search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச் - விராட் கோலி (பழைய படம்)
    X
    ஆரோன் பிஞ்ச் - விராட் கோலி (பழைய படம்)

    டி20 உலக கோப்பை ரத்தானால் இந்தியா கூடுதல் போட்டியில் விளையாடும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்தியா கூடுதலான போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஜி்ம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் போன்ற சிறிய கிரிக்கெட் போர்டுகள் நிதி பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.

    அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டுகளும் நிதிச்சுமையில் சிக்கி தவித்துள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் போர்டு நிதியை பற்றி கவலைப்படவில்லை. வீரர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அரசு கட்டுப்பாட்டுக்குள் வராது. இதனால் அதிக அளவில் நிதி வைத்துள்ளது. கடந்த 23-ந்தேதி ஐசிசி ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செயலாளர் ஜெய் ஷா கலந்த கொண்டார்.

    இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று முடிந்த பின்னர் போட்டி அட்டவணையை எப்படி தயார் செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என ஜெய் ஷா உறுதியளித்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் இந்தியாவுடன் ஒரு தொடரில் விளையாடினால் விளம்பரம், தொலைக்காட்சி உரிமம் போன்றவற்றால் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதனால் டி20 உலக கோப்பை ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூடுதலான போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு நம்புகிறது.

    கூடுதல் போட்டியில் விளையாடினால் இந்தியாவில் போட்டியை ஒளிபரப்புவதற்கான டி.வி. உரிமம் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. ஏற்கனவே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஐந்து போட்டிகளாக மாற்ற விருப்பம் தெரிவித்திருந்தது. டி20 ரத்தானால் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கூடுதலான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்தியா ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் வெளிநாட்டு வீரர்களுக்கும், வீரர்களை ரிலீஸ் செய்யும் கிரிக்கெட் போர்டுக்கும் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×