search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன் எம்எல்ஏ
    X
    அன்பழகன் எம்எல்ஏ

    அரசின் தவறான முடிவுகளுக்கு கவர்னர் துணைபோகிறார்- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

    அரசின் தவறான முடிவுகளுக்கு கவர்னர் கிரண்பேடி துணைபோகிறார் என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் கூட்டணி அரசும், கவர்னரும் பதவியேற்பதற்கு முன்பாக நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு 33 சதவீதம் வரை புதுவை அரசுக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால் இப்போது அந்த இடங்கள் பெறப்படவில்லை.

    தற்போது ஆட்சி முடியும் தருவாயில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் அரசுக்கு முற்றிலும் இடஒதுக்கீடு கிடைக்காத வகையில் அக்கல்லூரிகளுக்கு சாதகமாக விஞ்ஞான ரீதியில் திட்டமிட்டு புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைத்துக்கொள்ள அனுமதி அளிப்பது என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

    தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு சீட்கூட கிடைக்காது என்பதை அ.தி.மு.க. சீர்தூக்கி பார்த்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையின் முடிவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தது.

    ஆனால் தற்போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசின் தவறான முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் மாணவர் விரோத முடிவிற்கு கவர்னர் துணை போகக்கூடாது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு எதிரான ஒரு திட்டமிட்ட சதிச்செயலை ஆளும் அரசு அரங்கேற்றியுள்ளது. அரசின் பல தவறுகளை தடுத்து நிறுத்திய கவர்னர் கிரண்பேடி இந்த விஷயத்தில் அரசுக்கு துணைபோய் உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.

    கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடல், பஞ்சாலைகள் மூடல், அரிசி வழங்காமல் ரேஷன் கடைகள் மூடல், துறைமுக அபிவிருத்தி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது போன்ற பல்வேறு அரசின் தவறான முடிவுகளுக்கு கவர்னர் துணைபோய் உள்ளார். அந்த வகையில் இப்போது தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவுக்கும் துணைபோய் உள்ளார். இதை தடுத்து நிறுத்தும் விதமாக கட்சி தலைமையில் அனுமதி பெற்று பிரதமருக்கும், மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கும் அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுதுவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    Next Story
    ×