search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    என்.ஆர்.காங்-பா.ஜ.க. அமைச்சர்கள் பட்டியல்: கவர்னரிடம் ரங்கசாமி வழங்கினார்

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது, அமைச்சர்கள் பட்டியலை வழங்கியுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதி வந்தவுடன் பெயர் விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்துள்ளது.

    கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியும், என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர், துணை சபாநாயகர் பதவியும் என பங்கீடு ஏற்பட்டது. இருப்பினும் அமைச்சர் பதவியேற்பு தொடர்ந்து தாமதமாகி வந்தது.

    அதேநேரத்தில் பா.ஜ.க. தரப்பில் நமச்சிவாயம், சாய்.சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக பரிந்துரை செய்து பட்டியலை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கடந்த வாரம் அளித்தனர்.

    என்.ஆர். காங்கிரசில் அமைச்சர்கள் யார்? என்பதை முடிவு செய்யாததால் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கவர்னர் தமிழிசை தெலுங்கானா சென்றார். இதனால் பதவியேற்பு ஒரு வாரம் தாமதமாகும் என்ற தகவல் வெளியானது.

    இதனிடையே கவர்னர் தமிழிசை இன்று காலை திடீரென புதுவைக்கு திரும்பினார்.

    காலை 9.45 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து கவர்னர் தமிழிசையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்தார்.

    அப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அமைச்சர்கள் பட்டியலை ரங்கசாமி கவர்னரிடம் வழங்கினார். பா.ஜ.க. தரப்பில் நமச்சிவாயம், சாய்.சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன், திருமுருகன் ஆகியோர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆனால் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக ரங்கசாமியிடம் கேட்டபோது, அமைச்சர்கள் பட்டியலை வழங்கியுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதி வந்தவுடன் பெயர் விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    அமைச்சர்கள் பட்டியல் உள்துறை அனுமதிக்காக கவர்னர் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்றே அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நாளை பவுர்ணமி நாளில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். ஒருவேளை காலதாமதமாகும்பட்சத்தில் 27-ந்தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.

    தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு பின் இன்று அமைச்சரவை பட்டியல் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×