என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை தண்டனை
    X
    சிறை தண்டனை

    சர்க்கரை ஆலை நிர்வாகிகளுக்கு 3 ஆண்டு சிறை- புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு

    வங்கியில் கடன் வாங்கி விட்டு சர்க்கரை மூட்டைகளை திருடி விற்ற ஆலை நிர்வாகிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பாஸ்கர். சகோதரர்களான இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆலையில் உற்பத்தியான சர்க்கரையை குடோனில் வைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் பெற்றனர்.

    அதையடுத்து வங்கி அதிகாரிகள் குடோனில் பார்வையிட்டு சர்க்கரை அளவை குறிப்பிட்டு விட்டு குடோனை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர்.

    இந்தநிலையில் வங்கி கட்டுப்பாட்டில் இருந்த குடோனில் வைக்கப்பட்ட சர்க்கரை மூட்டைகளை கண்ணன், பாஸ்கர் ஆகியோர் திருடி விற்றனர். இதற்கிடையே வங்கி அதிகாரிகள் மீண்டும் குடோனில் நடத்திய ஆய்வில் சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதையடுத்து வங்கி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இறுதிகட்ட விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கண்ணன், பாஸ்கர் ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×