என் மலர்
புதுச்சேரி
வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல், மதுபானங்கள் விலை உயர்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.
இதனை உறுதிபடுத்தும் வகையில் கவர்னர் கிரண் பேடி, புதுவை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி புதுவையில் பொது இடங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட அனுமதியில்லை என கலெக்டர் பூர்வா கார்க்கும் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடையில்லை. சமூகஇடைவெளி, முக கவசத்துடன் விழாக்களை கொண்டாடலாம். விழாவிற்கு தடை போட யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு 200 பேர் வரை அனுமதிக்கலாம் என அதிரடியாக தெரிவித்தார். இதற்கு பதிலாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் அவருடன் பக்கத்து சீட்டில் பயணித்த புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமையில் உள்ளார்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டு கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் விழாக்களை கொண்டாடவும், கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூடவும் தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மக்கள் புதுவைக்கு அதிகமாக வரும் வாய்ப்புள்ளது.
தற்போது புதுவையில் கொரோனா பரவி வரும் நிலையில் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தால் சுற்றுலா பயணிகள், வெளிமாநிலத்தினர் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு கவர்னர் பதிவிட்டுள்ளார்.
இதனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதுவை கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதலால் அரசு திட்டங்கள், விழாக்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
இதில் கவர்னர் பக்கம் தான் அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் உத்தரவில்லாமல் அரசு துறைகள் இயங்காது. கொரோனா ஊரடங்கு தளர்வில் கடைகள், வணிக நிறுவனங்களை காலை 9 மணி முதல் திறக்க நாராயணசாமி உத்தரவிட்டார்.
ஆனால் போலீசார் எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்று கூறி கடைகளை அடைக்கும்படி கூறினர். எனவே, முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்மொழி உத்தரவிட்டாலும், அரசு அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ உத்தரவு கிடைத்தால் மட்டுமே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும்.
புதுச்சேரி:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விழுப்புரம்-கடலூர் பகுதிகளில் தேர்தல் பிரசார சுற்று பயணம் செய்தார். பின்னர் அவர் நேற்று இரவு புதுவைக்கு வந்தார்.
புதுவை கம்பன் கலையரங்கில், "புதியதோர் புதுவை செய்வோம்" என்ற தலைப்பில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகம், புதுவை நிர்வாக ரீதியாக வேறு வேறு மாநிலமாக இருந்தாலும் மொழி, இனம் பண்பாட்டால் நாம் அனைவரும் தமிழர்கள்.
புதுவையை ஊழல் அரசியல்வாதிகள், ரவுடிகள் மாறி மாறி அதிகாரத்தை கைப்பற்றி சீரழித்து விட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு உதாரணமாக புதுவையில் தற்கொலை எண்ணிக்கை தேசிய அளவை விட அதிகமாக உள்ளது.
புதுவை சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என் நேரடி பார்வையில் போட்டியிடும்.
புதுவையை முன் மாதிரி மாநிலமாக மாற்றி காட்டுவேன். புதுவையை உலகவரைபடத்தில் இடம் பெற செய்யும் தகுதி மக்கள் நீதி மைய்யத்திற்கு உள்ளது. புதுவையின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை பெற்று தருவோம். இந்த எழுச்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் மக்கள் நீதி மய்யம் பெறும் விருட்சமாக மாறும். நான் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.
உலகில் அனைவரும் என் குடும்பம் என்று நினைப்பவன் நான். தமிழ் வளர்த்தோரை புதுவை வளர்த்துள்ளது. என்னை திரை நட்சத்திரமாக பார்க்காமல், உங்கள் வீட்டு விளக்காக பார்க்க வேண்டும். ஒளி வீசும் திரியாக என்னை ஏற்ற வேண்டும்
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
புதுச்சேரி:
தமிழகம்-புதுவை, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் புதுவை வந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ்சின்கா தலைமையில் துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ்குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் கொண்ட தேர்தல் ஆணைய உயர் மட்டக்குழுவினர் புதுவை அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.
பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. , தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ்சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு-புதுவையில் தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆராய்ந்தோம். வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை வாக்கு மையங்களிலும் நடத்த கூறியுள்ளோம். வீடுவீடாக சென்றும் வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யப்படும். தகுதியான வாக்காளர் பெயர் கண்டிப்பாக பட்டியலில் இணைக்கப்படும்.
வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் துணை வாக்கு சாவடிகளாக பிரிக்கப்படும்.
வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். கொரோனா தொற்றினை தடுக்க வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்படும். வாக்காளர்களுக்கு பரிசு, பணம் தருவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்தில் கொள்வோம். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்கு மொழி தடையில்லை. அவரது பணியையே முக்கியமாக கவனத்தில் கொள்வோம்.
இவ்வாறு உமேஷ்சின்கா கூறினார்.
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கிருமியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்திவிட்டன. இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் அருகில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த 30 வயது பெண் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணை கண்டறிந்து புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர் நலமாக உள்ளதாகவும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இல்லை எனவும், புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இருந்து யார் வந்தாலும் 5 நாட்கள் தனிமைப்படுத்தி 14 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடற்கரை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு வரும்போது கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மைஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை.
மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் புத்தாண்டு கொண்டாடலாம் என்று தெரிவித்தார்.
சேதராப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மத்திய ஜெயிலில் கடந்த 18-ந்தேதி சுற்றுச்சுவர் அருகே 3 காகித பார்சல்கள் கிடந்தது.
ஜெயில் அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா, மதுபாட்டில்கள், ஊறுகாய், கருவாடு, மொபைல்போன், 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த கஞ்சா மற்றும் மதுபாட்டில், மொபைல் போன் போன்றவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளான மேட்டுப்பாளையம் தமிழரசன், கிருஷ்ணா, நந்தகுமார், சசி, ஆகியோருக்கு வீசப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த வானூர் அருகே உள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். இங்கு 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆரோவில், குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர் குற்றங்கள் நடப்பதால் தற்போது அங்கு புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு்ள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம் வரவேற்றார். புறக்காவல் நிலையத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் போலீசாரிடம் கூறுகையில், ஆரோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் ஆகும். இங்கு புதுச்சேரியில் இருந்து போதை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்படி யாரேனும் போதைப்பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரோவில் உள்ள சாலைகள் இரவு நேரங்களில் இருட்டாக உள்ளது. தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆரோவில் சர்வதேச நகர நிர்வாகி சீனிவாச மூர்த்தி, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், வானூர் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரியூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பாஸ்கர். சகோதரர்களான இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆலையில் உற்பத்தியான சர்க்கரையை குடோனில் வைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் பெற்றனர்.
அதையடுத்து வங்கி அதிகாரிகள் குடோனில் பார்வையிட்டு சர்க்கரை அளவை குறிப்பிட்டு விட்டு குடோனை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர்.
இந்தநிலையில் வங்கி கட்டுப்பாட்டில் இருந்த குடோனில் வைக்கப்பட்ட சர்க்கரை மூட்டைகளை கண்ணன், பாஸ்கர் ஆகியோர் திருடி விற்றனர். இதற்கிடையே வங்கி அதிகாரிகள் மீண்டும் குடோனில் நடத்திய ஆய்வில் சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து வங்கி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இறுதிகட்ட விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கண்ணன், பாஸ்கர் ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி தீர்ப்பளித்தார்.
இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி என்கிறோம்.
இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் வருகிற ஜனவரி 31-ந்தேதி வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் சனிபகவானை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அதிகாலை 3.30 மணி முதல், சமூக இடைவெளி, முககவசத்துடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கோவில் உள்ளே, வெளியே பக்தர்களின் நலன் கருதி, அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, பக்தர்கள் நடந்து செல்லும் பாதை, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக திருநள்ளாறு பேருந்து நிறுத்தம் அருகே, தகரத்தால் ஆன நிழல் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் 4 வீதிகளிலும் உள்ள குப்பைகளை கோவில் ஊழியர்கள் தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், குண்டும் குழியுமான 4 வீதிகளும் ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு முதல் காரைக்கால் நகர் பகுதி் வரையிலான சாலை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருநள்ளாறு முழுவதும் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு சனி பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா கூறியதாவது:- வருகிற 27-ந் தேதி 5:22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி சனிபகவான் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (ஆன்லைன் முகவரி-https:// thirunallarutemple.org/sanipayarchi/) முன்பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
48 நாள் தரிசிக்கலாம்
சனி பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியிலிருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். சனி பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை இந்த தரிசனம் பெற்றுத்தரும். இதற்கான விரிவான மற்றும் பாதுகாப்பான நடவடிக்கைகள், கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
சனிபெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. முக்கியமாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் திருப்பதி, குமுளி, நாகர் கோவில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், நகர பகுதிக்குள் டவுன்பஸ், மினி பஸ் ஆகியவை இயக்கப்படுகிறது.
அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களை தனியாருக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அரசின் சாலை போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார் மயமாகும் என்ற அச்சம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
புதுவை அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. பி.ஆர்.டி.சி.யில் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் திடீரென தங்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பணிக்கு வந்த அவர்கள் பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு ஒன்று கூடி பணியை புறக்கணித்தனர்.
பி.ஆர்.டி.சி. நிர்வாகம் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களை மட்டும் நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கியது. வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட ஆட்கள் பற்றாக்குறையால் நகரம், கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
புதுவை கோரிமேடு, கன்னியக்கோவில் வீராம்பட்டினம், திருக்கனூர், கரையாம்புத்தூர், நல்லவாடு, மடுகரை, மண்ணாடிப்பட்டு, காலாப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இயக்கப்பட வில்லை.
இதுபோல நகர பகுதிக்குள் மட்டும் இயக்கப்படும் மினி பஸ்களும் நிறுத்தப்பட்டது. சுமார் 40 பஸ்கள் இயங்க வில்லை. இதனால் புதுவைக்கு வேலைக்கு வந்து செல்லும் பயணிகளும், புதுவையிலிருந்து வேலைக்கு செல்வோரும் பஸ் வசதியின்றி தவித்தனர்.
அதேநேரத்தில் தனியார் பஸ்கள், தமிழக அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கியது.






