என் மலர்
விளையாட்டு
- நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.
- இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் எளிதில் வெற்றி கிடைத்தது. ஆனால் சேப்பாக்கத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தால் தோற்கடிக்க முடிந்தது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார். வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் 11 பேர் கொண்ட அணியில் நீடிப்பார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. 3-வது போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான சவாலை கொடுத்தது. கேப்டன் பட்லர் ஒருவரே நிலையாக ஆடி வருகிறார். ஹேரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி சுமித் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஷிவம் துபே, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி. துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரமன்தீப்சிங்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கார்ஸ்,ரெகான் அகமது, சகீப் மகமூத்.
- இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
- அவர் 4.5 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 7-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினர். குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். 33-வது காய்நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது.
மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, எமன் மென் டோன்கா ஆகியோரும் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர். 8-வது சுற்றின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
சுலோவெனியாவை சேர்ந்த எபடோசிவ் விளாமிர் 5 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணா 4 புள்ளியும், மெண்டோன்கா 2.5 புள்ளியும், எரிகேசி 2 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவு சென்னை வீராங்கனை ஆர்.வைஷாலி 8-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஆர்தர் பஜ்பர்சுடன் டிரா செய்தார். அவர் 4.5 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
- 2வது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.
சென்னை:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் 3-வது வரிசையில் இறங்கிய திலக் வர்மா நிலைத்து நின்று இந்திய அணியை கரைசேர்த்தார். திலக் வர்மா 72 ரன்கள் அடித்து தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
இந்தப் போட்டியில் திலக் வர்மா இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்துவீச்சில் மட்டும் 4 சிக்சரை பறக்க விட்டார். இதில் 4 ஓவர் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கி, டி20 கிரிக்கெட்டில் மோசமான பந்துவீச்சையும் பதிவு செய்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் ஓவரை அடித்து நொறுக்கியது ஏன் என திலக் வர்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, திலக் வர்மா கூறுகையில், அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். அவர்களுடைய சிறந்த பவுலரை அட்டாக் செய்தால் மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட் விழும்போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன்.
அதனால் ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்தது. எது நடந்தாலும் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்கவேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என தெரிவித்தார்.
- தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.
97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
- வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
- பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
முல்தான்:
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குடகேஷ் மோட்டி அரை சதம் கடந்து 55 ரன் எடுத்தார். வாரிகன் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. ரிஸ்வான் 49 ரன்னும், சவுது ஷகீல் 32 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 4 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவரில் 2-வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை என்பதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செக் நாட்டின் கேடரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ-தைவானின் ஹ்சீஹ் சு ஜோடியுடன் மோதியது.
இதில் சினியாகோவா ஜோடி 6-2, 6-7 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.
- தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார்.
- முன்னதாக 2019,2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார். முன்னதாக 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கமிந்து மெண்டிஸ் 1049 ரன்களை அடித்துள்ளார்.
- தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் கமிந்து மெண்டிஸ் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் வென்றார். கடந்தாண்டு மட்டும் கமிந்து மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 1,451 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 1049 ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
- கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
இந்த ஆட்டத்தில் சின்னெர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் உலகின் நம்பர் ஒன் வீரரான சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார்.
சர்வதேச சிலம்பு பெடரேஷன் ஆப் இந்தியா குழுமம் 3-வது ஏசியன் சாம்பியன் ஷிப் -2025 சிலம்பு போட்டியில் ஓசூரில் நடத்தியது.
இதில் மணலி மாத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த 8 வயது மாணவன் எம்.அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய சிலம்பு விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ள மாணவன் அஸ்வினை சிலம்ப பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் திலக் வர்மா 72 ரன்கள் அடித்திருந்தார்.
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறவைத்த திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. திலக் வர்மா 72 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் டி20 வரலாற்றில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட் இழக்காமல் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
கடந்த 4 டி20 போட்டிகளில் திலக் வர்மா 107*, 120*, 19*, 72* ரன்களை அடித்து மொத்தமாக 318* ரன்கள் விளாசியுள்ளார். திலக் வர்மாவுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மார்க் சாப்மன் - 271 ரன்களும் ஆரோன் ஃபின்ச் - 240 ரன்களும் , ஷ்ரேயாஸ் - 240 ரன்களும் அடித்துள்ளனர்.






