என் மலர்
புதுச்சேரி

மோசடியாக பெறப்பட்ட 1 லட்சம் ரேசன் கார்டுகளால் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.63 கோடி இழப்பு
- மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
- அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






