என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • லிவர்பூல் அணிக்கெதிராக நாட்டிங்காம் பாரஸ்ட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.
    • 66-வது நிமிடத்தில் டியாகோ ஜோட்டா கோல் அடித்து அணி டிரா செய்ய உதவி புரிந்தார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் 2024-2025 சீசனுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி ஒன்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், நாட்டிங்காம் பாரஸ்ட் (Nottm Forest) அணியுடன் மோதின. இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நாட்டிங்காம் பாரஸ்ட் அணியின் கிறிஸ் வுட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    பின்னர் 2-வது பாதிநேர ஆட்டம் தோடங்கியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டியாகோ ஜோட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    போட்டி டிராவில் முடிந்தாலும் லிவர்பூல் 20 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்று 47 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நாட்டிங்காம் பாரஸ்ட் இந்த டிரா மூலம் 21 போட்டிகளில் 12 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 41 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சனல் 20 போட்டிகளில் 11-ல் வெற்றி, 7-ல் டிரா, 2-ல் தோல்வி என 40 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    மான்செஸ்டர் சிட்டி

    மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ப்ரென்ட்போர்டு அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் பில் ஃபோடன் 66 மற்றும் 78-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

     இதனால் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 நிமிடத்தில் ப்ரென்ட்போர்டு அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் விஸ்டா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் காயத்திற்கான நேரத்தில் (90+2) கிறிஸ்டியன் நோர்கார்டு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த டிரா மூலம் மான்செஸ்டர் சிட்டி 21 போட்டிகள் முடிவில் 10 வெற்றி, 5 டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்த பிடித்துள்ளார். வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும்.

    • இந்திய ஆண்கள் அணி முதல் சுற்று ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
    • 3-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பெருவை இன்று சந்திக்கிறது.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை 2025 தொடர் ஜனவரி 13-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பிரதிக் வைக்கர் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி விளையாடி வருகிறது. இதேபோல் பிரியங்கா இங்கிளே தலைமையிலான இந்திய பெண்கள் அணியும் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற குரூப் ஏ போட்டியில் ஆண்களுக்கான ஆட்டத்தில் இந்தியா- பிரேசில் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் தாக்குதலைத் தேர்வு செய்தது. வழக்கம்போல் தங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் 36 புள்ளிகளைப் பெற்றது.

    இரண்டாவது சுற்றில், பிரேசில் தங்கள் திடமான தாக்குதல் திறன்களுடன் சிறப்பான முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு மிகவும் வலுவாக இருந்தது. எதிராளிகளை 16 புள்ளிகளுக்குள் கட்டுப்படுத்தியது. இரண்டாவது சுற்றின் முடிவில், இந்தியா முதல் இன்னிங்ஸில் பிரேசிலை விட 22 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4-வது சுற்றின் முடிவில் 30 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி 64-34 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.


     



    முன்னதாக, இந்திய மகளிர் அணி தென் கொரியாவை 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் பிரச்சாரத்தை அற்புதமாகத் தொடங்கியது. 

    • 2-வது சுற்று ஆட்டத்தில் ஷபலென்கா- ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.
    • ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான ஷபலென்கா ( பெலாரஸ்) இன்று காலை நடத்த 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.

    இதில் ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் லெசி மெர்டன்சை (பெல்ஜியம்) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    5-வது வரிசையில் உள்ள குயன்வென் ஜெங் (சீனா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியை சேர்ந்த லாரா ஷீக்மண்ட் 7-6 (7-3), 6-3 என்ற சேர் செட் கணக்கில் ஜெங்கை வீழ்த்தினார். 

    14-வது வரிசையில் இருக்கும் மிர்ரா ஆன்ட்ரியா (ரஷியா), ஒல்கா டேனி லோவிச் (செர்பியா) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    • காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை.
    • பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் கவுதம் காம்பீர்-கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர்-தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நிராகரித்துள்ளது. (பி.சி.சி.ஐ.)யின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா இது தொடர்பாக கூறியதாவது:-

    காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார். விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும், மோசமாக இருப்பதும் நடப்பதுதான்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19-ந்தேதி இறுதி செய்யப்படும். தேர்வு குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அணியை முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

    • ஜப்பான் வீரருக்கு எதிராக முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றினார்.
    • 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் தரநிலை பெறாத ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதில் முதல் செட்டை 6-0 என எளிதான அல்காரஸ் கைப்பற்றினார். அல்காரஸின் ஒரு சர்வீசை முறியடித்து ஒரு கேமை கூட நிஷியோகாவால் வெல்ல முடியவில்லை.

    2-வது செட்டிலும் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

    3-வது செட்டில் மட்டும் நிஷியோகா சற்று நெருக்கடி கொடுத்தால். என்றாலும் அல்காரஸ் 6-4 எனக்கை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    • பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார்.
    • இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் வெளியே நின்றார்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3-வது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

    இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 26 ரன்களிலும் பிரிட்டோரியஸும் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பார்ல் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

    இத்தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தமிழக வீரர் களமிறங்கினர். அப்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியின் ஃபினிஷராக தேர்வுசெய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.

    ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை ரன் அவுட் மூலம் வீணாக்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இன்னிங்சின் 13-வது ஓவரை ஜார்ஜ் லிண்டே வீசிய நிலையில், அந்த ஓவரின் 2-வது பந்தை தினேஷ் கார்த்திக் ஆஃப் சைடில் அடித்துவிட்டு சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார்.

    ஆனால் மறுபக்கம் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த பிஜோர்ன் ஃபோர்டுயின் முதலில் ரன்னிற்கு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியேறி அதன்பின், வரமறுத்து எதிர்முனையின் க்ரீஸிக்கு திரும்பினார்.

    ஆனால் அச்சமயத்தில் தினேஷ் கார்த்திக் பாதி பிட்சை கடந்திருந்த காரணத்தால் அவரால் மீண்டும் க்ரீஸுக்குள் நுழையமுடியவில்லை. அதேசமயம் பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார். இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் எதிர் முனையில் இருந்த வீரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

    இதனை சுதாரித்து கொண்ட விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டன் பந்தை கையில் வைத்து கொண்டு ஸ்டெம்பை தூக்கி ரன் அவுட்டை உறுதி செய்தார். தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தால் கூட ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா, பேட் கம்மின்ஸ், டான் பேட்டர்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
    • 3 டெஸ்ட்டில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.

    ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.

    அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். இது போன்று மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸ் 4 விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது. எனினும் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் சொதப்பினால், 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தால் அது மட்டும் இல்லாமல் உலக அளவில் சிறந்த பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார். இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 200 வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை கிடைத்தது.

    அது மட்டும் இல்லாமல் குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவருக்கு சிறந்த வீரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது. பும்ராவுக்கு கிடைத்த இந்த கௌரவத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி (60 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மிடில் ஆர்டரில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். இருப்பினும் அவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

    48.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.
    • வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க சில கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அண்மையில் மும்பையில் நடந்த பிசிசிஐ மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    மேலும் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்த பேச்சு வார்த்தையும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முக்கிய முடிவுகள் குறித்தும் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த பின்னர் இந்திய அணியின் நிர்வாகம் இந்திய அணியின் மீதும், இந்திய அணியின் வீரர்கள் மீதும் கடுமையான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் தங்களது நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி வீரர்கள் தங்களது குடும்பத்தாருடனோ, உறவினர்களுடனோ எவ்வித தொடர்களுக்கும் பயணிக்க கூடாது என்ற முடிவையும் எடுத்திருந்தது.

    மேலும் வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இனிவரும் எந்த ஒரு தொடரையும் இந்திய வீரர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அந்தவகையில் இனி இந்திய அணியின் வீரர்கள் விளையாடும் எவ்வித தொடர்களுக்கும் அவர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பள விகிதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பி.சி.சி.ஐ வீரர்களுக்கு தகுதிக்கேற்ப வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் படி சம்பளத்தை வழங்கி வருவதால் வீரர்கள் மெத்தனமாக இருப்பதாகவும், அதனை தடுக்க இனி திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவினை எடுத்து இனி பங்களிப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளதாம். இதன் காரணமாக இனிவரும் தொடர்களை இந்திய வீரர்கள் முக்கிய தொடர்களாக எடுத்து கவனமாக விளையாடுவார்கள் என்பதனாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ், ஆன் லி உடன் மோதினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சக நாட்டவரான ஆன் லி உடன் மோதினார்.

    இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 2-வது சுற்றில் எலெனா கேப்ரியெலா ரூஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பத்தி ராயுடு உலகக் கோப்பை செல்வதற்காக உடைகளை எடுத்து வைத்து விட்டார்.
    • ஒரு வீரரை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்கான வாய்ப்புகளை நீங்கள் இழுத்து மூடக்கூடாது.

    சென்னை:

    2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். அவர் 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் நான்காம் வரிசை வீரராக இருப்பார் என்றும் இந்திய அணி வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

    ஆனால், 2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த போது அதில் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அம்பத்தி ராயுடுவுக்கு மாற்று வீரராக, ரிசர்வ் வீரராகக் கூட அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அனுபவம் இல்லாத விஜய் சங்கர் இடம் பெற்று இருந்தார்.

    அது குறித்து அம்பத்தி ராயுடு சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தார். அதன் பின் அம்பத்தி ராயுடுவுக்கு எப்போதும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இது குறித்து ராபின் உத்தப்பா கூறியதாவது:-

    விராட் கோலிக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், ஒருவர் நல்லவீரர் என இல்லை என அவர் நினைத்தால், அவரை வெட்டி விட்டு விடுவார். அம்பத்தி ராயுடு அதற்கு சிறந்த உதாரணம்.

    அது போல செய்தால் நிச்சயம் நாம் மோசமாக உணர்வோம். ஒவ்வொருவருக்கும் அணித் தேர்வில் சில விருப்பங்கள் இருக்கும். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு வீரரை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்கான வாய்ப்புகளை நீங்கள் இழுத்து மூடக்கூடாது.

    அதாவது அம்பத்தி ராயுடுவை உலகக் கோப்பை தொடருக்கு முந்தைய தொடர் வரை அணியில் தேர்வு செய்து விட்டு, உலகக் கோப்பை அணியில் அவரை நீக்கும் போது அந்த வீரரின் மனநிலை மோசமாகி விடும். அம்பத்தி ராயுடு உலகக் கோப்பை செல்வதற்காக உடைகளை எடுத்து வைத்து விட்டார். தனது கிரிக்கெட் உபகரணங்களுக்கான பையையும் எடுத்து வைத்து விட்டார். எல்லாம் அவரது வீட்டில் தயாராக இருந்தன. தான் உலகக் கோப்பைக்கு செல்வதாகவே அவர் நினைத்தார். ஆனால், திடீரென அவருக்கான கதவை நீங்கள் அடைத்து விட்டீர்கள். அது சரியல்ல.

    என ராபின் உத்தப்பா கூறினார்.

    • போபண்ணா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது.
    • 2-வது செட்டை 6(5)-7(7) என இழந்து ஏமாற்றம் அடைந்தது.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ்- ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7(5) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. முதல் செட்டின் தொடக்கத்தில் போபண்ணா ஜோடி சிறப்பாக விளைாடினாலும், அதன்பின் ஸ்பெயின் ஜோடி உத்வேகம் பெற்று முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.

    2-வது செட்டில் இரு ஜோடிகளும் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் ஸ்பெயின் ஜோடி 5-3 என முன்னிலை பெற்றிருந்தது.

    அதன்பின் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி 5-5 என சமநிலை பெற்றது. என்றாலும் ஸ்பெயின் ஜோடி அடுத்த இரண்டு கேம்களையும் வென்று டை-பிரேக்கரை 7-5 என முறியடித்து 7-5, 7(5)-6(5) என வெற்றி பெற்றது.

    இதனால் முதல் சுற்றோடு போபண்ணா ஜோடி ஏமாற்றம் அடைந்தது.

    ×