என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
    • அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடந்துசெல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியில் அச்சமின்றி சென்றுவர முடியாத நிலை தற்போது உள்ளது.

    தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தெருநாய் கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் தெரு நாய்களை விரட்டும் மந்திரக்கோல் ஒன்றை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதற்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிக்கோடு. இங்குள்ள வடசேரி என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர்.

    இந்த மாணவர்கள் தான் தெருநாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் பொருத்தப்பட்ட மந்திரக்கோலை தயாரித்துள்ளனர். இதில் உள்ள சுவிட்சை அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விரும்பமில்லாத மீயொலி ஒலி மற்றும் ஒருவித வாசனை வெளியாகும்.

    மேலும் லேசான அதிர்வலைகளையும் வெளியிடும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திரக்கோல் வைத்திருக்கும் நபரின் அருகில் செல்லாமல் அங்கிருந்து ஓடிவிடும். மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.

    மேலும் அதிலிருந்து வெளியாகும் வாசனையும் மனிதர்களால் உணர முடியாது. இதனால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. மேலும் பாதிக்கவும் செய்யாது.

    தெருநாய்களை விரட்டும் மந்திரக்கோலை அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்லியில் நடைபெற்ற புதுமை மாரத்தான் என்ற நிகழ்வில் பரிசு கிடைத்துள்ளது.

    இதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தேசியஅளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டுவரும் வகையில் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தங்களின் கண்டு பிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் அதனை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபட்டு வருகின்றனர். 

    • 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென் காவை தோற்கடித்தார்.
    • சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த 32-வது வரிசையில் உள்ள லுசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-7 ( 4-7 ),6-2 ,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 50 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன், பிரான்சிஸ்தியபோ (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பிய னும், முதல் நிலை வீராங்க னையுமான சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் கனடா வை சேர்ந்த லெய்லா பெர்னாண்டசை சந்தித்தார். இதில் சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), புக்சா (ஸ்பெ யின்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் இருக்கும் ஜாஸ்மின் பயோ லினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை எம்மா நவரோவா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன்.
    • ஜாய்கிரிசில்டா திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் அவரது புகார் மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய்கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் அளித்துள்ள புகாரில், மாதம்பட்டி ரங்கராஜூடன் நான் பழகும்போது அவருக்கு திருமணமானது தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்து கேட்டபோது, "முதல் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன். நாம் சேர்ந்து வாழலாம்" என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன். வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்து விடலாம் என்று கூறினார். இதற்கு நான் சம்மதிக்காத நிலையில் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்கள்தான் அப்பா என்று கூறினேன். இது அவருக்கு பிடிக்காததால் என்னை அடித்து உதைத்தார். தற்போது என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஜாய்கிரிசில்டா திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் அவரது புகார் மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல் ஜாய்கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்திருப்பதும், அவருடன் பாலியல் உறவு வைத்து ஏமாற்றி இருப்பதும் குற்றமாக கருதப்படும். எனவே மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி, பாலியல் அத்துமீறல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
    • போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

    சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது. 

    • விஷ்ணு விஷால் கடைசியாக அவரது தம்பி கதாநாயகனாக நடித்து வெளியாக ஓஹோ எந்தன் பேபி படத்தில் நடித்து இருந்தார்.
    • இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    விஷ்ணு விஷால் கடைசியாக அவரது தம்பி கதாநாயகனாக நடித்து வெளியாக ஓஹோ எந்தன் பேபி படத்தில் நடித்து இருந்தார்.

    இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி படப்பிடிப்பை முடித்தனர்.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

    • தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து.
    • வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

    • ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் சிக்னல்கள் அனைத்தும் LED செய்யப்படுகின்றன.
    • 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது.

    ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    இது ஒரு லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த வேரியண்ட் "ட்ரிப் டீல்" எனும் விசேஷ நிறத்தில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் மொத்தத்தில் 140 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பைக்கின் விலை 5590 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5.68 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை ரூ.2.37 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) தொடங்குகிறது. குறிப்பாக ட்ரிப் டீல் நிற வேரியண்ட் ரூ. 2.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் கிடைக்கிறது.

    தோற்றத்தைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்ட் கோன் கிளாசிக்கின் இந்த மாடல் டர்க்கொய்ஸ் மற்றும் ஆரஞ்சு சேர்ந்த நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் க்ரோம் அக்சென்ட்கள் மற்றும் ஆங்கில்டு எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.

    இந்த பைக்கில் கியர் இண்டிகேட்டர், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் சிக்னல்கள் அனைத்தும் LED செய்யப்படுகின்றன.

    ராயல் என்ஃபீல்ட் கோன் கிளாசிக் 350 பைக்கில் 349 சிசி திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 6,100 ஆர்பிஎம்மில் 20.2 ஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது.

    இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது, பின்புறத்தில் டூயல்-ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு, முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ABS கூடுதலாக வழங்கப்படுகிறது.

    • 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன.
    • திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார்.

    தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது.

    ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா பரவிய போது கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கினார்.

    கிராமத்தில் மருமகள்கள் காலரா வராவிட்டால் இறைச்சியைத் தொட மாட்டோம் என்று அப்போது சத்தியம் செய்தனர். இந்த கிராமத்தில் காலரா வராததால் இது தெய்வங்களின் அருள் என்று நம்பி இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள் என்று கிராம மக்கள் கூறினர்.

    • சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.1720 உயர்வு.
    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரந்துக் கொண்டே வருகிறது.

    கடந்த திங்கள் அன்று சவரனுக்கு ரூ. 80, செவ்வாய்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 400, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை அன்று ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து, நேற்று தங்கம் விலை இருமுறை உயர்ந்தது. அதாவது, காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.520-ம் என சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக உயர்ந்து ரூ. 76,280-க்கும் விற்பனையானது

    இந்தநிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85, சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.

    கடந்த 2 நாட்களில் ரூ.1720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.134க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-08-2025- ஒரு கிராம் ரூ.134

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    • ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
    • ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை ‘புதிய காமதேனு’ என்று சொல்லலாம்.

    அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

    ரிலையன்ஸ் இ்ண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.

    அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

    10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளது.

    நாட்டில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைப்பதை ஜியோ உறுதி செய்தது. அதுபோல், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

    இந்தியாவில் பிரமாண்ட அளவில் ஏ.ஐ. உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உருவாக்கும். பசுமை ஆற்றலால் இயக்கப்படும் ஜிகாவாட் அளவிலான, ஏ.ஐ. தயார் தரவு மையங்களை அமைக்கும். ஜாம்நகரில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவின் வளரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதிகள் படிப்படியாக வழங்கப்படும்.

    இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏ.ஐ. உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல், இந்தியாவுக்கு ஏ.ஐ. சேவைகளை கட்டமைத்தல், ஏ.ஐ. திறனை வளர்த்தல் ஆகியவைதான் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் 4 தெளிவான நோக்கங்கள்.

    வாடிக்கையாளர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நம்பகமான, பயன்படுத்துவதற்கு எளிதான ஏ.ஐ. சேவைகளை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் வழங்கும்.

    கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற தேசிய முக்கியத்துவம்வாய்ந்த துறைகளுக்கு தீர்வுகள் அளிக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் சேவை கிடைக்கும்.

    ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை 'புதிய காமதேனு' என்று சொல்லலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
    • மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    நேற்று இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்தது. இருதரப்பினரும் தடல்புடலாக திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தனர்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மணமகனுக்கும், தனக்கும் நீண்டகாலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே மணமகனை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி. அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்றார்.

    இதை ஏற்க மறுத்த மணமகள், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். ஆனால் மணமகன், அந்த பெண்தான் தனக்கு மிகவும் முக்கியம், அவளுடன் தொடர்பை கைவிடமுடியாது என்றார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் செய்வதறியாமல் திகைத்தார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மணமகள் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் இதைக்கேட்டு செய்வதறியாமல் புலம்பினர்.

    இந்த குழப்பத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நாளும் வந்தது. நேற்று காலையிலேயே மணமகன் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர். மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.

    அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில், திடீரென இளம்பெண் தனக்கு இந்த மணமகனை பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்றார்.

    இதைக்கேட்டு மணமகன் உள்பட அனைவரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்தனர். என்ன நடந்தது? ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? என மணமகளிடம் கேட்டனர்.

    அப்போது, அவர் மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. எனவே, நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மணமகள் கூறினார்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்தவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் மணமகன் வீட்டார் கடும் ஆவேசத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    ×