என் மலர்
விளையாட்டு

தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்
- தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.
- புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.
புதுடெல்லி:
12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை டெல்லி ஆகிய நகரங்களில் கடந்த 3 மாதங்கள் நடந்தது. இதில் கடந்த 31-ந் தேதி நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணி, புனேரி பால்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி (6 வெற்றி, 12 தோல்வி) 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் உரிய நேரத்தில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. கடந்த சீசனில் நியமனம் செய்யப்பட்ட அவர் ஒரே ஆண்டில் கழற்றி விடப்பட்டுள்ளார். தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.
இந்த சீசனில் தொடக்கத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் கபடியில் இருந்து ஓய்வு பெற தயார் என்று அவர் உடனடியாக மறுத்தார். தங்களது இறுதி லீக் ஆட்டம் முடிந்ததும் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அணி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்தார். அணி தேர்வு, பயிற்சி, திட்டமிடுதல் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்திலும் தனக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. தகுதியான வீரர்களை தவிர்த்து விட்டு முழு உடல் தகுதியற்ற வீரர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதனை ஆமோதித்த கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் அணியின் பகுப்பாய்வாளர் தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார் என்று கூறினார்.
போட்டி முடிந்த பிறகு இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்த தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம், தற்போது தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யானின் பதவியை பறித்து இருக்கிறது.






