search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி சட்டசபை
    X
    புதுச்சேரி சட்டசபை

    கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு பரிசு- புதுவை அரசு அதிரடி அறிவிப்பு

    புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் அதை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது தீவிரமாக பரவியது.

    புதுச்சேரியிலும் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து நோய் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2-வது இடத்துக்கு சென்றது.

    இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முதலில் இதற்கு மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    அரசு சார்பில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியது. இதன்காரணமாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.

    இதற்கிடையே மக்களின் ஆர்வத்தை குறையவிடாமல் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களிடமும் இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    இதனை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், தடுப்பூசி திருவிழாவின் செயல்பாடுகள் குறித்தும் அரசு சார்பில் தலைமை செயலகத்தில் நேற்று இரவு ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் அருண் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தடுப்பூசி திருவிழாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் அதை மேலும் 2 நாட்களுக்கு (ஞாயிறு, திங்கட்கிழமை) நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

    இந்த தடுப்பூசி திருவிழாவின்போது (கடந்த 16-ந் தேதி முதல் நாளை மறுநாள் வரை) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 25 அதிர்ஷ்டசாலிகள் தினமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மக்கள் மேலும் ஆர்வத்துடன் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.

    அதேபோல் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட முதல் 10 கிராமங்களுக்கு விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த 10 சிறந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கும், 6 சிறந்த பஞ்சாயத்து அளவிலான குழுக்களுக்கும், சிறந்த ஆஷா பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், களப்பணி குழுவினர் என தலா 5 பேருக்கும், 5 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், 5 தன்னார்வலர்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் பரிசுத்தொகையுடன் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தைய்யா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×