search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நமச்சிவாயம் - சாய் சரவணன் குமார் - தேனீ.ஜெயக்குமார்
    X
    நமச்சிவாயம் - சாய் சரவணன் குமார் - தேனீ.ஜெயக்குமார்

    புதுவையில் புதிய அமைச்சர்கள் நாளை பதவி ஏற்பு- விழா ஏற்பாடுகள் தீவிரம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் 7-ந் தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அமைச்சர்கள் பங்கீட்டில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து புதிய அமைச்சர்கள் பட்டியலை கடந்த 23-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கான இலாகாக்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    புதிய அமைச்சர்களின் பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி வைத்தார். அந்த பட்டியலுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகை முன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் நடக்கிறது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதற்காக அங்கு மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சந்திர பிரியங்கா - லட்சுமிநாராயணன்

    பதவியேற்பு விழா முடிந்ததும் நேராக சட்டசபைக்கு வரும் அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதற்காக சட்டசபை வளாகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அமைச்சர்கள் பட்டியல் தற்போது புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
    Next Story
    ×