என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 

    • 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான ஜெர்லின் மதுரையைச் சேர்ந்தவர்.
    • முதல்முறையாக அணிக்கு தலைமை தாங்குவது உண்மையிலேய சிறப்பு வாய்ந்தது’ என ஜெர்லின் கூறினார்.

    புதுடெல்லி:

    25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 111 பேர் கொண்ட இந்திய அணியினர் தடகளம், பேட்மிண்டன், கோல்ப், ஜூடோ, கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, மல்யுத்தம் மற்றும் டென்னிஸ் ஆகிய பந்தயங்களில் பங்கேற்கிறார்கள். இதன் முதல் குழுவினர் இன்று டோக்கியோ புறப்படுகிறார்கள்.

    இந்த போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் பேட்மிண்டன் வீராங்கனையான ஜெர்லின் அனிகா ஜெயரட்சகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான ஜெர்லின் மதுரையைச் சேர்ந்தவர். 'தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்புக்கு என்னை தேர்வு செய்திருப்பது எனக்கு பெருமைக்குரிய, உணர்வுபூர்வமான தருணம். இது எனது 3-வது ஒலிம்பிக். ஆனால் முதல்முறையாக அணிக்கு தலைமை தாங்குவது உண்மையிலேய சிறப்பு வாய்ந்தது' என ஜெர்லின் குறிப்பிட்டார்.

    • தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை சமர்ப்பிக்க பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் கழற்றி விட உள்ளதாகவும் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் உள்பட பல வீரர்களை கழற்றி விட உள்ளாதவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் தக்க வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரனா ஆகியோர் தக்க வைக்கபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல அணிகள் எல்லிஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் சிஎஸ்கே அணி மறுத்துவிட்டது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுகின்றனர்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது.
    • பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள்.

    பனாஜி:

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

    3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    4-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரஷிய வீரர் டேனியல் டுபோவுடனும், அர்ஜூன் எரிகைசி அங் கேரி வீரர் பீட்டர் லிகோவு டனும், பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீ டனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகு வாங்குடனும் மோதினார்கள். 5 வீரர்களும் முதல ஆட்டத்தில் 'டிரா'செய்தனர்.

    நேற்றைய 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பிரணவ், கார்த்திக், வெங்கட்ராமன் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்கள்.

    பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெற்று 5-வது சுற்றுக்கு நுழைவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.
    • புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.

    புதுடெல்லி:

    12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை டெல்லி ஆகிய நகரங்களில் கடந்த 3 மாதங்கள் நடந்தது. இதில் கடந்த 31-ந் தேதி நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணி, புனேரி பால்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி (6 வெற்றி, 12 தோல்வி) 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் உரிய நேரத்தில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. கடந்த சீசனில் நியமனம் செய்யப்பட்ட அவர் ஒரே ஆண்டில் கழற்றி விடப்பட்டுள்ளார். தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.

    இந்த சீசனில் தொடக்கத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் கபடியில் இருந்து ஓய்வு பெற தயார் என்று அவர் உடனடியாக மறுத்தார். தங்களது இறுதி லீக் ஆட்டம் முடிந்ததும் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அணி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்தார். அணி தேர்வு, பயிற்சி, திட்டமிடுதல் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்திலும் தனக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. தகுதியான வீரர்களை தவிர்த்து விட்டு முழு உடல் தகுதியற்ற வீரர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதனை ஆமோதித்த கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் அணியின் பகுப்பாய்வாளர் தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார் என்று கூறினார்.

    போட்டி முடிந்த பிறகு இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்த தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம், தற்போது தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யானின் பதவியை பறித்து இருக்கிறது.

    • இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம்.
    • தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும்.

    கொல்கத்தா:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான வேட்கையும், ஆவலும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது.

    அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும். இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம். எங்களது திறமையை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்க்கவும் இது அருமையான வாய்ப்பு. இந்திய துணை கண்டத்தில் மற்ற பகுதிகளில் வெற்றி பெற தொடங்கி விட்டோம். இப்போது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு.

    கொல்கத்தா ஆடுகளம் பாகிஸ்தானில் இருந்தது போல் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் என நினைக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்கள் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதாவது போக போக ஆடுகளத்தன்மை மாறும் போது சுழலுக்கு உதவும்' என்றார்.

    தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
    • ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.

    அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
    • இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.

    பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 3 மணி) நடக்கிறது.

    இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதனால் இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.

    இதனை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு கவலை இருப்பதாகவும், உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 8 இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

    பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சனை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மொசின் நக்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார்.

    சில இலங்கை வீரர்கள் தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கூறினர். அவர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்று மொசின் நக்வி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்ப கோரிக்கை வைத்த இலங்கை வீரர்களை அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேறக் கூடாது எனவும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக மகுடம் சூடியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்ட நாயகியாக ஜொலித்தார்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், அவர் நேற்று அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது சாதனையைப் பாராட்டி ரூ.1½ கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

    மேலும் அரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

    ஷபாலியின் சாதனை, அரியானா மாநிலத்தின் அனைத்து மகள்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்களது அற்புதமான செயல்பாட்டின் மூலம் தேசத்தின் பெயரை பிரகாசிக்க செய்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என நயாப் சிங் சைனி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • 2வது சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அரையிறுதிக்கும் முன்னேறினார்.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்கா வீரர் வென்றார்.
    • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்கா கேப்டன் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

    சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இடம்பெற்றனர்.

    இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றார்.

    சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் டி மினார் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்நிலையில், 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அலெக்ஸ் டி மினார் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முசெட்டி 7-5 என வென்றார்.

    ×