என் மலர்
தலைப்புச்செய்திகள்
- போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
சட்டசபையில் கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெறியேற்றினர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜீரோ ஹவரில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை.
* மதுரையில் காவலர் கொலை தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை.
* தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சுதந்திரமாக நடக்கிறது.
* காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* காவல்துறையினர் இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
* மக்களின் பிரச்சனைகளை பேச அனுமதிக்கவில்லை.
* துணை முதலமைச்சர் பேசும்போது இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக வெளியேற்றம். இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர்.
* தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாத அரசு.
* மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
* தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
* சர்வாதிகார போக்கை சட்டமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூருக்கு வரத் தொடங்கினார்கள். காலை 7 மணிக்கெல்லாம் நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் குவிந்னர். அவர்கள் அனைவரும் தோளில் கட்சி நிற துண்டு அணிந்திருந்தனர்.
காலை 7.30 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதற்காக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 10 மாவட்டத்துக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் எந்த கவுண்டர் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்கள் வழியாக உள்ளே சென்றனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்றனர். கூட்டத் தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்று உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர்கள், 10 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு பெண் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் வந்தனர்.

மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதையடுத்து செல்போன்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் அமர தனி வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட செயலாளர்களுக்கு தனி வரிசையும், மாநில நிர்வாகிகளுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். அவர் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தபோது வழிநெடுக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட 82 கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் 2 குதிரைகளில் வீரர்கள் போல அமர்ந்திருந்த கட்சி தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 செயற்கை யானைகள் தும்பிக்கையை தூக்கியபடி விஜய்க்கு வரவேற்பு அளித்தது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
மேடையின் நடுவில் கட்சித்தலைவர் விஜய் அமர்ந்திருந்தார். மேலும் மேடையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் தாஹிரா, துணை செயலாளர் சி.டி. நிர்மல் குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

முதலில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு என்கிற தாமோதரன் வரவேற்றார்.
பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது பற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கில் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
- ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
* முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எனது காரில் ஏறியபோது நான் ரூட் மாறமாட்டேன் என்றார். ஆனால் டெல்லியில் மாறிவிட்டார்.
* டெல்லியில் 3 கார்கள் மாறித்தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.
* பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அலற செய்தவர் முதலமைச்சர்.
* எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்க.
* தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
* ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை என்றார்.
- சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
- விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
* காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பங்களிப்பு உள்ளது.
* இந்த ஆண்டு சுயஉதவி குழுவினருக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
* வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.O விரைவில் தொடங்கப்பட்டு விடுபட்ட ஒன்றியங்களும் சேர்க்கப்படும்.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.
* விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்றார்.
- மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்
- மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும்போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயே மோதல் முடிந்தாலும் கூட, போதையில் இருந்த எதிர்கும்பல் முத்துக்குமாரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.
முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா வணிகத்தைக் கைவிட்டு திருந்தும்படி முத்துக்குமார் அறிவுரை வழங்கியதால் தான் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மதுபோதையில் படுகொலை செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மது, கஞ்சா ஆகிய இரண்டும் சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று.
மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை அரசு பொருட்படுத்தாதன் விளைவு தான் ஒரு காவலரின் உயிர் பறிபோயிருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த காவலரின் குடும்பம் ஆதரவின்றி நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் , சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மக்கள் நலனா, மது வணிகமா? என்ற வினா எழுந்தால் மக்கள் நலனுக்குத் தான் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுக்கடைகளை மூட வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் இல்லை.
மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்வதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும் தான் மாநில அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது மதுக்கடைகள் தான். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
- இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடல் நேற்று வெளியாக இருந்தது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்ததால் பாடலின் வெளியீட்டை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
- சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக வீண் புரளிகளை பரப்பி வருகின்றனர்.
- குற்றங்கள் எண்ணிக்கை தி.மு.க. ஆட்சியில் குறைந்துவருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு போடுகிறோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மதுரையில் காவலர் படுகொலை செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டனர்.
இதனிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* எந்த பிரச்சனையாக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்ற பின் தான் பேச வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நினைத்த நேரத்தில் பேச அனுமதி அளிக்க முடியாது.
* அவை மரபை பின்பற்றி அ.தி.மு.க.வினர் செயல்பட வேண்டும்.
* மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் கொலை, கொள்ளையை ஊதி பெரிதாக்கி மக்களிடையே பீதி ஏற்படுத்துகின்றனர்.
* அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா என துடிக்கிறார்கள்.
* தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருப்போருக்கு அ.தி.மு.க.வும் தூபம் போடுகிறது.
* சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக வீண் புரளிகளை பரப்பி வருகின்றனர்.
*குற்றங்கள் எண்ணிக்கை தி.மு.க. ஆட்சியில் குறைந்துவருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு போடுகிறோம்.
* எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.
- புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
- 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிய போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு ஃபெரன் டொரெஸ் 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் டேனி ஆல்மோ பெனால்டி முறையை கோலாக மாற்றினார். இதன் காரணமாக பார்சிலோனா அணி போட்டியின் முதல் பாதி முடிவதற்குள் 2-0 என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தியது.
பிறகு நடந்த இரண்டாம் பாதியிலும் பார்சிலோனா அணி போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறவில்லை. இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் முயற்சித்தன. எனினும், பார்சிலோனா அணிக்கு போட்டியின் 77வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி மூன்றாவது கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
- பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.
பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்களள் தொடங்கின. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார்.
இதனை தொடர்ந்தும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.
வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் எஸ்.யு அருண்குமார். நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காண முடிகிறது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தை நேற்று மாலை ரசிகர்களுடன் சத்யம் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சீயான் விக்ரம். அதே சமயத்தில் இவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.
திரைப்படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது ரசிகர்களின் அன்பு கடலால் சூழப்பட்டார் நடிகர் விக்ரம். அதனால் திரையரங்கை விட்டு வெளியே செல்ல அவருக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கூட்டம் சேராமல் இருக்க உடனே பக்கத்தில் இருக்கும் ஆட்டோவில் ஏறி சென்றார் சீயான் விக்ரம். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
- ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
பா.ஜ.க. தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது. இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகி மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். சில மாநிலங்களுக்கு மட்டும் மாநில தலைவர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். புதிய மாநில நிர்வாகிகள் மூலம் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2-வது வாரத்துக்குள் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க. முதல்-மந்திரிகள், மாநில பா.ஜ.க. தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்கிறார். அப்போது புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.






