என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சீனா வீராங்கனையுடன் இதுவரை 5 முறை மோதி 3-ல் வெற்றி பெற்றுள்ளார்.
    • காலிறுதியில் இந்தோனேசியா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரவரிசையில் 15ஆவது இடம்) உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார்.

    இதில் பி.வி. சிந்து 21-19, 21-15 என எளிதாக வெற்றி பெற்றார். இருவரும் நேருக்குநேர் மோதியதில் பி.வி. சிந்து 3-2 என வெற்றி பெற்றுள்ளார்.

    30 வயதான பி.வி. சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார்.

    இந்தியாவின் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயர்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
    • அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாட்டில் சென்னையில் உள்ள பிரபல இடங்களில் காட்சி படுத்தியுள்ளனர். மமிதாவின் நடனம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. பாடல் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

    • திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு.
    • கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது," தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்கும் தருணம் இது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், கோவில் அருகே கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

    ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவது குறித்த மாற்று திட்டம் சம்பந்தமாக அறிக்கை தர அறநிலையத்துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    • நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன்.
    • நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன் என்கிறார் மம்தா பானர்ஜி.

    மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதவாது:-

    நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப்போகிறேன். அடுத்த வருடம் நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.

    நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரெயில்வேத்துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மம்தா பானர்ஜிக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார்.

    1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.

    • ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

    இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

    • திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் வெளியீடு.
    • விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர்.பாலு ஆஜரானார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்," 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என

    அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.

    ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், அண்ணாமலை," 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை" கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, "சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். அப்போது நான் பதில் சொல்லிக்கிறேன்" என்றார்.

    மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது.
    • முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடக்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் "ஏ" பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.

    இத்தொடர் நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்பட இருக்கின்றன.

    முத்தரப்பு தொடர் நாளை தொடங்கும் நிலையில், மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.

    • இயக்குனர் அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார்
    • அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.

    அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. இதனை தொடர்ந்து அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார்.

    Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

     

    அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படபூஜை விழா நடைப்பெற்றது. அப்போது எடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
    • முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.

    இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய மண்டலம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
    • வடக்கு மண்டலம் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்துள்ளது.

    துலீப் டிராபி காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு காலிறுதி போட்டியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மத்திய மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து டேனிஷ் மாலேவார் உடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 96 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 125 ரன்கள் விளாசினார். மறுமுனையில் விளையாடிய டேனிஸ் வாலேவார் சதம் அடித்ததுடன், இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். அவர் 219 பந்தில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடைய ஸ்கோரில் 35 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். முதல்நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்க மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வடக்கு மண்டல அணி வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தனர். அதேவேளையில் விக்கெட்டுகளையும் இழந்தனர்.

    ஷுபம் கஜூரியா 26 ரன்களும், அன்கித் குமார் 30 ரன்களும், யாஷ் துல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 68 ரன்களும், நிஷாந்த் சிந்து 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வடக்கு மண்டலம் 75.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறை இத்துடன் முதல்நாள் ஆட்ட நிறைவடைய வாய்ப்புள்ளது. கணையா வதாவன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிழக்கு மண்டலம் அணி சார்பில் மணிஷி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • அ.தி.மு.க. இதைத் தெளிவுபடுத்திவிட்டால், அடுத்த நொடியே அவர்களைப் பற்றி பேசமாட்டோம் என்றார் திருமாவளவன்.
    • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் வகையிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வாழ்ந்தவர். அவர் அப்படி கருத்து கூறுவதில் எந்த வியப்பும் இல்லை.

    அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த ஒரு அரசியல் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற சக்திகள் இங்கே வளர்வதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து இங்கே வலுவாக உண்டு.

    ஆனால், அவர்களை பின்பற்றக்கூடிய இன்றைய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்பது அளிப்பது அதிர்ச்சிக்குரியது.

    அந்த துணிச்சலில்தான் ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பக்கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது.

    இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. விஜய்க்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் என்றால், விஜயின் பேச்சிலும், செயலிலும் அந்த சாயம் இருக்கிறது என்று நம்புகின்றனர். அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

    ஆர்எஸ்எஸ் இங்கு வளர்வதற்கு அதிமுகவோ அல்லது வேறு கட்சியோ வாய்ப்பு அளிக்கும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக அமைந்துவிடும்.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் வகையிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    அதிமுக மீது மரியாதை உண்டு. அதிமுகவே ஒரு திராவிட இயக்கம். ஒரு சமூகநீதி இயக்கம். பெரியார் இயக்கம். அண்ணா இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கருத்துகளை முன் வைக்கிறோம். இல்லை என்றால் இதுகுறித்து பேசப்போவதில்லை.

    அதிமுக இதைத் தெளிவுபடுத்திவிட்டால், அடுத்த நொடியே அவர்களைப் பற்றி பேசமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துலீப் டிராபி காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.
    • பிசிசிஐ இப்போட்டிகளை டெலிகாஸ்ட் செய்யாததால் ரசிகர்கள் ஆதங்கம்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

    வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 6 அணிகளாக இதில் பங்கேற்றுள்ளன.

    வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் இடையிலான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

    4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.

    பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஒரு ரசிகர், துலீப் டிராபி காலிறுதி போடடிகள் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. பிசிசிஐ-யிடம் இருந்து மீண்டும் ஒருமுறை அவமானகரமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ-யால் முக்கியமான உள்ளூர் தொடர்களை டெலிகாஸ்ட் கூட செய்ய முடியவில்லை என கடிந்துள்ளார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சிறிய வகையிலான டென்னிஸ் பால் தொடர் கூட லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு முதன்மையான முதல் தரப் போட்டியான துலீப் டிராபியை பிசிசிஐ ஒளிபரப்பாதது மூர்க்கத்தனமானது. உண்மையிலேயே மோசமானது என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

    ×