என் மலர்tooltip icon

    இந்தியா

    • காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
    • வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.

    நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.

    • கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
    • சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் உள்ளொழுக்கு படம் வென்றுள்ளது.

    71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

    இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

    நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.

    ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.

    நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

    தமிழ் சினிமாவில் பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ். பாஸ்கர் (சிறந்த துணைநடிகர்), ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றனர்.

    • மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. பல வீடுகள், குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியதால், பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், தெற்கு வங்காள மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் விமான நிலையை விமான நிறுவனத்தின் செயலி அல்லது வலைதளம் மூலம் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரங்களில் ஒன்று.

    குறிப்பாக பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உதவியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நாடியுள்ளார்.

    இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியே சில குறிப்பிட்ட வாகன இயக்கத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக என்பதை ஆராய விரும்புகிறேன்.

    ஒருவேளை அப்பாதையில் வாகனங்கள் பயணித்தால் பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார். 

    • தன் சம்பாத்தியத்தின் 80%க்கும் அதிகமானதை புத்தகம் வாங்கவே செலவழித்துள்ளார்.
    • மைசூரில் தான் குடியிருந்த வீட்டை விற்று இந்த நூலகத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

    கர்நாடகாவில் 20 வயதில் பேருந்து கண்டக்ட்டராக வாழ்க்கையை தொடங்கிய அன்கே கௌடா என்ற நபர் தற்போது 20 லட்சம் புத்தகங்களுடன் கூடிய இலவச நூலகத்தை அமைத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

    அன்கே கௌடா தன் சம்பாத்தியத்தின் 80%க்கும் அதிகமானதை புத்தகம் வாங்கவே செலவழித்துள்ளார். தற்போது மைசூரில் தான் குடியிருந்த வீட்டை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த நூலகத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த நூலகத்தில் கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அன்கே கௌடாவின் நூலகத்திற்கு மாணவர்கள், ஆய்வாளர்கள் முதல் நீதிபதிகள் வரை வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர். 

    • சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.

    அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம். விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

    நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
    • மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நடிகை சாந்தினி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து, அவர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    சென்னை ஐகோர்ட்டில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருந்தாலும் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமினை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகள் நடிகையின் வழக்கை ஏன் பட்டியலிடாமல் இருந்தீர்கள் என சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்த குறித்த அறிவிப்பு வெளியானது முதல் மொபைல், ஏசி, கார், டிவி உள்ளிட்டவைகளில் விலைகளும் குறையும் என்பதால் அதனை வாங்க நினைத்தவர்கள் செப்டம்பர் 22-ந்தேதிக்காக காத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. சீரமைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விலை மற்றும் ஜி.எஸ்.டி குறித்த குழப்பம் தெளிவான பின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

    • பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.
    • ஆய்வுக்குழு சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புகழ்பெற்ற பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு 207 பட்டாம் பூச்சிகள், 71 தட்டாம் பூச்சிகள் மற்றும் கேரளத்தின் அதிகாரப்பூர்வ பறவையான கிரேட் ஹார்ன்பில் உள்பட ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. இங்குள்ள பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி தற்போது பெரியார் புலிகள் சரணாலயம், கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து திருவனந்தபுரத்தை தளமாக கொண்ட ஒரு அமைப்பான திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரிவான கணக்கெடுப்பு பணியை நடத்தின.

    இந்த ஆய்வுக்குழு 40-க்கும் மேற்பட்ட எறும்புகள், 15 ஊர்வன, புலி, சிறுத்தை காட்டு நாய், காட்டெருமை மற்றும் யானை, பழுப்பு நிற கீரி, கோடிட்ட நிர்வாண கீரி, சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது. இதனை வெளியிட்டுள்ள பெரியார் கள இயக்குநர் பிரமோத், துணை இயக்குநர் சஜூ, உதவி கள இயக்குநர் லட்சுமி ஆகியோர் இந்த ஆய்வின் போது 12 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    அதன்படி புதிய பட்டாம் பூச்சிகள் சயாத்ரி புல் மஞ்சள் (வேம்படா பாப்பாத்தி), வெற்று ஆரஞ்சு முனை (உள்ளூர் பெயர்: மஞ்சத்துஞ்சன்), சஹ்யாத்ரி மஞ்சள் பலா மாலுமி (மஞ்ச பொந்த சுட்டான்) , இலங்கை பிளம் ஜூடி (சிலிகான் அட்டக்கா ரன்), வெற்று பட்டாம்பூச்சி, சிறிய ஹெட்ஜ்பெர்யான்னே ஓல், பாம் பாப் மற்றும் இந்திய டார்ட்.

    புதிய தட்டாம்பூச்சிகள், சஹ்யாத்ரி நீரோட்டப் பருந்து மற்றும் கூர்க் நீரோட்டப் பருந்து. பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகள் கருப்புப் பறவை மற்றும் வெள்ளைத் தொண்டை தரைத் த்ரஷ் ஆகும்.

    • பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
    • அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறை எடுத்து தங்கினர். 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு இருப்பதை பார்த்துவிட்டார்.

    உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேச்சு கொடுப்பது வீடியோவில் கேட்கிறது. கருப்பு நிற நாகப்பாம்பான அது, மனிதர்களை கண்டு அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.

    பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை மீட்டனர். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.

    பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பலரும் அதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நகைச்சுவை கலந்த கருத்துக்களை பதிவிட்டனர்.



    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
    • பவன் கல்யாணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நடித்துள்ள 'They Call Him OG' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.

    விழா மேடைக்கு வந்த பவன் கல்யாண் வாளை சுழற்றியபோது, அது அவரது பாதுகாவலரின் அருகில் சென்றது. இதில் அந்த பாதுகாவலர் சுதாரித்துக்கொண்டதால் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பவன் கல்யாணின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர். 



    ×