என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 184 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்கள் எடுத்து தோற்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றனது.

    இதில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிரம் 40 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.20 தொடரில் இருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஆட்ட நாயகன் விருது மார்கிரமுக்கு வழங்கப்பட்டது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

    ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
    • நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.

    இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.

    அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.

    எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    என்று பட்லர் கூறினார். 

    • டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
    • நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார்.

    இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.

    தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    என்று ரோகித் கூறினார்.

    இதனால் இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அறிமுகமானார்.
    • பண்ட் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல வெற்றிகளை பரிசாக வழங்கியுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெற்றுள்ளார். அதற்காக தீவிரமாக பயிற்சியில் ரிஷப் பண்ட் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை அடுத்து மற்றொரு துறையில் பண்ட் கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.

    2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார்.

    • கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு குஜராத் அணி தள்ளப்பட்டிருந்தது.
    • கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.

    8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

    இந்த தொடர் வரும் 8-ம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெறவில்லை.

    இந்நிலையில் தொடை எலும்பு காயம் காரணமாக கோட்ஸி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.

    முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.

    • நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர்.
    • தென் ஆப்பிரிக்காவில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

    பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர். இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றனர். இந்த ஆட்டத்திற்குப் பிறகு அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் தென் ஆப்பிரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி:-

    டெம்பா பாவுமா, ஜெரால்ட் கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்டர், மிஹ்லாலி மபோங்வானா*, செனுரன் முத்துசாமி*, கிடியோன் பீட்டர்ஸ்*, மீகா-ஈல் பிரின்ஸ்*, ஈதன் போஷ்*, மேத்யூ ப்ரீட்ஸ்கே*, ஜேசன் ஸ்மித், மற்றும் கைல் வெர்ரைன்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
    • அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது.

    8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நின்ற ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் கிறிஸ் கஃபானி, குமார் தர்மசேனா, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்,

     

    போட்டி நடுவர்கள் குழுவிற்கு டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே மற்றும் ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். பூன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்தார். அதே நேரத்தில் மதுகல்லே 2013 இறுதிப் போட்டிக்கு பிறகு மீண்டும் வருகிறார். மேலும் பைக்ராஃப்ட் 2017 போட்டியிலும் இடம்பெற்றார்.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவில் இருந்து எந்த நடுவர்களையும் ஐ.சி.சி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நடுவர்கள் விவரம்:-

    குமார் தர்மசேனா

    கிறிஸ் கஃபானி

    மைக்கேல் கோ

    அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    ரிச்சர்ட் கெட்லெபரோ

    அஹ்சன் ராசா

    பால் ரீஃபெல்

    ஷர்புத்தோலா இப்னே ஷாஹித்

    ரோட்னி டக்கர்

    அலெக்ஸ் வார்ஃப்

    ஜோயல் வில்சன்

    போட்டி நடுவர்கள் விவரம்:-

    டேவிட் பூன்

    ரஞ்சன் மதுகல்லே

    ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்

    • டி20 பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் ரவி பிஷ்னாய், 9-வது இடத்தில் அர்ஷ்தீப் உள்ளனர்.

    அதன்படி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10-ல் மற்ற இந்திய வீரர்களாக 3-வது இடத்தில் திலக் வர்மாவும் 5-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் உள்ளர். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.

    • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
    • போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.

    இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×