என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன் அணியில் இந்தியாவை சேர்ந்த யாருக்கும் இடமில்லை.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஸ்டெயின், ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இவர் தன்னுடன் விளையாடிய, எதிர்த்து விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இதில் தென்ஆப்பிரிக்க வீரர்களைத் தவிர குமார் சங்ககரா, பிரெட் லீ ஆகியோர் மட்டுமே எதிரணியைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

    டேல் ஸ்டெயின் தேர்வு செய்துள்ள ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கிரேம் ஸ்மித், 2. குமார் சங்ககரா, 3. டேவ் ஹாகென், 4. கல்லீஸ், 5. ஜான்டி ரோட்ஸ், 6. குயிண்டன் டி காக், 7. பிரெட் பார்கியாச்சி, 8. பீட்டர் லம்பார்டு, 9. பிரெட் லீ, 10. பால் ஹாரிஸ், 11. ஆலன் டெனால்டு.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ‘‘ஸ்டெயின் அவருடன் பள்ளிக்கூடத்தில் விளையாடிய பார்ட்னர், சிறந்த நண்பர்கள், அவனுடைய கிளப் அணி கேப்டன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்’’ எனக்குறிப்பிட்டுள்ளது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்தியா கூடுதலான போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஜி்ம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் போன்ற சிறிய கிரிக்கெட் போர்டுகள் நிதி பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.

    அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டுகளும் நிதிச்சுமையில் சிக்கி தவித்துள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் போர்டு நிதியை பற்றி கவலைப்படவில்லை. வீரர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அரசு கட்டுப்பாட்டுக்குள் வராது. இதனால் அதிக அளவில் நிதி வைத்துள்ளது. கடந்த 23-ந்தேதி ஐசிசி ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செயலாளர் ஜெய் ஷா கலந்த கொண்டார்.

    இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று முடிந்த பின்னர் போட்டி அட்டவணையை எப்படி தயார் செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என ஜெய் ஷா உறுதியளித்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் இந்தியாவுடன் ஒரு தொடரில் விளையாடினால் விளம்பரம், தொலைக்காட்சி உரிமம் போன்றவற்றால் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதனால் டி20 உலக கோப்பை ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூடுதலான போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு நம்புகிறது.

    கூடுதல் போட்டியில் விளையாடினால் இந்தியாவில் போட்டியை ஒளிபரப்புவதற்கான டி.வி. உரிமம் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. ஏற்கனவே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஐந்து போட்டிகளாக மாற்ற விருப்பம் தெரிவித்திருந்தது. டி20 ரத்தானால் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கூடுதலான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்தியா ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் வெளிநாட்டு வீரர்களுக்கும், வீரர்களை ரிலீஸ் செய்யும் கிரிக்கெட் போர்டுக்கும் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் காரணமாக பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்க தடைவிதிக்க ஐசிசி யோசனை செய்து வரும் நிலையில் சாஹல் இப்படி ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த விளையாட்டுகளையும் புரட்டி போட்டுள்ளது என்றால் மிகையாகாது. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது என்ற நிலை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகளை நடத்த ஆராய்ந்து வருகிறார்கள்.

    மேலும் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் அழிக்க குறைந்தது ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. அதற்குமுன் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் வீரர்கள் எச்சில் துப்புவது, கட்டித் தழுவுதல் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    கிரிக்கெட்டை பொறுத்த வரைக்கும் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக பால் டேம்பரிங்கை சட்டப்பூர்வமாக்க ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

    ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் நகைச்சுவை உணர்வு கொண்டவர். இவரிடமும் ஐசிசி முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

    அப்போது பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடித்தால் அந்த பந்துகளை அவர்களே எடுத்து வரவேண்டும் என நகைச்சுவையாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘ஐசிசி அவ்வாறு முடிவு செய்தால் கையில் இருந்து ரிலீஸ் செய்வதிலும், பந்தை ஸ்விங் செய்வதிலும் பாதிப்பு ஏற்படும். இறுதியில் இந்த முடிவு பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகிவிடும்.

    அதேபோல் சிக்ஸ் அடித்தால் அந்த பந்தை பேட்ஸ்மேன்களே எடுத்துவர வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.
    விராட் கோலி எப்படி நம்பர் ஒன் வீரராக மாறினார், சச்சின் தெண்டுல்கர் சர்ச்சையில் இருந்து எப்படி தப்பினார் என்பது பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.

    இவரது அண்ணன் கம்ரன் அக்மலும் கிரிக்கெட் வீரர்தான். தம்பியின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ள கம்ரன் அக்மல், இந்திய வீரர்களான விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் டோனியிடம் இருந்து உமர் அக்மலுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறுகையில் ‘‘உமர் அக்மலுக்கு எனது அறிவுரை எல்லாம் இந்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவன் தவறு செய்திருந்தால், கட்டாயம் மற்றவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் இன்னும் இளமையான வீரர்தான். வாழ்க்கையில் ஏராளமான கவனச்சிதறல்கள் உள்ளன.

    ஆனால் விராட் கோலி சொல்வதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடக்க காலத்தில் விராட் கோலி முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அதன்பின் அவருடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். அவர் எப்படி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறினார் என்பதை பார்க்க வேண்டும்.

    தற்போது நம்முடைய பாபர் அசாம் உலகின் தலைசிறந்த மூன்று வீரர்களில் ஒருவராக உள்ளார். அதன்பின் எம்எஸ் டோனியை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர் அணியை எப்படி வழிநடத்தினார் என்றால் அது தெரியும். அப்புறம் சச்சின் தெண்டுல்கர் எப்போதுமே சர்ச்சையில் இருந்து விலகியே இருந்தார். அவர்கள் நமக்கு எப்போதுமே நமக்கு தலைசிறந்த உதாரணம்.

    அவர்களை உற்று நோக்கி, பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியே ரசிகர்களிடமம் அவர்களுடைய பழக்கவழக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் விளையாட்டுக்கு தலைசிறந்த தூதராக உள்ளார். அவர்களுடைய உதாரணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
    கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதா மிகவும் உயர்ந்தது. அதை மாற்றினால் மிகவும் மோசமான நாளாக அது இருக்கும் என பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி மட்டுமே இருந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிதான் ஒரு கிரிக்கெட் வீரரை சோதிக்க தரமான போட்டி எனக் கருதப்படுகிறது. ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து மனஉறுதியுடன் பந்து வீசுவதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி விளங்கி வருகிறது.

    ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை மைதானத்தில் வந்து பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் ரசிகர்கள் யாருமின்றி வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

    டி20 போட்டியில் விளையாடுவதால் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்பதில்லை. வந்தோமா.. அதிரடியாக விளையாடினோமா.. சென்றோமா... என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். மேலும் ஆடுகளத்தில் முதல் நாளின் முதல் பந்தில் இருந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கள் முடிவடைந்து விடுகிறது.

    இதற்கிடையில் ஐசிசி ஏராளமான சர்வதேச தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஆலோசித்து வருகிறது. இப்படி குறைத்தால் சர்வதேச தொடர்களுக்கு நாட்கள் கூடுதலாக கிடைக்கும் என ஐசிசி நினைக்கிறது.

    ஆனால் விராட் கோலி போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டியில் எந்தவொரு மாற்றமும் கொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் மிகவும் உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து கொண்டு வருவதாக ஏராளமான பேச்சுகள் சமீபகாலமாக நடைபெற்ற வருகின்றன. ஆனால், இது எங்கிருந்து என்பது எனக்குத் தெரியவில்லை.

    நீங்கள் அனைத்து வீரர்கள், அல்லது சில வீரர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோர் டெஸ்ட் எவ்வளவு சிறப்பானது என்பதை பற்றி பேசியது எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் தற்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும்.

    அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளை மாற்றினால், அவர்கள் டெஸ்ட் ‘ஈசி கிரிக்கெட்’ என அழைக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்றார்.
    கர்நாடக அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜே. அருண்குமார் அமெரிக்க கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கர்நாடகா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜே. அருண்குமார். கர்நாடக அணிக்காக 109 முதல் தர போட்டிகளில் விளையாடி 7208 ரன்கள் அடித்துள்ளார். கர்நாடக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர் என பெயர்பெற்றவர்.

    இவரை அமெரிக்கா கிரிக்கெட் சங்கம் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் சிஇஓ ஹிக்கின்ஸ் கூறுகையில் ‘‘ஜே. அருண்குமார் அமெரிக்காவுக்கு வந்து எங்களது ஸ்டாஃப், தேர்வாளர்கள் மற்றும் வீரர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்’’ என்றார்.

    2013-14 முதல் 2014-15 வரை கர்நாடக அணி ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, இரானி கோப்பைகளை தொடர்ந்து கைப்பற்ற காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வில்வித்தைக்கான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் யுனிட்டாக மாற்றியுள்ளார் இந்திய வில்வித்தை சங்க பொது செயலாளர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளரகள் பயன்படுத்தும் கையுறைகள், முகக்கவசங்கள், சிறப்பு ஆடைகளுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது.

    இந்தியா மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதில் தரமற்றவைகளையும் சேர்த்து அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள சில தொழிற்சாலைகள் தங்களது யுனிட்டுகளை மாற்றி பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    இந்திய வில்வித்தை சங்கத்தின் பொது செயலாளராக இருப்பவர் பிரமோத் சந்துர். அவர் மகாராஷ்டிராவின் அமராவதியில் வில்வித்தைக்கான வில், அம்பு உள்ளிபட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.

    தற்போதைய நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் யுனிட்டாக மாற்றினார். இதன்மூலம் கையுறைகைள், முகக்கவசங்கள், பாதுகாப்பு ஆடைகள் தயாரிக்க முடிவு செய்தார். 30 ஊழியர்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து அவரது நண்பர்களின் மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். தினமும் ஆயிரம் பாதுகாப்பு ஆடைகள் தயாரிப்பதாக பிரமோத் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் உதவின்றி தவிக்கும் முன்னாள் வீரர்களுக்காக நிதி திரட்டி வரும் நிலையில், 10 லடசம் ரூபாய் வழங்க உறுதி செய்துயுள்ளார் முகமது அசாருதீன்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலாளர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு அரசு உதவி வருகிறது. இல்லாதவர்களுக்கு இருக்கும் நபர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய வீரர்கள், ரஞ்சி போட்டியில் மட்டுமே விளையாடிய முன்னாள் வீரர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் நிதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் நிதி திரட்டி அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்தது. ரஞ்சி கோப்பை போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள சங்கத்தின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா முன்னின்று முயற்சிகளை மேற்கொண்டார்.

    இந்நிலையில் முகமது அசாருதீன் 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதன்மூலம் 24 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரசை விட கொடியவர் சர்வான் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிக்சர் மன்னன் 40 வயதான கிறிஸ் கெய்ல், அங்கு நடைபெறும் கரிபீயன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவர் அந்த அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியில் கெய்ல் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியது அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ராம்நரேஷ் சர்வான் தான் என்று கெய்ல் குற்றம் சாட்டியுள்ளார். கெய்லுடன் இணைந்து சர்வான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து யு டியூப்பில் வெளியிட்ட வீடியோ பதிவில் கெய்ல் கூறியிருப்பதாவது:-

    ‘இப்போதைக்கு சர்வான்.... நீ கொரோனா வைரசை விட கொடியவராக இருக்கிறாய். ஜமைக்கா அணியில் இருந்து என்னை கழற்றி விட்டதில் உனது பங்கு மிகப்பெரியது என்பதை அறிவேன். அணியின் உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சிக்கிறார். அவருக்கும், மற்ற வீரர்களுக்கும் அணியில் நிறைய பிரச்சினை இருக்கிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் இன்னும் ஏன் எனது போன் அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு. பழிவாங்கி விட்டாய். கரிபீயன் மக்களால் அதிக நேசிக்கப்படும் நபர் நீ கிடையாது. உன்னிடம் முதிர்ச்சி இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டாய்.

    நீங்கள் எல்லாம் என்னை குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள். 1996-ம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் நுழைந்து இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் நான் தான். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். அந்த சகாப்தத்தில் கடைசி வீரராக எஞ்சி நிற்கிறேன். இன்னும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன்’.

    இவ்வாறு கெய்ல் அதில் கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று அவரது அண்ணன் கம்ரன் அக்மல் கூறியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் உமர் அக்மல் அதிர்ச்சிக்குள்ளானார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், உமர் அக்மலின் சகோதரருமான கம்ரன் அக்மல் கூறுகையில், ‘உமர் அக்மலுக்கு இவ்வளவு கடினமான தண்டனை விதிக்கப்பட்டது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 3 ஆண்டு தடை என்பது மிகவும் மோசமான தண்டனை. இந்த தடையை எதிர்த்து அவர் நிச்சயம் அப்பீல் செய்வார். இதற்கு முன்பு இதே போல் சூதாட்டத்தரகர்கள் தொடர்பு கொண்டதை மறைத்த புகாரில் சிக்கிய வீரர்களுக்கு (முகமது இர்பானுக்கு 6 மாத தடை, முகமது நவாசுக்கு 2 மாத தடை) குறைந்த கால தடை விதிக்கப்பட்ட நிலையில், உமர் மீது மட்டும் ஏன் கடினமான நடவடிக்கை பாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைப்பில் முறையீடு செய்வோம்’ என்றார்.

    இதற்கிடையே உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் ரமிஸ் ராஜா, ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ரமிஸ்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உமர் அக்மல் அதிகாரபூர்வமாக முட்டாள்கள் பட்டியலில் இணைந்து விட்டார். 3 ஆண்டு தடையின் மூலம் திறமை எப்படி வீணடிக்கப்படுகிறது. கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. ‘மேட்ச் பிக்சிங்’ செய்பவர்களை ஜெயிலில் போட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இது போன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜாகீர் அப்பாஸ் கூறுகையில், ‘விதிமுறையை பின்பற்றாத வீரரை எப்படி திறமையானவர் என்று சொல்ல முடியும்? நீங்கள் விதிமுறையை பின்பற்றாவிட்டால் சிறந்த வீரராக இருக்க முடியாது. உமர் அக்மல் ஒன்றும் ஜூனியர் வீரர் கிடையாது. பாகிஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடி இருக்கிறார். சந்தேக நபர்கள் யாரும் தொடர்பு கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் என்ற ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு விதிமுறைகள் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் பலமுறை சொல்லப்பட்டு இருக்கும். ஆனால் அவர் அதை உதா சீனப்படுத்தி விட்டார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து போய் விட்டதாக நினைக்கிறேன். இந்த தண்டனை அவருக்கு சரி தான்’ என்றார். 
    அடுத்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் என்று அந்த போட்டியின் அமைப்பு குழு தலைவர் தெரிவித்தார்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் (மார்ச்) அறிவிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுப்பிடிக்கப்படாததால், வேகமாக பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த இக்கட்டான நிலை மாறி, சகஜ நிலை திரும்புவது எப்போது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதனால் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரியிடம் கேட்ட போது, ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை 2022-ம் ஆண்டு வரை தாமதப்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்கள். போட்டியை மேலும் தாமதப்படுத்த வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டுக்குள் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும். முன்பு போர் காலத்தில் மட்டுமே போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் (கொரோனா) மோதுகிறோம். கொரோனா வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டால், அடுத்த கோடையில் நாங்கள் ஒலிம்பிக் போட்டியை அமைதியாக நடத்துவோம். தற்போது மக்கள் போட்டி குறித்து பந்தயம் கட்டுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

    ‘ஒலிம்பிக் போட்டியை இதற்கு மேலும் தாமதப்படுவது என்பது முடியாத காரியம்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் யோஷிதகே யோகோகுரா கருத்து தெரிவிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டி நடத்தப்படக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்’ என்றார்.
    செப்டம்பர் மாதம் வரை பிரான்ஸில் எந்தவொரு விளையாட்டும் நடைபெறாது என பிரதமர் அறிவித்துள்ளதால் லீக்-1 கால்பந்து தொடர் முடிவுக்கு வருகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து  842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.

    என்றாலும் சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 1-ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

    இதனால் பிரான்ஸின் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.

    பிரான்ஸில் முகக்கவசம் அணிந்து செல்லும் மக்கள்

    மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என தொழில்முறை கால்பந்து லீக் மற்றும் பிரான்ஸ் கால்பந்து பெடரேசன் நினைத்தது.

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு லீக்-1 புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி தகுதி பெறும். தற்போது ரத்து செய்யப்பட்டதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
    ×