என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.

    நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 107 ரன்னில் சுருண்டது.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று தொடங்கியது. இந்தியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா ஹெனில் படேல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    பின்னர் 108 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.

    மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • மான்செஸ்டர் அணி தங்களது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அறிவித்துள்ளது.
    • அத்துடன் லேகோவுக்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இடம் பிடித்துள்ளது.

    100 பந்துகள் கொண்ட தொடர் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி தொடராக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் தங்களது இரு அணிகளிலும் ஜோஸ் பட்லர், கிளாசன், நூர் அகமது, லியாம் டாசன், மெக் லேனிங், ஸ்மிரிதி மந்தனா, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என அறிவித்துள்ளது.

    மேலும், லோகோவையும் வெளியிட்டுள்ளது.

    • திலக் வர்மா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • முகமது சிராஜ் லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ரஞ்சி டிராபி தொடரில் ஐதாராபாத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப் கடைசி இரண்டு போட்டியில் வருகிற 22-ந்தேதி மும்பையையும், ஜனவரி 29-ந்தேதி சத்தீஸ்கர் அணியையும் ஐதராபாத் எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டு வந்தார். அவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் திலக் வர்மா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    முகமது சிராஜ் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

    • ஆஷஸ் தொடரில் 31 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • முதன்றையாக ஐசிசி-யின் மாதாந்திர விருதை கைப்பற்றியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், டிசம்பர் (2025) மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

    ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 4-1 என இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. இந்த தொடரில் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இது விருதை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

    ஐசிசி-க்கு மாதாந்திர விருதை முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வென்றிருந்தார். அதன்பின் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் மாதாந்திர விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இவருடன் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி, வெஸ்ட் இண்டீஸின் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    • முதல் செட்டை 4-6 எனவும், 3-வது செட்டை 2-6 எனவும் மேடிசன் கீஸ் இழந்தார்.
    • 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.

    அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்கொண்டார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மேடிசன் கீஸ் இந்த போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த நிலையில், 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 2-6 என இழந்து ஏமாற்றம் அடைந்தார். எம்போகோ அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல்லை எதிர்கொள்கிறார்.

    இந்த வருடத்தின் முதல் கிராண்ஸ்ட்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மேடிசன் கீஸ் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஒலேக்சான்ட்ரா ஒலிய்னிகோவாவை எதிர்கொள்கிறார்.

    • காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இதற்கிடையே, முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில், காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 284 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செலின் அபார சதத்தால் 286 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முதல் பந்தில் பவுண்டரி அடித்து 1750 ரன்கள் சாதனையைக் கடந்தார். இவர் 1773 ரன்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    • பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மும்பை:

    டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.

    நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.

    193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

    இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் மெக் லானிக் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஹர்தின் தியோ 47 ரன்னில் ரிடயர்டு அவுட்டில் வெளியேறினார்.

    டெல்லி அணி சார்பில் ஷபாலி வர்மா, மரிஜான்னே காப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா- லீசெல் லீ ஜோடி அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லீசெல் லீ அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
    • நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.

    பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

    இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். வில் யங் 98 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். டேரில் மிட்செல் அபாரமாக விளையாடி 96 பந்தில் சதம் விளாசினார்.

    இருவரும் நிலைத்து விளையாட நியூசிலாந்து அணி வெற்றி நோக்கி பயணித்தது. இருவரும் ஆட்டமிழக்காமலும், அதிரடியை நிறுத்தாமலும் விளையாடியதால் நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும், கிளென் மிட்செல் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    ×