என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செப்டம்பர் மாதம் வரை பிரான்ஸில் எந்தவொரு விளையாட்டும் நடைபெறாது என பிரதமர் அறிவித்துள்ளதால் லீக்-1 கால்பந்து தொடர் முடிவுக்கு வருகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து  842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.

    என்றாலும் சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 1-ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

    இதனால் பிரான்ஸின் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.

    பிரான்ஸில் முகக்கவசம் அணிந்து செல்லும் மக்கள்

    மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என தொழில்முறை கால்பந்து லீக் மற்றும் பிரான்ஸ் கால்பந்து பெடரேசன் நினைத்தது.

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு லீக்-1 புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி தகுதி பெறும். தற்போது ரத்து செய்யப்பட்டதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பில்லாததால் யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் அஸ்வின்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருவதால் அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள திட்டமிட்ட அஸ்வின், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.

    ஏற்கனவே நாட்டிங்காம்ஷைர், வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி உள்ளார். வரும் சீசனில் யார்க்‌ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் இங்கிலாந்தில் அதிகரித்து வருவதால் ஜூலை 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் யார்க்‌ஷைர் அணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பரஸ்பர உடன்பாடுடன் அஸ்வின் முறித்துக் கொண்டார். இந்த அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களான தென்ஆப்பிரிக்காவின் மகாராஜ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
    ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டை சேர்ப்பதுதான் எங்களுடைய ஒரே இலக்கு என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்த போதிலும், கபடியும் பிரபலமான விளையாட்டாக திகழ்கிறது. ஆசிய நாடுகள் கபடி விளையாட்டில் தலைசிறந்து விளங்குகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    தற்போது கபடி ஆகிய விளையாட்டு போட்டிகளில் உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் கபடி போட்டியை இணைப்பதுதான் ஒரே இலக்கு என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில் ‘‘கபடி விளையாட்டு ஏற்கனவே ஆசிய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் ஒன்றிணைந்து கபடியை ஒலிம்பிக்கில் சேர்க்க உறுதி கொள்ள வேண்டும். இதுதான் எங்களுடைய ஒரே இலக்கு’’ என்றார்.
    17 வயதில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆன பார்தீவ் பட்டேல் ஒன்பது விரல்களுடன் விளையாடியது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
    பள்ளியில் படிக்கும் வயதான 17-ல் 2002-ம் ஆண்டு இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தவர் பார்தீவ் பட்டேல். இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக 2003-ல் அறிமுகம் ஆனார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறு வயதில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்னர் எம்எஸ் டோனி இந்திய அணிக்குள் நுழைய பார்தீவ் பட்டேலால் ஒரு பேட்ஸ்மேனாகக் கூட இடம் பிடிக்க முடியாமல் போனது. தற்போது ஆர்சிபி அணிக்காகவும், ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காகவும் விளையாடி வருகிறது.

    இவரது இடது கையில் சுண்டு விரல் ஒரு விபத்தின்போது கட்டாகிவிட்டதாம். இதனால் ஒன்பது விரல்களுடன்தான் விளையாடியுள்ளார். ஒருவேளை 10 விரல்களும் இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பார்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது இடது கையின் சுண்டு விரல் கதவுக்கு இடையில் மாட்டிக்கொண்டு கட்டாகிவிட்டது. விக்கெட் கீப்பிங் குளோவுக்குள் கடைசி விரல் சரியாக சேராது. இது சற்று கடினமாக இருக்கும். ஆகவே குளோவ் உடன் டேப் சுற்றி விடுவேன்.

    தற்போது அதை நினைக்கும்போது 10 விரல்களும் இருந்திந்தால் என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்பது வீரர்களுடன் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக பணியாற்றியதை சிறந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.
    கால்பந்தில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலைசிறந்த வீரர்கள் இல்லை, பிரேசில் ரொனால்டோதான் சிறந்த வீரர் என மவுரினோ தெரிவித்துள்ளார்.
    கால்பந்து விளையாட்டில் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த வீரராக மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோருக்கு இடையில்தான் நேரடி போட்டி.

    கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஆர்-யை அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சி ஆறு முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    ஆனால் கால்பந்து போட்டியின் தலைசிறந்த தலைமை பயிற்சியாளராக இருக்கும் போர்ச்சுக்கல்லின் ஜோஸ் மவுரினோ பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோதான் எல்லாக் காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோஸ் மவுரினோ கூறுகையில் ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து டாப் இடங்களில் இடம்பிடித்து வருகின்றனர். எனினும், நாம் கண்டிப்பாக திறமை மற்றும் திறன் ஆகியவற்றை கட்டாயம் பேச வேண்டும். இந்த விஷயத்தில் பிரேசில் ரொனால்டோவை யாராலும் வீழ்த்த முடியாது.

    பிரேசில் ரொனால்டோ

    ரொனால்டோ பாபி ராப்சன் உடன் சேர்ந்து விளையாடும்போது, மைதானத்தில் நான் பார்த்திலேயே அவர்தான் சிறந்த வீரர். காயம் அவரது கேரியரை கொன்று விட்டது. இல்லையெனில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்திருப்பார். ஆனால், 19 வயதான ரொனால்டோவின் திறமை நம்பமுடியாத வகையில் இருந்தது’’ என்றார்.

    ரொனால்டோ விளையாடிய காலத்தில் பிரேசில் 1994 மற்றும் 2002-ல் உலக கோப்பையை வென்றது. 1998-ல் 2-வது இடத்தை பிடித்தது. அதேபோல் கோபா அமெரிக்கா கோப்பையை 1997 மற்றும் 1999-ல் பிரேசில் வென்றது. 1994-ல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது பிரேசில் வெண்கல பதக்கம் வென்றது.

    ஜோஸ் மவுரினோ

    மேலும் பார்சிலோனா, இண்டர் மிலன், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய போது ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 1997 மற்றும் 2002-ல் பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
    ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (UEFA), கால்பந்து கிளப்புகளை காப்பாற்ற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து கால்பந்து லீக் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து ஐரோப்பிய கால்பந்து சங்களுக்கான கூட்டமைப்பு (UEFA) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பில் 55 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. அவைகளுக்கு உதவுவதற்காக 236.5 மில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் ரூ, 1958.69 கோடி) நிதியை வழங்கியுள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும் 4.3 மில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் சுமார் 35.61 கோடி ரூபாய்) கிடைக்கும்.

    யூரோ சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பியா லீக் ஆகியவை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் குடும்ப வன்முறை பிரச்சனை தொடர்பான செய்திகளை கேட்பதற்கு கவலையாக இருக்கிறது என தவான் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதனால் குடும்பத்தலைவிக்கான வேலை அதிகரிக்கிறது. மேலும் குடும்பத் தலைவர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வராத போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது.

    இப்படி ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசும் உதவி நம்பரை அறிவித்து தேவைப்பட்டால் உதவிக்கு அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன தவான், இப்படிப்பட்ட செய்திகளை கேட்பது கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி ஆயிஷா மற்றும் அவரது குழந்தைகளுடன் குத்துச்சண்டை பயிற்சி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு ‘‘நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டில் சந்தோசமாக நேரத்தை கழித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப வன்முறை இன்று வரை நடந்து வருகிறது என்பதை கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. நாம் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். அன்பான ஜோடியை தேர்வு செய்க... குடும்ப வன்முறைக்கு நோ.. சொல்க..’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ஐபிஎல் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்தியா வந்திருந்த நியூசிலாந்து முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனருமான மைக் ஹெசன் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
    நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தவர் மைக் ஹெசன். இவர் ஐபிஎல் அணியான ஆர்சிபி, அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனராக இவரை நியமித்துள்ளது.

    மார்ச் மாதம் 29-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்ததால் மார்ச் 5-ந்தேதி மைக் ஹெசன் இந்தியா வந்தார். ஐபிஎல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இதனால் நியூசிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சொந்த நாடு திரும்ப இந்தியாவில் உள்ள நியூசிலாந்து நாட்டிற்கான தூதரகத்தை நாடினார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு நியூசிலாந்து விமானம் மூலம் இன்று சொந்த நாடு சென்றடைந்தார்.

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மைக் ஹெசன் ‘‘மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பஸ்சில் ஒருநாளுக்கு மேல் சிக்கி தவித்தேன். அதன்பிறது தற்போது அருமையாக காட்சிகளை பார்க்கிறேன். ஏர் நியூசிலாந்து ஸ்டாஃப்கள் நாங்கள் சொந்த நாடு திரும்ப அற்புதமாக செயல்பட்டார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், இந்திய பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா, இந்தியாவில் உள்ள நியூசிலாந்து தூதரகம், நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரிகள் ஆகியோரிக்கு நன்று தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரசில் இருந்து வீரர்களை பாதுகாப்பதற்காக பால் டேம்பரிங்கை சட்டப்பூர்வமாக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளதற்கு முன்னாள் பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    கொரோனா தாக்கம் முடிந்து கிரிக்கெட் போட்டி தொடங்கும்போது களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையால் (வைரஸ் பரவும் அபாயம்) தேய்ப்பதற்கு பதிலாக செயற்கை பொருளை பயன்படுத்தி தேய்க்க அனுமதி அளிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலித்து வருகிறது.

    இந்த முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் மைக்கேல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    ‘‘பந்தை எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பது களத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று. இதை கட்டுப்படுத்த முடியாது’’ என்று வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

    ‘‘வீரர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக உரிய பாதுகாப்பான சூழலில் விளையாடுவார்கள் என்கிறபோது, வீரர்களின் எச்சில் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்’’ என்று ஹோல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
    கடந்த ‘2010-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து கடினமான பாடம் கற்றேன்‘ என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது ஐ.பி.எல். அனுபவம் குறித்து இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 2 ஆட்டங்களில் மோசமாக விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அதனை எனது முகத்தில் விழுந்த கடினமான அறை போல் உணர்ந்தேன். அதாவது அந்த நிகழ்வு அந்த இடத்துக்கு சம்பந்தம் இல்லாதவன் என்பதை புரிந்து கொள் என்பது போல் இருந்தது. 20 ஓவர் போட்டியில் பந்து வீசுவது என்பது முதல் தர போட்டியில் வீசுவதை விட எளிதானது தான் என்று அப்போது நான் நினைத்து இருந்தேன்.

    பெங்களூருவில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் ஆகியோர் எனக்கு கடினமான பாடத்தை புகட்டினார்கள். அந்த போட்டியில் நான் 14-வது, 16-வது, 18-வது மற்றும் 20-வது ஓவர்களை வீசினேன். எனக்குள் இருந்த இளமை அதனை ஒரு சவாலாக பார்க்கவில்லை. அதனை விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பாகவே பார்த்தேன். நான் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் 40 அல்லது 45 ரன்களை விட்டுக்கொடுத்தேன். அத்துடன் அணியையும் சிக்கலில் சிக்க வைத்தேன். அடுத்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அதைத்தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டேன்.

    அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால், அணிக்கான ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வீட்டில் அமர்ந்து போட்டிகளை பார்த்தேன். என்னை இன்னும் சற்று சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்று நினைத்தேன். நான் அந்த ஆண்டில் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பிடித்து இருந்தேன். நான் முதல் 3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தேன். 2 ஆட்டத்தில் மட்டுமே மோசமாக விளையாடினேன். யார் வேண்டுமானாலும் இதுபோல் சில ஆட்டங்களில் ரன்கள் விட்டுக்கொடுக்க நேரிடும். எனவே அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏன்? ஆதரிக்கவில்லை என்று நினைத்தேன்.

    உண்மையில் எனக்கு ஸ்டீபன் பிளமிங்குடன் (சென்னை அணி பயிற்சி யாளர்) பிரச்சினை இருந்தது. இதனால் அவர் என்னுடன் பேசக்கூட செய்யவில்லை. அவர் மீது எனக்கு அதிக மரியாதை இருந்தது. ஆனாலும் அவர் என்னுடன் பேசவில்லை. வீட்டில் அமர்ந்து போட்டிகளை பார்க்கையில் இந்த நிலையை ஒருநாள் மாற்றுவேன் என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். சில மக்கள் சில வழிகளில் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பார்கள். ரவீந்திர ஜடேஜாவை எடுத்துகொண்டால் அவர் இயற்கையாகவே கிரிக்கெட் வீரருக்குரிய முழுமையான உடல் தகுதியை கொண்டவர். உடல் தகுதியில் நான் அவருடைய நிலையை நெருங்க வேண்டும் என்றால் ஒரு போட்டி தொடருக்கு செல்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே உடற்பயிற்சியினை கடுமையாக மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற யுவராஜ்சிங் கேள்விக்கு பும்ரா பதில் அளித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஜஸ்பிரித் பும்ரா, முன்னாள் வீரர் யுவராஜ்சிங்குடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, கேள்விகளுக்கு அதிவேகமாக பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் யுவராஜ்சிங் தொடுத்த கேள்விகளும், அதற்கு பும்ரா திக்கித் திணறி அளித்த பதில்களும் வருமாறு:-

    யுவராஜ்: விராட் கோலி (இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்), இப்ராகிமோவிச் (சுவீடன் கால்பந்து வீரர்) ஆகியோரில் உங்களது உடல்தகுதி முன்மாதிரி (ரோல் மாடல்) யார்?

    பும்ரா: இப்ராகிமோவிச். அவர் எனது உடல்தகுதி முன்மாதிரி மட்டும் அல்ல. பொதுவாகவே அவரை எனது முன்மாதிரியாக வைத்திருக்கிறேன்.

    யுவராஜ்: சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை நினைக்கிறீர்கள்?

    பும்ரா: இங்க பாருங்க யுவி....நான் வெறும் 4 ஆண்டுகள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அவர்களில் யார் சிறந்தவர் என்பதை கணிக்கும் அளவுக்கு எனக்கு போதுமான அனுபவம் கிடையாது. விராட்-தெண்டுல்கர் அல்லது சச்சின்-கோலி. இந்த கேள்விக்கு பதில் அளிக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னை விட மிக அதிக சர்வதேச போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள்.

    யுவராஜ்: நான் உனது (பும்ரா) சுயசரிதையை இங்கு கேட்கவில்லை. உனக்கு உரையாடலின் விதிமுறையை தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு கேள்விக்கும் 5 வினாடிகளுக்குள் பதில் சொல்ல வேண்டும். எனக்கு தெளிவான பதில் தேவை. அவர்களில் உனக்கு பிடித்தமானவர் யார்?

    பும்ரா: எனக்கு எல்லோரும் சமம் தான். உங்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறேன். நீங்கள் அடுத்த கேள்வியை கேளுங்கள்?

    (ஆனாலும் யுவராசிங் தொடர்ந்து கிடுக்குபிடி போட்டதால் இந்த கேள்விக்கு பும்ரா மழுப்பலாக பதில் அளித்தார்.)

    பும்ரா: தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கோலியும் அவரது ரசிகர் தான். அதனால் தெண்டுல்கரை தேர்வு செய்கிறேன்.

    யுவராஜ்: சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அஸ்வின் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்?

    பும்ரா: ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளாக கேட்கிறீர்கள். நான் அஸ்வினுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சை சிறுவயதில் இருந்தே பார்த்து உள்ளேன். எனது தேர்வு ஹர்பஜன்சிங்.

    யுவராஜ்: டோனி அல்லது யுவராஜ்சிங் ஆகியோரில் பிடித்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் யார்?

    பும்ரா: ஏன் இப்படி.....அப்பா, அம்மா ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என கேட்பது போல் உள்ளது. இந்திய அணிக்காக நீங்களும், டோனியும் இணைந்து வெற்றியை தேடித்தந்த ஆட்டங்களை பார்த்து வளர்ந்தவன் நான். ஏன் இந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் தான். இருவரில் ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது. இளம் வயதில் நான் உங்கள் இருவரின் ரசிகன்.

    இவ்வாறு உரையாடல் நடந்தது.

    உரையாடலின் போது பும்ராவை வெகுவாக பாராட்டிய யுவராஜ்சிங், ‘உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் நீ என்று நம்ப வேண்டிய அவசியம். உன்னை பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாதே. மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் அஸ்தஸ்தை எட்டுவதற்குரிய திறமை உன்னிடம் இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகள் நம்பர் ஒன் பவுலராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அணியில் இப்போது நீ பக்குவமடைந்த ஒரு பவுலர். பழகுவதில் இனிமையான வீரர்களில் ஒருவர்’ என்றார்.
    ஊழல் தடுப்புக்குழுவின் விசாரணை அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது
    பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல். சிறப்பாக விளையாடிய போதிலும் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாட இருந்தார். இவர் இடம் பிடித்திருந்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதல் போட்டியில் வியைாடுவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாசல்-இ-மிரான் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் அவரால் மூன்று ஆண்டுகள் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது.

    29 வயதாகும் உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
    ×