என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதல்​வர் பதவி​யில் தொடர தனக்கு தார்​மீக உரிமை இருக்​கிறதா என்​றும் அவர் தன்னைத் தானே கேட்​டுக்​கொள்ள வேண்டும்.
    • டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்​தையே உலுக்​கி​யுள்​ளது.

    டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாகப் பெறப்பட்டதாக, மதுபான ஆலைகளில் இருந்து தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது.

    மேலும், முதல்வர் பதவியில் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

    தி.மு.க.வின் இந்த மெகா ஊழலை கண்டித்து மார்ச் 17-ந் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

    எல்லோரும் 17-ந்தேதி போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். பெரிய புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை கோரப்பிடியில் இருந்து வெளியே கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • உதய குமார் தர்மலிங்கம் என்ற தமிழர் வடிவமைத்தார்.

    தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 2025-26 பட்ஜெட் லோகோ நேற்று வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியிடப்பட்ட லோகோவில் "ரூ" என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவில் பட்ஜெட் லோகோவாக "ரூ" இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீடியோவில் "ரூ" நீக்கப்பட்டு இந்திய ரூபாயை குறிக்கும் "₹" சின்னம் இடம்பெற்று இருந்தது.

    இந்த நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் "₹" என்ற சின்னத்தை வடிவமைத்தவர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த "₹" ரூபாய் சின்னத்தை உதய குமார் தர்மலிங்கம் என்ற தமிழர் வடிவமைத்தார்.

    தற்போது உதய குமார் தர்மலிங்கம் ஐ.ஐ.டி. கவுகாத்தியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை என். தர்மலங்கம் அரசியல் பின்னணி கொண்டவர் ஆவார். மேலும், இவர்தமிழ்நாட்டின் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்திய ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் இந்தியாவை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

    ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள உதய குமார் இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் ஆவார். எனினும், மத்திய அரசு உதயகுமார் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் போட்டி நடத்தப்பட்டது.

    • நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கூகுளில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை சில ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். உடை, காலணி, நகைகள், கைப்பை, கைக்கடிகாரம், கார்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

    இன்னொரு புறம் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கூகுளில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை சில ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

    பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கனவே விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் தான் நடிக்கும் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது அவர் கையில் அணிந்திருந்த புதிய கைக்கடிகாரம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

    அதன் விலையை ரசிகர்கள் கூகுளில் தேடி ரூ.7 கோடியே 47 லட்சம் என்று கண்டிபிடித்து வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்தும், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்தும் சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்கள் என்பதால், இரு மார்க்கங்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பயணம் செய்கின்றனர்.

    இதனால், முன்பதிவு பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.

    எனவே, பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12636/12635) மற்றும் காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12606/12605) ஆகிய ரெயில்களில் ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன்பின், இந்த ரெயில்களில் 3 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.

    • துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
    • விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது.

    டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது.

    விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்.ஏ.ஏ.) தெரிவித்தது.

    இது குறித்து எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரமாக தரையிறங்கியதோடு டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டதும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது. அதன்பிறகு, விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்."

    "பணியாளர்கள், விமான நிலைய குழு மற்றும் அவசர பாதுகாப்பு படையினரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் அதிவேக பணி காரணமாக அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
    • சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

    நாம்பென்:

    கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் வளாகம், இந்து மற்றும் புத்தமத வழிபாட்டு தலம் ஆகும்.

    அந்த கோவிலை உள்ளடக்கிய அங்கோர் பகுதியின் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. தெற்கு ஆசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக அது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு 10 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கம்போடியாவில் 9-ம் ஆம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த மன்னர்களின் தலைநகரங்களின் சிதிலமடைந்த பகுதிகளை தோண்டி எடுக்க அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் சிதறிக்கிடக்கும் கலைப்பொருட்களை சேகரித்து, கம்போடியாவின் கலாசார பெருமையை பறைசாற்றுவதும் அகழ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

    அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அதை 'ஸ்கேன்' செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துகிறது.

    தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இதனால் தொல்லியல் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்த சிலை, 12 அல்லது 13-வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சிலையின் அங்கமாக கருதப்படும் 29 துண்டுகளுடன் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. 1.16 மீட்டர் உயரம் கொண்ட அச்சிலை, பேயோன் கலை வடிவத்தில் இருக்கிறது.

    இதுகுறித்து தொல்லியல்துறை அறிஞர் நேத் சைமன் கூறியதாவது:-

    இதுவரை கிடைத்தவை எல்லாம் சிறு துண்டுகள். இப்போது சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

    இன்னும் கிடைக்கவில்லை. கலாசார மந்திரியிடம் ஒப்புதல் பெற்று, தலையையும், உடற்பகுதியையும் பொருத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.

    மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார்.

    2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 6-4 என வென்றார். 2வது செட்டை ஆர்தர் பில்ஸ் 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 7-6 (9-7) வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூரை 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹோல்ஜர் ரூனே, மெத்வதேவைச் சந்திக்கிறார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சீனாவின் குய்ன்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரோ 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மீனவர்கள் கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி வருகிறார்.
    • தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

    மீனவர்கள் கைதாகும் சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தோம்.

    தூதுக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதி அளித்தோம் என பதிவிட்டுள்ளார்.

    • இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 ஆண்டுகளை கடந்துள்ளது.
    • டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.

    இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், அதிபர் புதின்- அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உக்ரைன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷியாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் உடன்பட்டுள்ளார். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24-ம் தேதி நடக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.

    இதற்கிடையே, நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டு தடை விதித்துள்ளது. ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனாலேயே அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×