search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    சனிபகவான் கோவிலுக்கு வருவோர் கொரோனா சான்று அவசியம்- கவர்னர் கிரண்பேடி உத்தரவு

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனிபகவான் கோவிலுக்கு வருவோர் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இங்கு நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இதையொட்டி ஐகோர்ட்டு உத்தரவுபடி கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் விழா ஏற்பாடு செய்துள்ளது.

    ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முககசவம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்தில் நீராட அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்காக காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்த 2 ஆயிரத்து 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பில் உள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் செயல்படும் வயர்லெஸ் பிரிவில் பணியாற்றும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளை (27-ந் தேதி) கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றுதான் கோவிலுக்கு வரவேண்டும்.

    கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிந்தபின்னர்தான் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இல்லை என்ற சான்றை கையில் வைத்திருக்க வேண்டும்.

    கோவிலுக்கு வர முடியவில்லை என்றால் விழாவை நேரடியாக காணொலியில் பார்க்கலாம். இதற்காக சிறந்த காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்கள் சார்பில் செல்லும் நபர்களும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×