என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மதுபான விற்பனை 25 சதவீதம் சரிவு
    X

    புதுச்சேரியில் மதுபான விற்பனை 25 சதவீதம் சரிவு

    • புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்றாலே பிற மாநில மக்கள் நினைவுக்கு வருவதில் மதுபானமும் ஒன்று.

    புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு என்பதோடு, சுமார் 800 முதல் 900 பிராண்டுகளில் விதவிதமான மது வகைகள் கிடைக்கும். அதோடு, நின்று கொண்டே மது அருந்திவிட்டு செல்வது முதல், குளு குளு ஏசி வசதியுடன் மது அருந்தும் வசதிகளுடன் மதுபார்களும் உள்ளது.

    புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது வகைகளை ருசிப்பதற்காகவே வருகின்றனர். இதற்காகவே புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வார இறுதி நாட்களில் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்வதை பார்க்க முடியும். இது மட்டுமின்றி புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை கலால்துறை மூலம் வருமானமும் கிடைக்கிறது.

    கடந்த காலங்களில் மதுபான விலையை ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்துவார்கள். மதுபான விலை உயர்ந்தாலும், அண்டை மாநிலங்களின் விலையை விட எப்போதும் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும்.

    ஆனால் தற்போது அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலனவர்கள் விரும்பி அருந்தும் பிராண்டுகள் விலை குவார்டருக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விலைப்பட்டியலுடன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு மது விற்பனையாளர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

    வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 3 நாட்களில் நாள்தோறும் நடைபெற்ற விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

    வார நாட்களில் வழக்கமாக மது அருந்தக் கூடியவர்கள் விலை உயர்வால் தங்களின் பிராண்டுகளை மாற்றியுள்ளனர். விலை குறைவான பிராண்டுகளுக்கு நாள்தோறும் மது அருந்துவர்கள் நகர்ந்துள்ளனர். இதுவும் விற்பனையை பாதித்துள்ளது.

    இதுகுறித்து மதுபான விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் பல முறை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்கபட்டுள்ள விலை உச்சபட்சமாகும். இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இந்த விலை உயர்வு மட்டுமின்றி, மது உரிமை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஒரு மாத காலம் மது விற்பனையை கணக்கிடும் போதுதான் எந்த அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது என தெரியவரும் என்றார்.

    Next Story
    ×