என் மலர்
புதுச்சேரி
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை.
- அண்ணா இனிவரும் ஆட்சி உங்களுடையதுதான். இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் அனைவரும் பயப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி குயவர் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினி லாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் போனதால் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதுதொடர்பாக கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி விக்ரமிற்கு போன் செய்து பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விக்ரமிற்கு அவரது மனைவி ஆறுதல் கூறிவந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விக்ரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் விக்ரம் தன் கைப்பட த.வெ.க. தலைவர் விஜய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
3 பக்கம் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், நான் கடன் வாங்கிய தொகைக்கு சரியாக வட்டி செலுத்தி வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை.
எனவே கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்டு சித்ரவதை செய்தனர். மேலும் தவறாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது கடைசி ஆசை என்னவென்றால் கந்து வட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா இனிவரும் ஆட்சி உங்களுடையதுதான். இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் அனைவரும் பயப்பட வேண்டும்.
அண்ணா தயவு செய்து என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு பணம் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பால் படிக்க வையுங்கள் அண்ணா...
பிளீஸ் உங்களை நம்பிதான் உயிரை விடுகிறேன். ஹெல்ப்மீ மை பேமலி.
நான் இறந்த பிறகு என் உடலில் உள்ள உறுப்புகளை விற்று அதற்கு மாறாக எனது மனைவி மற்றும் பிள்ளைக்கு ஏதாவது பணம் தரவேண்டும் என்று வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து தொல்லை கொடுத்தவர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
- பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.
கத்திரியின் முதல் நாளில் புதுச்சேரியில் 100.6 டிகிரியும். 12-ந் தேதி 102.6 டிகிரியும் பதிவானது. அதன் பிறகு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கத்திரியின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் கத்திரி முடிந்த பிறகும் அனல் காற்றுடன் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கடந்த 11 மற்றும் 22-ந் தேதிகளில் பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. அதன் பிறகு மீண்டும் தினமும் வெயில் அதிகரித்து காணப்பட்டது சராசரியாக 97 முதல் 99 டிகிரி வரை வெயில் வாட்டி எடுத்தது.
இந்நிலையில் மாலை 6 மணிக்கு லேசாக தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது. பலத்த காற்று, இடி, மின்ன லுடன் சுமார் 45 நிமிடம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சற்று ஓய்ந்த நிலை யில், மீண்டும் இரவு 8.40 மணி முதல் அரை மணி நேரம் கனமழை பெய்தது.
மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜர் சாலை, 45 அடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
100அடி ரோடு மேம்பாலத்தில் இருந்து வில்லியனூருக்கு செல்லும் புதிய பைபாஸ் ரோடு இறக்கத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சூறை காற்று மழையால் கீழே சரிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும்காயம் ஏற்படவில்லை. இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், மூலகுளம்-விழுப்புரம் மெயின் ரோட்டில் பெயர் பலகை உயர்மின் அழுத்த கம்பி மீது விழுந்தது. இது பற்றி தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரி செய்தனர். பலத்த மழையால் புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
- புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார்.
- ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். பாஜக-வை சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார். காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக எம்.எல்.ஏ. ஜான் குமாருக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
- அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
- எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
இதனையொட்டி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், லூர்து நகர், எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் டெல்லி சென்றபோது உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அறிவுறுத்தினார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய மொழிகளில் போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இதனை ஒருசில போலீஸ் நிலையங்கள் தவிர பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் பின்பற்றாமல் இருந்து வந்தன.
இந்தநிலையில் புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங், புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
- புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றாலே பிற மாநில மக்கள் நினைவுக்கு வருவதில் மதுபானமும் ஒன்று.
புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு என்பதோடு, சுமார் 800 முதல் 900 பிராண்டுகளில் விதவிதமான மது வகைகள் கிடைக்கும். அதோடு, நின்று கொண்டே மது அருந்திவிட்டு செல்வது முதல், குளு குளு ஏசி வசதியுடன் மது அருந்தும் வசதிகளுடன் மதுபார்களும் உள்ளது.
புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது வகைகளை ருசிப்பதற்காகவே வருகின்றனர். இதற்காகவே புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வார இறுதி நாட்களில் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்வதை பார்க்க முடியும். இது மட்டுமின்றி புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை கலால்துறை மூலம் வருமானமும் கிடைக்கிறது.
கடந்த காலங்களில் மதுபான விலையை ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்துவார்கள். மதுபான விலை உயர்ந்தாலும், அண்டை மாநிலங்களின் விலையை விட எப்போதும் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும்.
ஆனால் தற்போது அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலனவர்கள் விரும்பி அருந்தும் பிராண்டுகள் விலை குவார்டருக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விலைப்பட்டியலுடன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு மது விற்பனையாளர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 3 நாட்களில் நாள்தோறும் நடைபெற்ற விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
வார நாட்களில் வழக்கமாக மது அருந்தக் கூடியவர்கள் விலை உயர்வால் தங்களின் பிராண்டுகளை மாற்றியுள்ளனர். விலை குறைவான பிராண்டுகளுக்கு நாள்தோறும் மது அருந்துவர்கள் நகர்ந்துள்ளனர். இதுவும் விற்பனையை பாதித்துள்ளது.
இதுகுறித்து மதுபான விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல முறை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்கபட்டுள்ள விலை உச்சபட்சமாகும். இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த விலை உயர்வு மட்டுமின்றி, மது உரிமை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஒரு மாத காலம் மது விற்பனையை கணக்கிடும் போதுதான் எந்த அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது என தெரியவரும் என்றார்.
- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
- பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.
இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியது. வாகன ஓட்டிகள். பொது மக்கள் அவதிப்பட்டனர். புதுச்சேரியில் நேற்று 98 டிகிரி வெயில் பதிவானது.
இந்த நிலையில் மாலை 6 மணிக்குமேல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7.30 மணிக்கு சூறைக்காற்று வீசியது. சாலையில் புழுதி, குப்பைகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.
இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன் பிறகும் மழை தூறிக் கொண்டே இருந்தது. சூறைக்காற்று வீசியதில் கடலூர் சாலை மரப்பாலம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சிக்கி லேசான காயமடைந்தனர்.
இதுபோல் எஸ்.வி.படேல் சாலையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பசுமை பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
- அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.
கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
- லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வைரலாகியது.
மேலும் இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன்பேரில் இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
- ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
- புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி:
வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.
இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடைக்காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்றுடன் (சனிக்கிழமை) தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.
இந்த யாகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் 17-ந் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






