என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சேதராப்பட்டு அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காலாப்பட்டு:

    சேதராப்பட்டு அடுத்த கரசூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. உழவர்கரை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும் கவியரசன் (வயது 28) என்ற மகனும் உள்ளனர்.

    சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் கவியரசன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. இதனால் மகேஸ்வரி ஆரிய பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கருணாமூர்த்தியும் அவரது மனைவி விஜயாவும் தங்கள் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கவியரசன் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி கவியரசன் தனது வீட்டை பூட்டி விட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டார். மேல்தளத்தில் அவரது பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    கவியரசனின் தாயார் விஜயா காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், 1 லட்சம் ரொக்கம் திருடு போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து புகார் செய்ததன்பேரில் சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை சட்டமன்ற பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை ஒயிட் டவுன் பகுதியில் கவர்னர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம் போன்றவை உள்ளன. புதுவையில் சமீப காலமாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

    குறிப்பாக வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி போராட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் என நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களின்போது போராட்டக்காரர்கள் கவர்னர் மாளிகை, சட்டசபையை முற்றுகையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு மாணவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    திடீரென நடக்கும் இதுபோன்ற போராட்டங்களை தடுப்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் இதுபோன்று சம்பவங்கள் நடக்கும்போது கீழ்நிலை அதிகாரிகளை எச்சரிப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கவர்னர் மாளிகை, சட்டமன்ற பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிப்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அகன்‌ஷா யாதவ், மகே‌‌ஷ்குமார் பர்ன்வால், ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதுகாப்பினை பலப்படுத்த எங்கெங்கு தடுப்புகள் அமைப்பது, கூடுதல் போலீசாரை நியமிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனையும் நடத்தினார்கள்.
    மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
    மரக்காணம்:

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

    இதற்கிடையில் தன்னிச்சையாக கிராம சபை கூட்டம் யாரும் நடத்த கூடாது அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஆனாலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டத்தை இன்று காலை நடத்த தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார்.

    முன்னதாக அவருக்கு மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கிராம மக்களிடையே பேசினார்.

    அப்போது இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுக்கப்படும் என்றார்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. இணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,914 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,46,846 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,092 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,17,834 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24,661 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,914ஆக உயர்ந்துள்ளது.
    சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

    காரைக்கால்:

    புதுவை மாநில் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27- ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சிவிழா நடைபெறவுள்ளது. அப்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு 48 மணி நேரம் முன்பும், 48 மணி நேரம் பின்பும், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் வக்கீல் நாதன் வழக்கு தொடர்ந்தார்.

    விசாரணையின் முடிவில், கொரோனா விதிகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்திருந்தார்.

    மேலும் கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகிய 5 பேர் கொண்ட குழு, விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்களுக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி, புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மாவட்ட துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், வழக்கு தொடுத்த. வக்கீல் நாதன் ஆகிய 5 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் அருகே தரங்கம்பாடியில் நடந்தது.

    கூட்டம் முடிந்த பின்னர் கவர்னர் கிரண் பேடி திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அதன்பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறுகையில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனி பெயர்ச்சிவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், பக்தர்கள் எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    அரியாங்குப்பத்தில் துணை தாசில்தார் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு சீனிவாசா கார்டன்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிருத்திவி. இவர் காரைக்காலில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா. இவர்கள் அரியாங்குப்பம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றதும், புதிய வீடு கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக விமலா சென்று விடுவார். கடந்த சில நாட்களுக்கு முன் புதிய வீடு கட்டுமான செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இதற்காக வீட்டில் இரும்பு பெட்டியில் வைத்திருந்த பணத்தை விமலா எடுக்க சென்றார். ஆனால் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவன், மனைவி இருவரும் அடிக்கடி வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நைசாக வீட்டுக்குள் புகுந்து அலமாரியில் வைத்திருந்த இரும்பு பெட்டி சாவியை எடுத்து, திறந்து பணத்தை திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்.
    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மதுக்கடை ஊழியர், சாலையின் குறுக்கே சென்ற பன்றி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 48). புதுவையில் உள்ள தனியார் மதுபான கடையில் ஊழியராக வேலை செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராஜரத்தினம் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வில்லியனூர் செல்வா நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறிய ராஜரத்தினம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராஜரத்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.

    இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    புதுவையில் வீட்டு வேலைகள் செய்யாமல் இருந்த மகளை தாய் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    மூலக்குளம்:

    புதுவை சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த மாரிமுத்து மகள் சர்மிளா (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சர்மிளா வீட்டு வேலைகள் செய்யாமல் இருந்துள்ளார். இதனை அவரது தாயார் செண்பகவள்ளி கண்டித்தார். இதனால் கோபித்துக்கொண்டு சர்மிளா வீட்டை விட்டு வெளியேறினார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செண்பகவள்ளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 34 பேருக்கு தொற்று உறுதியானது. 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர்களில் 178 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 172 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 ஆயிரத்து 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 629 பேர் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.41 சதவீதமாகவும் உள்ளது.
    காரைக்கால் அருகே 8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

    இந்தநிலையில் அந்த தொழிலாளியின் மகளான 4-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் மிரட்டி, அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதுபற்றி சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, ஜெயராமன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி நெடுங்காடு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், ஜெயராமனை நேற்று கைது செய்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்பேரில், ஜெயராமன் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.
    புதுவை மக்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கருணையின் வடிவான ஏசுநாதர், மரியன்னையின் மகனாக இப்பூவுலகில் அவதரித்த அற்புத திருநாள் இந்த கிறிஸ்துமஸ் தினமாகும். அன்பின் மகத்துவத்தினை அகில உலகிற்கும் எடுத்துரைத்த ஏசுநாதர் மன்னிக்கும் குணத்தின் மகத்துவத்தையும் அறிய வைத்தார். எத்தனை இடர்கள் எதிர்ப்படினும் கொண்ட கொள்கையில் மாறாதிருக்கவேண்டும் என்பது ஏசுபிரானின் வாழ்க்கை நமக்களிக்கும் படமாகும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவிலை சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    காரைக்கால் :

    உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறுசனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அப்போது, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம், ஆன்லைன் முன் பதிவை கட்டாயமாக்கியுள்ளது.

    விழாவிற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கோவில் உள்ளே, வெளியே பக்தர்களின் நலன் கருதி, சாலை, சாக்கடை, மின்விளக்குகள் சீரமைப்பு, கைகழுவும் சானிடைசர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அன்னதானம் வழங்கல், நிழல் பந்தல், நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறை வசதிகள், கோவிலைச்சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி. டி.வி. கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும், வரும் 26, 27-ந் தேதி மற்றும் அடுத்த (ஜனவரி) மாதம் இறுதிவரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும், சனிபகவான் தரிசனத்திற்கு, தேவஸ்தானம் மூலம் ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் முன்பதிவு அவசியம். (ஆன்லைன் முகவரி- www.thirunallarutemple.org) முன் பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், முககவசம், சமூக இடைவெளி மிக அவசியம்.

    சனிப்பெயர்ச்சி நாள் மட்டுமல்லாது அன்றைய தேதியிலிருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, தேவஸ்தான ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, கோவிலைச் சுற்றி, திருநள்ளாறு ரிங் ரோடு ஹெலிபேட் தளம், திருநள்ளாறு கான்பெட் பெட்ரோல் நிலையம், ரிஜிஸ்டர் அலுவலகம் மற்றும் செருமாவிளங்கை பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி, கோட்டுசேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருமலைராயன்பட்டினம் மின்திறல் குழுமம், அம்பகரத்தூர் அரசு திருவள்ளுவர் பள்ளி அருகில் என 7 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு முன்பதிவு செய்ய ஆதார்கார்டு அவசியம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முக்கியமாக, சனிப்பெயர்ச்சி அன்றும் அதற்கு அடுத்து வரும் 48 நாட்களும், சனி பகவானின் நளன் குளத்தில் புனித நீராடவோ, மத சடங்குகள் செய்யவோ அனுமதி இல்லை. அதனால், நளன்குளம் பக்கம் பக்தர்கள் செல்ல வேண்டாம். சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ×