என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு
- பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 01.12.25 அன்று ஆய்வு கூட்டம் நடத்தி, பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியா கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு ரூ.20,000/-ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.
இவ்வுத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இயற்கைப்பேரிடர்களால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளின் துயர்துடைக்க நேசக்கரம் நீட்டி, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி. கிருஷ்ணகிரி. மதுரை. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி. புதுக்கோட்டை, இராமநாதபுரம். இராணிப்பேட்டை சேலம். சிவகங்கை. தென்காசி. தஞ்சாவூர், தேனி. திருநெல்வேலி, திருப்பத்தூர். திருவள்ளுர், திருவாரூர். தூத்துக்குடி. திருப்பூர். திருவண்ணாமலை. திருச்சி. வேலூர். விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
- குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
- 2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.
கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.
காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.
UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.
முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.
அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.
இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன.
முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன.
தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு.
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது.
நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் .
2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, "திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்" என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
- சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரம் ஜல்லிட்டு போட்டி தொடங்கியுள்ளது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்! வெல்வோம்_ஒன்றாக!" என்று தெரிவித்துள்ளார்.
- பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
- இன்று மாலை சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே... முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு.
உயிரிழந்த திரு.கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்.
- கலை நிகழ்ச்சிகள் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும்
'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை' முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று (ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், மேயர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"சென்னை சங்கமம் என்பது தமிழ் சங்கமமாக, ஒட்டுமொத்த கலைஞர்களின் சங்கமமாக, வெற்றி சங்கமமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் கலை, பண்பாட்டு துறை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. கலைஞர்கள் தங்கள் திறமைகளை மிக எழுச்சியுடன் பறைசாற்றியுள்ளனர். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட். வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரிய இருக்கிறது; புரியும். அதற்காக நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்." என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெற உள்ளன.
- ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
- மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
- ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில,
"பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






