என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
    • நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,

    தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மாணவப் பருவத்தில் இருந்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் இவர் 2-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார். இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

    இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலின் முக்கிய பகுதிகளை தழுவியே 2012-ம் ஆண்டு 'அரவான்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
    • கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

    'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான 'ஆடு ஜீவிதம்' இருந்தது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் அதிகபட்சமாக 8.95 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தது. 'லூசிஃபர்' முதல் நாளில் 6.10 கோடி ரூபாய் வசூலை கடந்து 2019ம் ஆண்டு முதல் நாள் வசூலாக இருந்தது. இந்த வசூலையெல்லாம் கடந்து 'எம்புரான்' முதல் நாளில் வசூலில் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
    • மருத்துவ ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.

    பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சந்திப்புகளை அவர் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "இன்று காலை புற்றுநோய்க்கான திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது நேர கண்காணிப்பு தேவைப்படும் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்றைய தினம் அவரது மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து 78 வயதான இங்கிலாந்து அரச தலைவர் கிளாரன்ஸ் ஹவுசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மன்னர் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர் மாநில ஆவணங்களில் பணிபுரிந்து வருவதாகவும், அழைப்புகளைச் செய்து கொண்டிருந்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    மருத்துவ ஆலோசனையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.

    • உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா.
    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி

    யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்

    ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

    உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம். திருவாரூர் தியாகராஜர் பவனி. திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-வரவு

    துலாம்- பொறுமை

    விருச்சிகம்- மகிழ்ச்சி

    தனுசு- பாசம்

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நன்மை

    மீனம்-ஜெயம்

    • ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
    • பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

    புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

    ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.

    அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

    கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

    புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

    • பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கனேடிய வாகன தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு உலக சந்தையில் வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கி இருக்கிறது. கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

    "நமது பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது. சமீபத்திய வரி நடவடிக்கைகளுக்கு எங்கள் பதில் போராடுவது, பாதுகாப்பது, கட்டியெழுப்புவது," என்று மார்க் கார்னி கூறினார்.

    "அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நாங்கள் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.

    அமெரிக்காவில் வாகன இறக்குமதி வரி அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கனேடிய வாகன தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    • இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நடத்தப்படும்.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

    அதன்படி சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும்.

    ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்கள் என ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26-வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

    • சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.
    • தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கிறார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு கட்சியை தொடங்கிய விஜய் அதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலை கூட்டணி வைத்து சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொதுக்குழுவுக்கு மாவட்ட அளவில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இன்று காலை 9 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. இதையொட்டி பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையம் முழுவதும் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.

    பகல் 11 மணியளவில் தீர்மானங்கள் வாசிக்கப்பட இருக்கிறது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் இடம்பெற இருக்கிறது. கூட்டணி தொடர்பாக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் விஜய் 12 மணியளவில் பேசுகிறார்.

    இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கிறார்.

    பொதுக்குழு நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனைவரும் கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனை தொடர்ந்து இன்று காலை முதல் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் சென்னயில் குவிந்து வருகின்றனர்.

    இதனிடையே கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக காலை 500 பேருக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார் மற்றும் டீ. மதிய விருந்தாக 2500 பேருக்கு 21 விதமான உணவு பரிமாறப்பட உள்ளது. 

    • துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்.
    • இயலாமையையோ கொண்டாடும் மணநிலைக்கு வந்துவிட்டோமோ.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி ராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர், ரசிகர்கள், பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரபலங்கள் துக்க நிகழ்வுகள் ஊடகங்களில் அதிகம் காட்டப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், துக்க வீடுகளில் ஒருவரின் துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தை ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயல் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.

    ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன் மரண வீடுகள் மௌனிக்கப்படவும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும். துயர்கொள்ளவும் வேண்டியவை

    யாரோ இறந்துபோனார் எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா?

    பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?

    நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.

    ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?

    இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.

    அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் காமெரா இல்லாமல்.

    இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பானர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.

    இதற்காக மாநிலம் முழுக்க 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

    காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 25) நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது.

    ×