என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை
- தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
- புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி:
வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.
இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடைக்காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்றுடன் (சனிக்கிழமை) தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.
இந்த யாகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் 17-ந் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.