என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

TNPSC RESULT: குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
- 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
- முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






