என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கென்யாவிலும் வருகிறது டி20 லீக்: ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீரர்களுக்கு இடம்
- 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும்.
- இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த தொடர் உள்ளூரில் உள்ள இளம் வீரர்ங்களை உருவாக்க உதவியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதே ஆன வீரர் சதம் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இப்படி இளம் வீரர்களின் திறமைகளை கண்டறியவும் அவர்களின் திறமைகளை வளர்க்கவும் டி20 லீக் உதவிகரமாக உள்ளது.
அந்த வகையில் கென்யாவில் முதன்முறையாக பிராஞ்சைஸ் அடிப்படையிலான டி20 லீக், சிகேடி20 (CKT20) என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ளது. இந்த டி20 லீக்குகள் மூலம் கிரிக்கெட்டை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கும், உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவதற்கும் கென்யா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.
இந்த லீக்கிற்கு துபாய்/இந்தியாவைச் சேர்ந்த AOS Sport Tournament நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளது. முதல் சீசனுக்கு 300,000 அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கென்யா 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. அதன்பிறகு 2011 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் 2014-ல் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை கென்யா இழந்தது குறிப்பிடத்தக்கது.






