என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர் இளம்பெண் ஈ‌ஷா. கோவையை சேர்ந்த இவர் கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்தார்.

    சமீபத்தில் அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குகொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) தெரியவரும்.

    ஏற்கனவே கவர்னர் மாளிகையில் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரிய காலாப்பட்டில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காலாப்பட்டு:

    பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மணிபால் (வயது 28). இவரது மனைவி திவ்யா (25). இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தையும் 4 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டில் புடவையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுபற்றி திவ்யாவின் தந்தை அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திவ்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தாசில்தார் விசாரித்து வருகிறார்.
    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து ஏற்கனவே கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த சூழலில் புதிய கொரோனா பரவுவதால் ஜனவரி 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

    மத்திய அரசின் கடிதத்தை வெளியிட்டு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதனை காவல்துறை, நகராட்சிகள், வர்த்தகர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுனர்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

    இதை மாற்றி செய்பவர்கள் அதற்கான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மக்களும் தங்களை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை பின்பற்றவேண்டும். இது வர உள்ள புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு மிகமிக அவசியம்.

    இதற்கான உத்தரவினை மத்திய அரசு அனைவருக்கும் வினியோகித்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல்களும், நீதிமன்ற அறிவுறுத்தல்களும் விளக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுகிறது. கலெக்டர்கள் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள்தான் சட்ட அமலாக்க உத்தரவினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்கள் ஆவர். சட்டம், விதிமுறைகள், நீதித்துறை வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சர்வதேச யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் 1992-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இந்த யோகா திருவிழாவில் பங்கேற்பார்கள். ஆண்டு தோறும் ஜனவரி 4 முதல் 7-ந்தேதி வரை இந்த திருவிழா புதுவையில் நடத்தப்படும்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யோக தெரபி, யோகா உணவு, மாணவர்களுக்கான போட்டிகள் என நகரின் பல்வேறு பகுதியில் இந்த திருவிழா நடத்தப்படும். 27-வது சர்வதேச யோகா திருவிழா இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.

    இதுதொடர்பான கோப்பு சுற்றுலாத்துறையில் இருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளதால் 27-வது சர்வதேச யோகா திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சர்வதேச யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுனாமி தாக்குதல், தானே புயல் தாக்குதலின்போது உலக யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அரசின் தவறான முடிவுகளுக்கு கவர்னர் கிரண்பேடி துணைபோகிறார் என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் கூட்டணி அரசும், கவர்னரும் பதவியேற்பதற்கு முன்பாக நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு 33 சதவீதம் வரை புதுவை அரசுக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால் இப்போது அந்த இடங்கள் பெறப்படவில்லை.

    தற்போது ஆட்சி முடியும் தருவாயில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் அரசுக்கு முற்றிலும் இடஒதுக்கீடு கிடைக்காத வகையில் அக்கல்லூரிகளுக்கு சாதகமாக விஞ்ஞான ரீதியில் திட்டமிட்டு புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைத்துக்கொள்ள அனுமதி அளிப்பது என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

    தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு சீட்கூட கிடைக்காது என்பதை அ.தி.மு.க. சீர்தூக்கி பார்த்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையின் முடிவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தது.

    ஆனால் தற்போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசின் தவறான முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் மாணவர் விரோத முடிவிற்கு கவர்னர் துணை போகக்கூடாது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு எதிரான ஒரு திட்டமிட்ட சதிச்செயலை ஆளும் அரசு அரங்கேற்றியுள்ளது. அரசின் பல தவறுகளை தடுத்து நிறுத்திய கவர்னர் கிரண்பேடி இந்த விஷயத்தில் அரசுக்கு துணைபோய் உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.

    கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடல், பஞ்சாலைகள் மூடல், அரிசி வழங்காமல் ரேஷன் கடைகள் மூடல், துறைமுக அபிவிருத்தி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது போன்ற பல்வேறு அரசின் தவறான முடிவுகளுக்கு கவர்னர் துணைபோய் உள்ளார். அந்த வகையில் இப்போது தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவுக்கும் துணைபோய் உள்ளார். இதை தடுத்து நிறுத்தும் விதமாக கட்சி தலைமையில் அனுமதி பெற்று பிரதமருக்கும், மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கும் அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுதுவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிமாநில பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் அனைத்து நிரம்பி வழிகிறது. சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரெசார்டுகளில் ஆட்டம், பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு களை கட்டும். புத்தாண்டை கொண்டாட தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

    தற்போது புதுவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. சென்னை, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கொரோனா பரவல் காரணமாக அரசு தடை விதித்துள்ளதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் புதுவைக்கு அதிகமாக படையெடுத்து வரத்தொடங்கி உள்ளனர்.

    அதன்படி ஆங்கில புத்தாண்டிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் புதுவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ரெசார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    இந்தநிலையில் கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் மக்களும் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் திரண்டனர். நோணாங்குப்பம் படகு குழாமில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இதனால் உள்ளூர், வெளியூர் வாகனங்கள் அதிகளவில் சென்றதால் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரதான சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
    கொரோனாவை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ்பெற்ற சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. விழாவை தொடர்ந்து அடுத்த 48 நாட்கள் வரை கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் ஆரோக்கியமாக வீடு திரும்ப வேண்டும். தொற்றால் புதுவை, காரைக்காலை சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. கோவில்களில் விழா ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எந்நேரத்திலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும் மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதனை சுட்டிகாட்டி, கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை காணொலி மூலமாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தேர்தல்கள் நம் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதைக் காட்டுகிறது.

    ஆனால், 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும் புதுவையில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடக்கவில்லை.

    புதுவை அரசு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து வருகிறது. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் நடத்துபவர்கள் தான் புதுவையில் ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று கூறினார்.

    இதற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறியதாவது:-

    பிரதமர் மாநில அரசாங்கத்தை குற்றம் கூறுவது அர்த்தமே கிடையாது. மாநில அரசிற்கு உண்டான அதிகாரத்தை முழுமையாக பறித்து கொண்டு கவர்னர் இந்த தேர்தலை நடத்தவில்லை. இதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    மாநில உரிமையை பறிப்பது தான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிப்பது ஜனநாயகம் இல்லை என்று பிரதமருக்கு தெரியவில்லை. அவர் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக முறைப்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாக கூறுகிறார். ஆனால் வேட்பாளர்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் செய்வது தான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியவில்லை.

    சிறைப்பிடித்து வீட்டுக் காவலில் வைத்து இருந்தனர். இதனால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா?

    அப்படியிருந்தும் காஷ்மீர் வாழ் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு எதிராகத் தான் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். ராணுவத்தை வைத்து கொண்டு முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

    ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    இதனிடையே புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் கூறியது போல புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல்கள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்து விட்டது. மேலும் போதிய சுகாதாரம் இல்லை, மோசமான நீர், அட்டவணை மேலாண்மை, வறட்சி, பள்ளி கல்வி மற்றும் பல பாதிக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு-காஷ்மீர் வென்றுள்ளது.

    புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர்.

    எல்லைப்பகுதிகளில் நடக்கும் தாக்குதல் எப்போதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. சம்பா, பூஞ்ச், கத்துவா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பதுங்கு குழிகளை நிர்மாணிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
    நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தனது குழுவினருடன் புதுவை கடற்கரை சாலை கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமசை கொண்டாடினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த்.

    நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தனது குழுவினருடன் ஆழ்கடலில் பல புதுவிதமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அதுபோல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமசை கொண்டாடினார்.

    இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பி.வி.சி. பைப் மூலம் தயாரிக்கப்பட்ட சாண்டா கிளாஸ் வாகனம் கடலுக்குள் இறக்கப்பட்டது.

    அந்த வாகனத்தில் சாண்டா கிளாஸ் உடை அணிந்து வந்த நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கல்குவாரியில் உள்ள நீர் நிலையின் ஆழத்திலும் அரவிந்த் குழுவினர் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனிபகவான் கோவிலுக்கு வருவோர் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இங்கு நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இதையொட்டி ஐகோர்ட்டு உத்தரவுபடி கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் விழா ஏற்பாடு செய்துள்ளது.

    ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முககசவம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்தில் நீராட அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்காக காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்த 2 ஆயிரத்து 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பில் உள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் செயல்படும் வயர்லெஸ் பிரிவில் பணியாற்றும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளை (27-ந் தேதி) கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றுதான் கோவிலுக்கு வரவேண்டும்.

    கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிந்தபின்னர்தான் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இல்லை என்ற சான்றை கையில் வைத்திருக்க வேண்டும்.

    கோவிலுக்கு வர முடியவில்லை என்றால் விழாவை நேரடியாக காணொலியில் பார்க்கலாம். இதற்காக சிறந்த காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்கள் சார்பில் செல்லும் நபர்களும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுள்ளன.
    காரைக்கால் :

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.

    2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அதன்படி சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    இந்தநிலையில் சனிப்பெயர்ச்சி விழா அன்று கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர் வழக்கு தொடர்ந்தார். கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என்றும், இது குறித்து, புதுச்சேரி கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகியோர் விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி, காரைக்காலில் நேற்று முன்தினம் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் கூறுகையில், சனிப்பெயர்ச்சி விழா குறித்து, ஏற்கனவே எடுத்த முடிவின்படி, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா நடத்தப்படும். முககவசம், சமூக இடைவெளி கட்டாயம். 

    ஆன்லைன் முன்பதிவு செய்து இருந்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நளன் குளத்தில் புனித நீராட தடை நீடிக்கும். முன்பதிவு செய்த அனைவரும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திகொண்டு, கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். அந்த சான்றிதழ் இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வயதானவர்கள், குழந்தைகள், நோய் பாதித்தவர்கள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
    ×