என் மலர்
விளையாட்டு
- சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார்.
- திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் இந்தியா சார்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 44 வீரர், வீராங்கனைகள் களம் இறக்கப்படுகிறார்கள்.
இதில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் ஷூவ் யன் ஜங்கை (சீனதைபே) சந்திக்கிறார். முன்னதாக சிந்து சக நாட்டவரான அனுபமா உபத்யாயாவுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது. ஆனால் கடைசிகட்ட மாற்றங்களால் சிந்துவின் எதிராளியும் மாறி விட்டார்.
சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும். கடந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவிய சிந்து உள்ளூர் சூழலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஒலிம்பிக் சாம்பியன் அன்சே யங் (தென்கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷியி (சீனா), முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், மாள்விகா பன்சோத், அனுபமா உபத்யாயா ஆகியோரை பொறுத்தவரை ஓரிரு சுற்றை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.
29 வயதான சிந்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'திருமணத்திற்கு பிறகு எனது முதல் போட்டி இதுவாகும். அத்துடன் புத்தாண்டிலும் முதல் தொடராகும். எனவே எல்லாமே புதுசு. உள்ளூர் ரசிகர்கள் முன் எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
பாரீஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாக மீண்டு வருவதற்கு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. கடந்த ஆண்டின் கடைசி பகுதியில் கிடைத்த இடைவெளி புத்துணர்ச்சியுடன் மீண்டு வருவதற்கு உதவியது. என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வெறி எனக்குள் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 3-ம் நிலை வீரர் ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), இந்தியாவின் லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடைசி நேரத்தில் 'நம்பர் ஒன்' வீரர் ஷி யுகி (சீனா), ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அந்தோணி கின்டிங் (இந்தோனேசியா) ஆகியோர் விலகியதால் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரண்ஜார்ஜ் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
2022-ம் ஆண்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் சுற்றில் சீனதைபேயின் லின் சுன் யியை எதிர்கொள்கிறார். பிரனாய் முதல் ரவுண்டில் சு லீ யாங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்டுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், ஜப்பானின் கோடாய் நராவ்காவுடன் மோதுகிறார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் மலேசியாவின் மான்வெய் சோங்- டீ காய் வுன் இணையை சந்திக்கிறது. பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை தங்களது சவாலை ஜப்பானின் அலிசா இகராஷி- அயகோ சுகுரமோட்டோ ஆகியோருடன் தொடங்குகிறார்கள்.
சாத்விக்- சிராக் ஷெட்டி கூறுகையில, 'கடந்த ஆண்டு மலேசிய ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி விட்டு இங்கு (இந்திய ஓபன்) வந்தோம். இங்கும் இறுதிசுற்றை எட்டினோம். இந்த சீசனில் மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறி விட்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டின் முடிவை விட மேலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்' என்றனர்.
ஒற்றையரில் கோப்பையை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.58 லட்சமும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.61 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள்.
- எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது.
புதுடெல்லி:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரான கபில்தேவின் (51 விக்கெட்) சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டனான 66 வயதான கபில்தேவ், கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.
இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-
தயவு செய்து கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிடாதீர். ஒரு தலைமுறை வீரர்களை, மற்றொரு தலைமுறையினருடன் ஒப்பிடக்கூடாது. அது தேவையில்லாத ஒன்று. டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள். ஆனால் எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது. அதனால் தான் இருவேறு தலைமுறையினருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று சொல்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரை நீக்கியது சரியான முடிவா? என்று கேட்கிறீர்கள். அது குறித்த நான் எப்படி கருத்து சொல்ல முடியும். இது தேர்வாளர்களின் வேலை. அதனால் நான் ஏதாவது சொன்னால் அது தேர்வாளர்களை குறைசொல்வதாகி விடும். அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.
ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகப்பெரிய வீரர்கள். விளையாடுவதற்கு சரியான நேரம் எது, ஓய்வு பெற வேண்டிய தருணம் எது என்பது அவர்களுக்கு தெரியும்.
என்று அவர் கூறினார்.
- இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
- இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.
கராச்சி:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரின் முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்க தேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 - 50 சதவீதமாக குறைந்து விடும்.
என்று கூறினார்.
- முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ ஆகியோர் மோதினர்.
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை கோகோவிச் 4-6 என இழந்தார். அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பானிஷ்) அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
- இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
- பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.
இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.
- 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-
பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ரபடா, ரையன் ரிக்கெல்டான், ஷம்சி, ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
- ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமில்லை.
- இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான தன்னுடைய இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி:-
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல்.
- 14 வயதான இரா ஜாதவ் 346 ரன்கள் (157 பந்து, 42 பவுண்டரி, 16 சிக்சர்) விளாசி பிரமிக்க வைத்தார்.
- பெண்கள் ஜூனியர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் லிசெல் லீ 427 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக நீடிக்கிறது.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடந்து வருகிறது.
இதில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய 14 வயதான இரா ஜாதவ் 346 ரன்கள் (157 பந்து, 42 பவுண்டரி, 16 சிக்சர்) விளாசி பிரமிக்க வைத்தார்.
இந்த வகை போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இருப்பினும் பெண்கள் ஜூனியர் கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் லிசெல் லீ 427 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆடிய மேகாலயா வெறும் 19 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 544 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
- கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது அவரது பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சென்னையில் நடந்த பந்து வீச்சு சோதனையிலும் அவர் தேறவில்லை. இதனால் அவரது பந்துவீச்சுக்கு தடை தொடருகிறது. இதன் காரணமாகவே ஷகிப் அல்-ஹசன் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற இருந்த அவரது கனவு கலைந்தது. பார்மின்றி தடுமாறும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி வருமாறு:-
நஜ்முல் ஷூசைன் ஷன்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹரிடாய், சவுமியா சர்கார், தன்சித் ஹசன், மக்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், பர்வேஸ் ஹூசைன், நசும் அகமது, தன்சிம் ஹசன், நஹித் ராணா.
- 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் வரிசையில் நானும் கே.எல். ராகுலும் இணைந்து சிறப்பாக விளையாடினோம்.
- இறுதிப் பேட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
அதற்கு முன்னதாக வரை இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தினர்.
அந்த மிகப்பெரிய ஒருநாள் திருவிழாவிற்குப் பிறகு அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி நடக்கிறது.
இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் எனத் தெரியவில்லை.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
2023 உலகக் கோப்பையில் நானும், கே.எல். ராகுலும் மிடில் ஆர்டர் என்ற முக்கியமான ரோலில் விளையாடினோம். நாங்கள் இருவரும் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இறுதிப் போட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டால், இது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்.
இவ்வாறு ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
- காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவது கடினம் என செய்திகள் வெளியானது.
- ஆனால் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பெயர் இடம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த மாதம் 19-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்துள்ளார். அத்துடன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பேட் கம்மின்ஸ்க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்பட்டு வந்தது. தற்போது முதற்கட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை காயம் சரியாகவில்லை என்றால் கடைசி நேரத்தில் மாற்றப்படலாம்.
15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி விவரம்:-
கேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலேக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், லபுசேன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.
குரூப் "பி"-யில் ஆஸ்திரேலியா இடம் பிடித்துள்ளது. பிப்ரவரி 22-ந்தேதி இங்கிலாந்தையும், பிப்ரவரி 25-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும், 28-ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
மார்ச் 4-ந்தேதி முதல் அரையிறுதி போட்டியும், மார்ச் 5-ந்தேதி 2-வது அரையிறுதி போட்டியும், மார்ச் 9-ந்தேதி இறுதிப் போட்டி லாகூர் அல்லது துபாயில் நடக்கிறது.
- முதல் பாதி நேரத்தில் பார்சிலேனாா 4 கோல்கள் அடித்து அசத்தியது.
- 10 பேருடன் விளையாடினாலும் பார்சிலோனா அதிக கோல்கள் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஸ்பெயின் சூப்பர் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் எம்பாப்பே கோல் அடித்தார்.
22-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் லேமின் யமல், 39-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. இதற்கிடையில் 36-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ராபர்ட் லெவாண்டோஸ்கி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 3-1 என முன்னிலைபெற்றது.
முதல்பாதி நேர ஆட்டம் 45-வது நிமிடத்தில் முடிவடைந்தது. முதல்பாதி நேர ஆட்டத்தின்போது காயத்தால் ஆட்டம் நிறுத்தம் போன்றவற்றால் கூடுதல் நேரம் (Injury Time) வழங்கப்பட்டது. இதன் 10-வது நிமிடத்தில் (45+10) பார்சிலோனா அணியின் அலேஜாண்ட்ரோ கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் பார்சிலோனா 4-2 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 48-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 5-1 என முன்னிலைப் பெற்றது.
56-வது நிமிடத்தில் பார்சிலோனா வோஜ்சியெச் ஸ்செஸ்னி ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ரியல் மாட்ரிட் 60-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ரோட்ரிகோ இந்த கோலை அடித்தார். அப்போது பார்சிலோனா 5-2 முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் ரியல் மாட்ரிட் வீரர்களை கோல் அடிக்கவிடாதபடி பார்சிலோனா வீரர்கள் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆட்டம் முடியும் வரை ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் அதற்கு மேல் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்று சூப்பர் கோப்பையை கைப்பறறியது.






