்.

    சென்னை:

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

    அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என பதிவிட்டுள்ளார்.


    • தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
    • ரூபாய் என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

    திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது, இந்தச் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

    '₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. என்.தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம் தி.மு.க. ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமின்றி, ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

    ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.

    இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

    'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.

    ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் '₹' போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும். இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.

    இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல, இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
    • நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் என இருவரும் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்து 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்தில் 36 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேனில் கிப்சன் 34 ரன்னும், லிட்ச்பீல்டு 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
    • தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில்," தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு" என்றார்.

    • ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், டிஎஸ் குரூப் உடன் சேர்ந்து கையகப்படுத்தியுள்ளது.
    • மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது.

    ஆதார் பூனவாலாவின் சனோடி பிராப்பர்ட்டிஸ் மற்றும் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தன. இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் (டிஎஸ் குரூப்) அகியவை கையகப்படுத்தியுள்ளன.

    4500 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது. இது ஒழுங்குமுறையின் ஒப்புதலை பொறுத்து நடைமுறைப் படுத்தப்படும்.

    மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிரிவில் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது. மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செலிகா டெவலப்பர்ஸ் மற்றும் ஜகுவார் அட்வைசரி சர்வீசஸ் ஆகியவற்றையும் ராம்தேவ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

    ×