search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ பெருமிதம்
    X

    விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ பெருமிதம்

    • விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
    • ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    புதுடெல்லி:

    விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.

    மிகப்பெரிய இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

    அதன்பின், பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.

    இதற்கிடையே, விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இப்பணி வரும் 15-ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

    வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×