என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டெல்லி- கொல்கத்தா போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர்.
    • கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

    அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டுள்ளது.

    மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதில் இது தான் ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றும் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற தலைப்புடன் கொல்கத்தா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.

    • 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும்.
    • இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம்.

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த தொடர் உள்ளூரில் உள்ள இளம் வீரர்ங்களை உருவாக்க உதவியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதே ஆன வீரர் சதம் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இப்படி இளம் வீரர்களின் திறமைகளை கண்டறியவும் அவர்களின் திறமைகளை வளர்க்கவும் டி20 லீக் உதவிகரமாக உள்ளது.

    அந்த வகையில் கென்யாவில் முதன்முறையாக பிராஞ்சைஸ் அடிப்படையிலான டி20 லீக், சிகேடி20 (CKT20) என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ளது. இந்த டி20 லீக்குகள் மூலம் கிரிக்கெட்டை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கும், உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவதற்கும் கென்யா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

    6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.

    இந்த லீக்கிற்கு துபாய்/இந்தியாவைச் சேர்ந்த AOS Sport Tournament நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளது. முதல் சீசனுக்கு 300,000 அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கென்யா 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. அதன்பிறகு 2011 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் 2014-ல் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை கென்யா இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது.
    • ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 48 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது. ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 போட்டியில் வெற்றியும் 3 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது. ஆர்சிபி அணி அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மே 3-ந் தேதி எதிர் கொள்கிறது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி கேப்டன் பட்டிதார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மகளிர் ஆர்சிபி வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீலும் இவர்களுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலிக்காக இந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அணி ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.

    ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

    முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும்  இருக்க வாய்ப்புள்ளது.

    5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக தள்ளாடுகிறது. 9 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக) 7 தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது. முதலாவது மற்றும் 7-வது ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை அணி மற்ற ஆட்டங்கள் அனைத்திலும் சறுக்கலை சந்தித்தது. இதுவரை 21 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரியான கலவையை கண்டறிய முடியாமல் தவிக்கிறது. சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சென்னை அணி நடப்பு தொடரில் இதுவரை இல்லாத நிகழ்வாக தொடர்ச்சியாக 4 தோல்வியை தழுவியிருக்கிறது.

    சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது. ஆக்ரோஷமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணி ஒரே ஒரு முறை மட்டுமே 180 ரன்களை கடந்து இருக்கிறது. ஷிவம் துபே (242 ரன்), ரச்சின் ரவீந்திரா ஓரளவு நன்றாக செயல்படுகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. கடந்த 2 ஆட்டங்களில் களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, முந்தைய ஆட்டத்தில் அறிமுகமான டிவால்ட் பிரேவிஸ் துரிதமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்களாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா (323 ரன்), பிரப்சிம்ரன் சிங் (292), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் மிரட்டுகிறார்கள்.

    முல்லாப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெற முயற்சிக்கும். அதே நேரத்தில் புள்ளிபட்டியலில் வலுப்படுத்திக் கொள்ள பஞ்சாப் அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே களத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் சென்னையும், 15 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஷேக் ரதீஷ், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா அல்லது வன்ஷ் பேடி, டோனி (கேப்டன்), அன்ஷூல் கம்போஜ் அல்லது ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், மார்கோ யான்சென், ஜோஷ் இங்லிஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டெல்லியில் நேற்று ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி நடந்தது.
    • இதில் கொல்கத்தா அணி, டெல்லி அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

    நாங்கள் பவர் பிளேவில் சரியாக செயல்படவில்லை. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்து விட்டோம் என நினைக்கின்றேன்.

    நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் சரியான ஷாட்களை ஆடவில்லை. சிறிய முறையில் அவுட்டாகி விட்டோம். பவர் பிளேக்கு பிறகு கொல்கத்தா அணியை நாங்கள் நல்ல முறையில் ரன் அடிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம்.

    நாங்கள் இன்று சரியாக செயல்படவில்லை. குறைந்தபட்சம் ஒன்று அல்லது மூன்று வீரர்கள் நன்றாக அடித்து இருந்தால் வெற்றியைப் பெற்று இருக்கலாம். ஆனால் இலக்கிற்கு அருகே வந்து தான் தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

    களத்தில் பொறுப்பான ஆட்டத்தை ஒவ்வொரு வீரர்களும் வெளிப்படுத்த வேண்டும். விப்ராஜ் ரன் குவித்து வந்தபோது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கடைசி வரை ஆஸ்டோஸ் சர்மா நின்று இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

    தற்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி இருக்கின்றது. இதில் மீண்டு வந்து விடுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 204 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. ரகுவன்ஷி 44 ரன்னும், ரிங்கு சிங் 36 ரன்னும், சுனில் நரைன் 27 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், அக்சர் படேல், விப்ரஜ் நிகாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அக்சர் படேல் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் விபராஜ் நிகம் போராடி 19 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    கொல்கத்தா அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு கிடைத்த 4வது தோல்வி இதுவாகும்.

    கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது.
    • குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்களும், சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்களும் அடித்தனர்.

    ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தையே குர்பாஸ் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட 8 ரன்கள் கிடைத்தன.

    2ஆவது ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சுனில் நரைன் சிக்சருக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் கிடைத்தன.

    ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த குர்பாஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்கள் விளாசினார். குர்பாஸ் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா 3 ஓவரில் 48 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை நிகம் வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.

    ரகானே 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

    ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை 200 நோக்கி அழைத்துச் சென்றனர். கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.

    ரகுவன்ஷி 32 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18 ஓவரில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரில் 14 ரன்களும், 20 ஓவரில் 9 ரன்களும் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

    குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரசல், ரோவ்மான் பொவேல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

    • டாஸ்மின் பிரிட்ஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா 140 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா வால்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் சதம் விளாசி அசத்தினார்.

    இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • குஜராத் அணியின் 209 இலக்கை 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டியது.
    • ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவரில் 212 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உலக சாதனை படைத்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கோரை வேகமாக துரத்திய அணியாக ராஜஸ்தான் சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக 2018-ம் ஆண்டு, மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 16 ஓவர்களில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை துரத்தியதே சாதனையாக இருந்த நிலையில், ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

    டி20 வரலாற்றில் அதிவேகமாக 200+ ரன்களைச் சேசிங் செய்த அணிகள்

    15.5 ஓவர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், 2025*

    16.0 ஓவர்கள் - சர்ரே vs மிடில்செக்ஸ், 2018.

    16.0 ஓவர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், 2024

    16.0 ஓவர்கள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 2025

    16.3 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023

    இது தவிர, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா மூன்று முறை இதனைச் செய்துள்ளது. அதேசமயம் உலகளில் மிடில்செக்ஸ் அணி மட்டுமே 4 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரதிகா 78 ரன்கள் எடுத்தார்.

    இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.

    இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.

    முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

    அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-

    பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா)

    சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    பெலிண்டா கிளார்க் - 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    வெண்டி வாட்சன் - 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    188 - தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017

    171* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017

    154 - பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025

    143* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022

    138* - ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005

    ×