என் மலர்
புதுச்சேரி
புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் 7-ந் தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் பங்கீட்டில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து புதிய அமைச்சர்கள் பட்டியலை கடந்த 23-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கான இலாகாக்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பதவியேற்பு விழா முடிந்ததும் நேராக சட்டசபைக்கு வரும் அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதற்காக சட்டசபை வளாகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சர்கள் பட்டியல் தற்போது புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவர்கள் மீது பற்று கொண்டவர். ரங்கசாமியை மாணவர்கள் சந்தித்து கல்வி உதவி கேட்கும்போது தனது சொந்த நிதியை வாரி வழங்குவார்.
இந்த நிலையில் ரங்கசாமியின் சகோதரி உடல்நல பாதிப்பால் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பேராவூரில் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.
அப்போது அவ்வூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு ரங்கசாமி ஆசி வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட தயாரானபோது ஒரு மாணவன் ஓடி வந்தான். இதைக்கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி காரில் இருந்து இறங்கி, என்ன வேணும்? என கேட்டார். அவன் ஒரு நோட்டை நீட்டி ஆட்டோகிராப் வேண்டும் என கேட்டான். உடனே ரங்கசாமி அந்த நோட்டை வாங்கி, நல்வாழ்த்துக்கள். படி..படி..படி.. முன்னேறலாம்.. ந.ரங்கசாமி என கையெழுத்திட்டு கொடுத்தார்.
அதனை ஆர்வமாக வாங்கிச்சென்ற சிறுவன் தனது சக நண்பர்களிடம், முதல்-அமைச்சர் கையெழுத்து என காட்டி பெருமிதம் கொண்டான்.
புதுவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்ட உபகரணங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத் துறையிடம் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்கக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழாவின் போது ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி தருவதாக குமரன் ஸ்டோர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா 3-வது அலை வரும் என்றும், வராது என்றும் சிலர் கூறுகின்றனர். இருந்த போதிலும் நாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இந்த நிலையில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வகையான கொரோனா பாதிப்பு நமது மாநிலத்தில் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும்.
ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளேன். விமான நிலைய விரிவாக்கம் என்பது தமிழகம் - புதுவைக்கு நன்மையை தரும். சுற்றுலா மேம்படும்.
முதல்-அமைச்சர் வழங்கிய அமைச்சரவை பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் வருகிற 27-ந் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பங்கூர் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 40). இவர் அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் சரவண பெருமாள் (25) ஆகியோரும் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே மணிபாலன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அப்போது ஊர் பஞ்சாயத்தார்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிபாலன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டு உரிமையாளரிடம் மணிபாலன் குறித்து தவறான தகவலை சரவண பெருமாள் கூறியதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மணி பாலன் நடந்து வந்த போது, சரவண பெருமாள் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் ஆகியோர் மணிபாலனை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் சரவண பெருமாள் இரும்பு பைப்பை எடுத்து வந்து மணிபாலன் தலையில் தாக்கினார்.
அதோடு மணிபாலனை கொலை செய்து விடுவதாக சரவண பெருமாளும், அவரது தந்தை சீனிவாசனும் மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிபாலன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்துள்ளது.
கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியும், என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர், துணை சபாநாயகர் பதவியும் என பங்கீடு ஏற்பட்டது. இருப்பினும் அமைச்சர் பதவியேற்பு தொடர்ந்து தாமதமாகி வந்தது.
அதேநேரத்தில் பா.ஜ.க. தரப்பில் நமச்சிவாயம், சாய்.சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக பரிந்துரை செய்து பட்டியலை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கடந்த வாரம் அளித்தனர்.
என்.ஆர். காங்கிரசில் அமைச்சர்கள் யார்? என்பதை முடிவு செய்யாததால் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கவர்னர் தமிழிசை தெலுங்கானா சென்றார். இதனால் பதவியேற்பு ஒரு வாரம் தாமதமாகும் என்ற தகவல் வெளியானது.
இதனிடையே கவர்னர் தமிழிசை இன்று காலை திடீரென புதுவைக்கு திரும்பினார்.
காலை 9.45 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து கவர்னர் தமிழிசையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்தார்.
அப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அமைச்சர்கள் பட்டியலை ரங்கசாமி கவர்னரிடம் வழங்கினார். பா.ஜ.க. தரப்பில் நமச்சிவாயம், சாய்.சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன், திருமுருகன் ஆகியோர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக ரங்கசாமியிடம் கேட்டபோது, அமைச்சர்கள் பட்டியலை வழங்கியுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதி வந்தவுடன் பெயர் விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர்கள் பட்டியல் உள்துறை அனுமதிக்காக கவர்னர் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்றே அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நாளை பவுர்ணமி நாளில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். ஒருவேளை காலதாமதமாகும்பட்சத்தில் 27-ந்தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.
தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு பின் இன்று அமைச்சரவை பட்டியல் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 60). இவர் தனது முதல் கணவரை விட்டு பிரிந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (50) என்பவரை 2-வது திருமணம் செய்தார்.
சாந்தகுமாருடன் மஞ்சுளா வில்லியனூர் உளவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மரம் ஏறும் தொழில் செய்து வந்த சாந்தகுமார் பின்னர் அந்த தொழிலை கைவிட்டு டைல்ஸ் போடும் வேலைக்கு சென்று வந்தார். சாந்தகுமாருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இதற்கிடையே குழந்தை இல்லாததால் சாந்த குமார் விரக்தியில் அளவுக்கு அதிகமாக குடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மஞ்சுளா உருவையாறில் வசிக்கும் தனது அக்காள் சரோஜா வீட்டுக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கூரையின் இரும்பு பைப்பில் சாந்தகுமார் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மஞ்சுளா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை உள்ளாட்சி துறை, வார்டு வாரியான தொகுதி மறுசீரமைப்பு வரையறையை முடித்து அதற்கான ஆணைகளை கடந்த ஜூன் 4-ல் வெளியிட்டது.
இதற்கென புதுவை மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி, வட்டார தேர்தல் அதிகாரி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது.
அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் வார்டு வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 21-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜூன் 28-ந் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் இடமாற்றம் பற்றிய விவரங்கள் ஏதுமிருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அணுகலாம்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 1.1.2021-ம்அன்று தகுதி தேதியாக கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுவை சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாகூர் அருகே காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது தந்தை கோபால கிருஷ்ணன் (வயது 87). இவர் தனது மகன் ஜானகிராமன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கோபாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதற்காக நாட்டு வைத்தியமும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீட்டின் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்தில் ஏணி வைத்து ஏறி தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஜானகிராமன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதீனன் (வயது49). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
தேவதீனன் வீட்டின் அருகே சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கடந்த மாதம் தேவதீனனின் வீட்டு ஜன்னலை கற்களை வீசி உடைத்து விட்ட நிலையில் நேற்று மீண்டும் தேவதீனன் வீட்டின் மீது சுந்தர்ராஜன் மகன் கற்களை வீசினான்.
இதனை தேவதீனன் தட்டிக்கேட்டார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டிய சுந்தர்ராஜ், அவரது மகன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து தேவதீனனை தலையில் வெட்டினார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அலோந்தோன் மற்றும் தேவதீனனின் தம்பி அருணாசலம் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களை சுந்தர்ராஜனும், அவரது மகனும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் இனிமேல் என்னிடம் வைத்துக் கொண்டால் உங்களை கொலை செய்துவிடுவேன், நான் மைனர் என்பதால் என்னை போலீஸ் ஒன்றும் செய்துவிடாது என்று சுந்தர்ராஜன் மகன் மிரட்டினான்.
இந்த தாக்குதலில் காயமடைந்த தேவதீனன் மற்றும் அலோந்தோன், அருணாசலம் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து தேவதீனன் உருளையன்பேட்டை போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜன் மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள்.
புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். கவர்னரும், பல்கலைக்கழகத்தின் தலைமை காப்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இந்த மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் 60 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடியில் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விழாவில் ஆய்வுகள், கல்வி கண்டுபிடிப்பு மற்றும் கிராமப்புற புனரமைப்பு இயக்குனர் பாலகிருஷ்ணன், கலாசார மற்றும் கலாசார உறவுகள் இயக்குனர் ராஜீவ் ஜெயின், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சித்ரா, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சுகாதாரத்துறை செயலர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






