search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறு
    X
    திருநள்ளாறு

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுள்ளன.
    காரைக்கால் :

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.

    2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அதன்படி சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    இந்தநிலையில் 
    சனிப்பெயர்ச்சி
     விழா அன்று கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர் வழக்கு தொடர்ந்தார். கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என்றும், இது குறித்து, புதுச்சேரி கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகியோர் விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி, காரைக்காலில் நேற்று முன்தினம் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் கூறுகையில், 
    சனிப்பெயர்ச்சி
     விழா குறித்து, ஏற்கனவே எடுத்த முடிவின்படி, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா நடத்தப்படும். முககவசம், சமூக இடைவெளி கட்டாயம். 

    ஆன்லைன் முன்பதிவு செய்து இருந்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நளன் குளத்தில் புனித நீராட தடை நீடிக்கும். முன்பதிவு செய்த அனைவரும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திகொண்டு, கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். அந்த சான்றிதழ் இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வயதானவர்கள், குழந்தைகள், நோய் பாதித்தவர்கள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×