என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், திருமண நிலையங்கள் உள்பட 100 இடங்களில் நடக்கிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கிராமப்புறங்களில் ஆர்வம் காட்டாத மக்கள் தற்போது தடுப்பூசி திருவிழாவில் ஊசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
திருக்கனூர் பகுதியில் செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் மருத்துவ அதிகாரி டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தடுப்பூசி திருவிழா முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை இந்த 3 கிராமங்களில் கடந்த 3 நாட்களில் சுமார் 700 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி திருவிழாவில் இன்று கொடாத்தூர் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் திருக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது தீவிரமாக பரவியது.
புதுச்சேரியிலும் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து நோய் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2-வது இடத்துக்கு சென்றது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முதலில் இதற்கு மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
அரசு சார்பில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியது. இதன்காரணமாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.

இதனை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், தடுப்பூசி திருவிழாவின் செயல்பாடுகள் குறித்தும் அரசு சார்பில் தலைமை செயலகத்தில் நேற்று இரவு ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் அருண் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடுப்பூசி திருவிழாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் அதை மேலும் 2 நாட்களுக்கு (ஞாயிறு, திங்கட்கிழமை) நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி திருவிழாவின்போது (கடந்த 16-ந் தேதி முதல் நாளை மறுநாள் வரை) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 25 அதிர்ஷ்டசாலிகள் தினமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மக்கள் மேலும் ஆர்வத்துடன் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.
அதேபோல் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட முதல் 10 கிராமங்களுக்கு விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த 10 சிறந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கும், 6 சிறந்த பஞ்சாயத்து அளவிலான குழுக்களுக்கும், சிறந்த ஆஷா பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், களப்பணி குழுவினர் என தலா 5 பேருக்கும், 5 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், 5 தன்னார்வலர்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் பரிசுத்தொகையுடன் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தைய்யா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வாழைக்குளம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜன்பாபு. இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது25). இவர் அலுமினியம் சேனல் செய்யும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது தெருமுனையில் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவா மற்றும் அவரது மகன்கள் பிரச்சினை செய்ததால் அவர்களிடம் சந்தோஷ்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத சிவா மற்றும் அவரது மகன்கள் லோகேஷ், சுரேஷ் மற்றும் இவரது நண்பர்கள் கூட்டமாக சந்தோஷ்குமாரின் வீட்டில் புகுந்து பீர்பாட்டிலால் குத்தினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.
அதோடு இனிமேல் எங்களிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து அவர் தன்னை தாக்கிய கும்பலுக்கு பயந்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததால் நடந்த சம்பவம் குறித்து சந்தோஷ்குமாரின் தாய் சாந்தி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா மற்றும் அவரது மகன்கள் லோகேஷ், சுரேஷ் மற்றும் இவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 597 பேர் குணமடைந்தனர். தற்போது 695 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 800 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,702 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது ஜிப்மரில் நல்லூரை சேர்ந்த 58 வயது ஆண், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வில்லியனூரை சேர்ந்த 40 வயது ஆண், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நைனியப்பபிள்ளை வீதியை சேர்ந்த 58 வயது பெண், பூரணாங்குப்பத்தை சேர்ந்த 56 வயது ஆண், தர்மபுரியை சேர்ந்த 80 வயது முதியவர், ஏனாமில் 75 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர்.
புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 94.55 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 111 பேரும், முன் களப்பணியாளர்கள் 11 பேரும், பொதுமக்கள் 5 ஆயிரத்து 740 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுவை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் முதல், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி (ஜூலை) வகுப்புகள் தொடங்க உள்ளன. எம்.பி.பி.எஸ். 2.ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், 2-வது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.
புதுவை சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் கடந்த 12-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனுதாக்கல் காலக்கெடு முடிந்தது. எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழ்தாய் வாழ்த்துடன் சபை கூடியது.

தொடர்ந்து பேசிய தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், ஒரு உறுப்பினரே மனு செய்துள்ளதால் போட்டியின்றி ஏம்பலம் செல்வம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் சபாநாயகர் இருக்கைக்கு வரும்படி ஏம்பலம் செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். அவை முன்னவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர், ஏம்பலம் செல்வத்தை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
தொடர்ந்து கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினர். முதல்-அமைச்சர் ரங்கசாமியும், சபாநாயகரை வாழ்த்தி பேசினார். இறுதியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஏற்புரையாற்றினார்.
இதையடுத்து சபையின் இன்றைய அலுவல்கள் அனைத்தும் நிறைவுபெறுவதாக கூறி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
புதுவை சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பை சட்டமன்ற செயலர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். நேற்று மணவெளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவரின் மனுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிந்தும், வழி மொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நாளை (புதன்கிழமை) சட்டசபை கூடுகிறது. அப்போது தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.
தொடர்ந்து சபாநாயகரை பதவியேற்க அழைப்பார். அவை முன்னவர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித்தலைவர் சிவாவும் சபாநாயகரை அழைத்து சென்று இருக்கையில் அமர வைக்கின்றனர்.
பின்னர் புதிய சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு புதுவை சட்டமன்றத்துக்கு பா.ஜனதா சார்பில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 20 ஆண்டுகளாக இல்லை.
கடந்த சட்டமன்றத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வில் 6 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வம் சபாநாயகராகியுள்ளார்.
பா.ஜ.க.வில் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதுவை சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் சபாநாயகராக பதவியேற்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது.
புதுவையிலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.
காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அரசின் கடுமையான நடவடிக்கைகளால் புதுவையில் 2 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது.
இதையடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. பெரிய மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் வரும் 21-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் காய்கறி மற்றும் பழ கடைகள் அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம்.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம். மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.
சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொதுப்போக்குவரத்து (பஸ், கார், ஆட்டோ) மாலை 5 மணி வரை இயங்கலாம்.
கடற்கரை சாலையில் நடை பயிற்சி செல்ல காலை 5 மணி முதல் 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள், மது பார்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.






